புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்?

சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதன்முதலாக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை ஞாயிறன்று அறிவித்துள்ளது. 

சிறிலங்காவின் வடக்கிலுள்ள கரையோர மாவட்டமான மன்னாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் புதிய நீர்க் குழாய் ஒன்றைப் பொருத்துவதற்காக நிலத்தைத் தோண்டும்போதே குறைந்தது 10 வரையான மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்துள்ளார்.

"மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த இடத்தை சட்ட மருத்துவ அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் தொடர்பாக மேலதிக தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என றோகன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் எப்போது இறந்திருப்பார்கள், எவ்வாறு இறந்திருப்பார்கள் அல்லது இவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

எவ்வாறெனினும், மே 2009ல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, சிறிலங்கா அரசாங்கப் படைகள் போரில் வெற்றி கொண்டதன் பின்னரான நான்கு ஆண்டுகளில் தற்போது முதன்முதலாக மன்னாரில் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் 37 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது சிறிலங்காப் படைகளும் தமிழ்ப் புலிகளும் பொதுமக்களின் இழப்புகளுக்கு காரணமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். போரின் இறுதிக்கட்டத்தில் தனது படைகள் 40,000 வரையான பொதுமக்களைப் படுகொலை செய்திருந்தது என்கின்ற குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கமறுத்துள்ளது.

இவ்வாண்டு ஆரம்பத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் முன்னாள் போர் வலயத்திலிருந்து பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் மத்திய சிறிலங்காவில் பிறிதொரு மனிதப் புதைகுழி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

சிறிலங்காவின் மத்திய மாவட்டமான மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில், 1987-1990 வரை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளின் விளைவாக படுகொலை செய்யப்பட்ட குறைந்தது 154 வரையான மக்கள் புதைக்கப்பட்டிருந்தமை அடையாளங் காணப்பட்டது.

அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் இடதுசாரி சிங்களக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னான காலப்பகுதியிலேயே இந்தப் புதைகுழி உருவாக்கப்பட்டதாக உள்நாட்டு தடயவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரில் குறைந்தது 100,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே. 

ad

ad