புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013

பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகூட விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இலங்கைக்கு எதிராகக் கடுமையானதொரு நடவடிக்கையில் இறங்க வாய்ப்புகள் உள்ளன என்பதே இப்போதுள்ள கணிப்பாகும்.
இதனை அரசாங்கத் தரப்பும் மறுக்கத் தயாராக இல்லை.
இதனால் தமக்கு ஆதரவான அணியைத் தயார்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கமும் ஏற்கனவே இறங்கியுள்ளது.
குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில், இலங்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நாடுகளை அடையாளம் கண்டு, அவற்றின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை அரசாங்கத்துக்கு அதிகளவு நெருக்கடி ஏற்படலாம்.
ஏனென்றால், ஏற்கனவே இரண்டு காலக்கெடுக்கள் கொடுக்கப்பட்ட போதிலும், அவற்றை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், மேற்குலக நாடுகள் குறிப்பாக, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் கடுப்பில் இருக்கின்றன.
இதனால், அடுத்தகட்டமான சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதே ஒரே வழி என்ற நிலைக்கு இந்த நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
அதற்கான முன்முயற்சிகளை வரும் மார்ச் மாத கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்னெடுப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.
ஆனால், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக நியமிப்பதில் சட்டரீதியான தடைகள் இருப்பதாகத் தெரிகிறது.
சர்வதேச விசாரணைப் பொறி முறையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் அமைக்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் நெடுநாளாகவே கூறி வருகிறது,
ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமே சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்றும், ஆனால், வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யாவும், சீனாவும் தமக்கு ஆதரவாக இருப்பதால், ஒருபோதும் அத்தகைய விசாரணைக் குழு அமைக்க முடியாது என்பதும் இலங்கை அரசாங்கத்தின் கருத்து.
இத்தகையதொரு துணிவும் கூட, இலங்கை அரசாங்கத்தின் அலட்சியப் போக்கிற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான, நடுநிலையானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே, மேற்குலகினது விருப்பமாக உள்ளது.
சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதிலுள்ள சிக்கல்கள் குறித்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கவனத்தில் கொள்ளாமல் செயற்பட வாய்ப்புகள் இல்லை.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கூட, வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் ஒரு நம்பகமான, நடுநிலையான விசாரணையை மேற்கொள்ளத் தவறினால், சர்வதேச விசாரணைப் பொறி முறையை வலியுறுத்துவோம் என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு கட்டத்திலும், சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவோம் என்று பிரித்தானியாவோ அல்லது வேறு நாடுகளோ குறிப்பிடவில்லை.
ஒரு விடயத்தை வலியுறுத்துவதற்கு எந்த நாட்டுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது.
ஆனால், அதை செயற்படுத்துவதற்கு சட்டவரம்புகளுக்கு உட்பட்டாக வேண்டும்.
சர்வதேச விசாரணைப் பொறி முறையை வலியுறுத்தப் போவதாக, பிரித்தானியா கூறியுள்ளதை வைத்துக் கொண்டு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் உருவாக்கப்பட்டு விடும் என்று மிகையாகக் கனவு காண முடியாது.
இது ஒருவகையில் இலங்கைக்கான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்வதற்கான உத்தியாகவும் கருதப்படலாம்.
அதற்கான முயற்சிகளிலேயே பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
வெளிநாட்டுத் தலையீடுகளின் மூலம், பொறுப்புக்கூறலை மேற்கொள்வதில் உள்ள தடங்கல்களால் தான், இலங்கையே சுதந்திரமான உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று மேற்குலகம் வலியுறுத்தி வருகிறது.
சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது, இலங்கைக்கு எத்தகைய கடுமையான விளைவுகளை ஏற்படுத்துமோ, அதேபோன்று சர்வதேச சமூகத்துக்கும் அது ஒரு பெரும் சிக்கலான முயற்சியாகவே இருக்கும்.
இந்த நிலையில் தான், இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் இனிமேல் அதிக கவனம் செலுத்தக் கூடும்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பிலும் லண்டனிலும் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, இணைய ஊடகங்கள் பலவற்றில், இலங்கைக்கு எதிராக பிரித்தானியா பொருளாதாரத் தடையை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், பிரித்தானிய அரசாங்க மட்டத்தில் இருந்து அதற்கான வாய்ப்புகள் தொடர்பான எந்தக் கருத்தும் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.
