புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2013


          ந்தசாமிக்கு அது தொழில்தான். மக்களுக்கு ஒரு சேவையாக அது இருக்கிறது என்பதைக்கூட அவர் பெரிதாக நினைத்ததில்லை. ஃபினாயில் விற்பதை பெரிதாகவோ பெருமையாகவோ நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தார் கந்தசாமி. நீங்களும்கூட இதில் என்ன பெருமை இருக்கிறது என நினைக்கலாம். அவர் ஃபினாயில்
விற்றது அரசாங்க மருத்துவமனை களுக்கு! வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஜி.ஹெச் பக்கம் சென்றவராக நீங்கள் இருந்தால் ஃபினாயிலின் மகத்துவத்தை அறியமுடியும். 

மருந்து, ரத்தம், மற்றகழிவுகள் எல்லாம் சேர்ந்து மெகாகூட்டணி அமைத்திருக்கும் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சூழலிலிருந்து பொது மக்களின் மூக்கு அறுந்துவிழாதபடியும் குடல் வெளியே வந்துவிடாதபடியும் முடிந்தளவு பாதுகாப்பது ஃபினாயில்தான். உங்களுக்கு ஃபினாயில் மணமே நாற்றமாகத் தெரியலாம். ஆனால், ஜி.ஹெச் சின் தேசியமயமாக் கப்பட்ட நாற்றத் திற்கு பாதுகாப்பு கவசம், ஃபினாயில். அதை கந்தசாமி விற்பதற்குள் அவரது குடல், ஈரல், கிட்னி உள்பட சகலமும் வெளியேவந்துவிட்டது. காரணம், ஜி.ஹெச்.சின் மருந்துநாற்றத்தைவிட கடுமையானது மருத்துவத்துறையின் ஊழல் நாற்றம். 

அது 2002ஆம் ஆண்டு.

"உங்க ஃபினாயிலில் தரம் இல்லை.. இன்னும் கொஞ்சம் நல்லா ஸ்மெல் வேணும். ஒரு லிட்டருக்கு இந்த விலை ரொம்ப ஜாஸ்திங்க கந்தசாமி'’என்று ஏதேதோ காரணம் சொல்லி அவரது தயாரிப்பை நிராகரித்தபடியே இருந்தார்கள் அதிகாரிகள். அவருக்குப் பதிலாக இன்னொரு கம்பெனியிடமிருந்து ஃபினாயில் வாங்கப்பட்டது. அதில் கந்தசாமி தயாரிப் பின் தரம்கூட இல்லை. மணமோ மருந்து நாற்றத் தோடு போட்டிபோடுவதாக இருந்தது. விலையும் கூடுதல்தான். ஆனாலும் அதைத்தான் அதிகாரிகள் ஓ.கே. செய்தார்கள். தன் தரப்பு நியாயத்துக்காக அதிகாரிகளிடம் நடையாய் நடந்தார் கந்தசாமி. நியாயம் வேறொரு திசையில் அவரைவிட வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தது. அதை இந்தத் திசைக் குக் கொண்டு வரவேண்டுமென்றால், நிறைய செலவாகும் என்று கந்தசாமியிடம் சொன்னார் கள் அதிகாரிகள். அவர் கையில் அந்தளவுக்கு காசு இல்லை, இருந்தாலும் அதைக் கொடுத்து நியாயத்தை வாங்க அவர் விரும்பவில்லை. ஃபினாயிலால் ஊழல் நாற்றத்தைக் கழுவித் தள்ள முடியாது என்பதால் கந்தசாமி நொந்தசாமியாகியிருந்தார்.

இது 2013ஆம் ஆண்டு.


கதிர் நிச்சயமாக கந்தசாமி போல இல்லை. அவர், கந்தசாமியின் மகன். லேப்டாப், ஐ-போன் இவற்றை உடலுறுப்புகள்போல கொண்டிருப்பவர். கூகுள், இ.மெயில், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சகலத்திலும் மேய்ந்து கொண்டே இருப்பார். தகவலறியும் உரிமைச்சட் டத்தில் அத்துப்படி. அப்பாவின் தொழிலைத் தான் அவர் தொடர்ந்தார் ஆனால், அணுகு முறை வித்தியாசமாக இருந்தது. அரசு மருத் துவமனைகளுக்கு எந்தெந்த கம்பெனிகளிட மிருந்து ஃபினாயிலை வாங்குகிறார்கள், எவ்வளவு வாங்குகிறார்கள், எந்த முறையில் வாங்குகிறார்கள், என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்பதையெல்லாம் பெறுவதற்கு கதிருக்கு தகவலறியும் உரிமைச் சட்டம் உதவியாக இருந்தது. அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மையும் தெரிந்தது.



அரசுத் தரப்பில் ஒரு பொருளை வாங்கும்போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் போனால் டெண்டர் விடவேண்டும். அதைத் தவிர்ப்பதற்காக அந்தத் தொகையைப் பகுதி பகுதியாக்கி அதிகாரிகள், டெண்டர் எதுவும் விடாமல் தங்கள் விருப்பத்திற்குரியவர்களிடம் பொருளை வாங்கி வருகிறார்கள். விலை அதிகம், தரம் குறைவு என்பதுதான் இதன் சூட்சுமம். இதன்மூலம் பெறப்படும் ஆதாயத்தை கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை செல்வதைக் கதிர் கண்டுகொண்டார். ஃபினாயிலைக் கொண்டு இதைக் கழுவியே ஆகவேண்டும் என்பது கதிரின் சபதம். கந்தசாமிக்கோ, இதெல்லாம் சரிப்பட்டு வராது என்ற மனநிலை.

