புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும்  என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை ஹான்ஸ் போவர் தெரிவித்தார்.
உலகின் வலிமை மிக்க தேசங்களின் நிகழ்ச்சி நிரல் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வாழுகின்ற நாங்கள் எங்களுக்காக நாங்களே போராடுவதன்மூலமே அவர்களின் நிகழ்ச்சி நிரலினை எமதாக்கமுடியும். எங்களுக்காக யாரும் போராட மாட்டார்கள் என்பதை நாம் அனுபவங்கள் மூலமாக உணர்ந்திருக்கிறோம்.
எனவே நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக மனித உரிமைகளை பேண போராடுகின்ற போது வலிமைமிகு நாடுகளின் செயல்கள் எமக்கானவையாக மாறும். அத்தகைய காலம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று காலை கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மக்கள் அமைப்பின் தலைவர் சிங்கராசா ஜீவநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
 வடக்கு கிழக்கு மாகாண மனித உரிமைகள் செயற்பாட்டு இயக்குநராகப் பணியாற்றிய வேளை கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் (கிளிபாதர்) அவர்களின் திருவுருப்படத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மலர்மாலை அணிவித்து ஈகச்சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அருட்தந்தை மரியாம்பிள்ளை ஹான்ஸ் போவர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.
அறிமுகஉரையினை ஆசிரியர் சத்தியானந்தம் அவர்கள் நிகழ்த்த தமிழர்களும் மனித உரிமைகளும் எனும் தலைப்பில் சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தனும், பயங்கரவாத தடைச் சட்டமும் மனித உரிமைகள் என்பது குறித்து சட்டத்தரணி க.தயாபரன் அவர்களும், சட்ட ஏற்பாடுகளும் அதன் மட்டுப்பாடுகளும் குறித்து சட்ட மற்றும் சமூக நீதிக்கான நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கு.ஐங்கரனும் சிறப்புரைகளை ஆற்றினார்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்ல இயக்குநர் அருட்தந்தை ஹான்ஸ் போவர் அவர்களும், சிறப்பு விருந்தினராக புனித திரேசா பெண்கள் கல்லூரி முதல்வர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை அதிபரும் சமூக சேவையாளரும் திரு.இ.இராஜேந்திரம் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிறைவாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோரின் உறவினர்களின் சங்கத்தினரும் மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து மகஜர் ஒன்றை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.ஸ்ரீநீவாசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதிகளவு சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் நிகழ்வுகளைச் சூழ நின்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமையைப் படங்களில் காணலாம்.

ad

ad