இப்போது 2016ஆம் ஆண்டு


மாநிலம் முழுவதும் நாறிக்கொண்டிருக்கிறது ஃபினாயில் ஊழல் வழக்கு. லோக்பால் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில், சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். "முடிஞ்ச வரைக்கும் அடிச்சுத் தள்ளிட்டு ரிடையர்மெண்ட்டுக்குப் பிறகு செட்டிலாயிடலாம்னுதானே கணக்கு போட்டி ருந்தீங்க?' -குற்றம்சாட்டப் பட்டவர்களைப் பார்த்து கேட்ட லோக் ஆயுக்தா நீதிபதி தொடர்ந்து பேசினார்.

""இது அந்தக் காலம் இல்லை. மக்கள் கைக்கு அதி காரம் திரும்பிக்கொண்டிருக் கிற காலம். பிரதமராக இருந்தாலும் முதலமைச்ச ராக இருந்தாலும் தப்பு செஞ்சா நீதியின் முன்னாடி நின்னுதான் ஆகணும். நீங்களெல்லாம் அரசாங்க ஊழியர்கள். அதாவது மக்க ளோட வேலைக்காரர்கள். உங்க நடவடிக்கையை விசாரிக்கத்தான் பிரதமர், பார்லிமெண்ட் சபாநாயகர், சுப்ரீம்கோர்ட் நீதிபதி, சட்ட வல்லுநர்கள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்த லோக்பால் மெம்பர்களை நியமிச்சிருக்காங்க. இந்த அமைப் புல ஒரு தலைவரும் 8 உறுப்பினர்களும் இருப்பது உங்களுக்கு தெரியும். இதிலே நீதிமான்கள் இருக்காங்க. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைத்துப் பிரிவின் பிரதிநிதிகளும் இருக்காங்க.  உங்களை மாதிரி தில்லுமுல்லு அதிகாரிகளையும் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற அரசியல்வாதி களையும் இந்த அமைப்பு விசாரிக்கும். அதற்காகத்தான் மாநிலத்திற்கு மாநிலம் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.''

நீதிபதியிடம், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள், தங்கள் தரப்பு ஆவணங்களைக் காட்டி, "எங்களை விசாரிப்பதற்கான முறையான முன்அனுமதி வாங்கலை' என்றனர். அவர்கள் சொன்னதை கேட்டபடியே ஆவணங்களைப் பார்த்தார் நீதிபதி. பிறகு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தார்.

""முன் அனுமதி வாங்குற காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. நேரடி விசாரணைதான். நீங்க என்னென்ன ஃபோர்ஜரி செஞ்சிருக்கீங்கன்னு முழுசா விசாரிச்சாச்சு. நீங்க வாங்கிக் குவிச்ச சொத்துகளையும், உங்க பினாமிகள் பேருல வாங்குன சொத்துகளையும் ஆவணங்களோட கைப்பற்றி அதையெல்லாம் முடக்கியாச்சு. உங்களை விசாரிக்க வந்த சி.பி.ஐ. அதிகாரிகளை மாத்துறதுக்கு டெல்லி வரைக்கும் ட்ரை பண்ணியிருக்கீங்க. அதெல்லாம் இப்ப முடியாது. சி.பி.ஐ. டைரக்டர் நியமனத்திலிருந்து எல்லாத் திலும் லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு. வழக்கை புலனாய்வு செய்ற சி.பி.ஐ. அதிகாரிகளை நியமனம் செய்வதும் கண்காணிப்பதும் எங்களோட அதிகாரத்தில் இருக்குது. டெல்லிக்குப் போகலாம்.. லாபி பண்ணலாம். அதிகாரியை மாத்திடலாம்னு நினைச்சீங்கன்னா அதெல்லாம் சுத்த வேஸ்ட். இனி நீங்க சட்டத்தையும் ஏமாத்த முடியாது. மக்களையும் ஏமாத்த முடியாது. ஃபினாயில் வாங்குறதிலேயே கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் நாறிக்கிடக்குதுன்னா, அரசு இயந்திரத்தோட மற்ற செயல்பாடுகள் எப்படியிருக்கும்னு எங்களுக்குப் புரியுது. எல்லாமும் இங்கே விசாரணைக்கு வரும். அதிகாரி, அரசியல்வாதி, அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் இவங்களில் யார் தப்பு செஞ்சாலும் தப்ப முடியாது. இந்த கேஸை வேகமாக விசாரித்து விரை வில் தீர்ப்பு வழங்கப்படும்''’என்று நீதிபதி சொன்ன போது அதிகாரிகளின் முகம் வெளுத்திருந்தது.

லோக் ஆயுக்தா நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த கந்தசாமி  தன் மகன் கதிரை கட்டிப் பிடித்துக்கொண்டார். தங்கள் ஃபினாயில் ஒரு முடை நாற்றத்தைப் போக்கும் சக்தி வாய்ந்ததாக இருப்பதை அவர்களே இப்போதுதான் உணர் கிறார்கள்.

ad

ad