பொருளாதாரத் தடை என்பது, இன்றைய உலகின் சக்திவாய்ந்த ஓர் ஆயுதமாகக் கருதப்படுகிறது.
முன்னர் ஒரு காலத்தில் மிகப் பெரிய படைகளை வைத்து நாடுகளை மிரட்டும் போக்கு காணப்பட்டது.
பின்னர், டாங்கிகளும், பீரங்கிகளும் அதைத் தீர்மானிக்கும் காரணிகளாகின.
அதையடுத்து, வலிமையான கடற்படை, விமானப்படைகளை வைத்து மிரட்டும் போக்கு இருந்தது.
பின்னர், அணுவாயுதங்களை வைத்து மிரட்டும் காலம் இருந்து வந்தது.
இப்போதெல்லாம், வல்லரசு நாடுகள், ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டுவதில்லை.
பொருளாதாரத் தடையை காட்டியே மிரட்டுகின்றன.
ஏனென்றால், சர்வதேச பொருளாதாரத் தடை என்பது ஒரு நாட்டை சீரழித்து விடும் என்பதுடன், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அடியோடு பெயர்த்துப் போட்டு விடும்.
அதன் விளைவு, உள்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
அண்மைக்காலத்தில் அமெரிக்காவின் தடைகளை அடுத்து, மியான்மரும், ஈரானும் தமது பிடிவாதப் போக்கை தளர்த்திக் கொள்ள முன் வந்தன.
இவை இரண்டும் அமெரிக்காவைக் கடுமையாக எதிர்த்து வந்த நாடுகள்.
ஆனால், பொருளாதாரத் தடை இந்த நாடுகளையும் வளைந்து கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது.
மிகப் பெரிய எண்ணெய்ப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்த போதிலும், அமெரிக்காவின் தடைகளை எதிர்த்து ஈரானால் எதையுமே செய்ய முடியவில்லை.
இந்தளவுக்குப் பொருளாதாரத் தடை என்பது இன்று வலிமை மிக்க ஆயுதமாகக் கருதப்படுகிறது.
இத்தகைய கட்டத்தில் தான், இலங்கை மீது பொருளாதாரத் தடை கூட விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தார் சஜித் பிரேமதாஸ.
அதேவேளை, இணைய ஊடகங்களில் உலா வந்தது போன்று பிரித்தானியா தனித்து, இலங்கைக்குப் எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க வாய்ப்புகள் குறைவே.
ஆனால், அத்தகையதொரு பிரேரணையை சர்வதேச அரங்கில் பிரித்தானியா முன்வைக்கக் கூடும்.
இலங்கையின் ஏற்றுமதிப் பங்காளர்களில் பிரித்தானியா கிட்டத்தட்ட 12 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு.
என்றாலும், பிரித்தானியா மட்டும், பொருளாதாரத் தடையை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே இலங்கையை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், ஒருவேளை அதற்குப் பின்னரும் இலங்கை பணிந்து போக மறுத்தால், பிரித்தானியாவின் பெயர் கெட்டுப் போகும்.
எனவே, இத்தகையதொரு பொருளாதாரத் தடைக்கான முயற்சியை, ஏனைய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்தே பிரித்தானியா முடிவெடுக்கும்.
கடந்த வாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பேசிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், இலங்கை விவகாரம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடப்படும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத் தடை என்பது இன்றைய நிலையில், சர்வதேச சமூகத்தினால் பயன்படுத்தப்படும் இறுதி ஆயுதமாகவே கருதப்படுகிறது.
ஏனென்றால், அதன் பாதிப்புகளை எந்த நாட்டினதும் ஆட்சியாளர்கள் அனுபவிப்பதில்லை.
அந்த நாட்டு மக்களே அதனை அனுபவிக்கின்றனர்.
இதனால், அந்த ஆயுதத்தை கையில் எடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்குப் பலமுறை ஆலோசனைகள் நடத்தப்படும்.
இலங்கை விவகாரத்தில் கூட, பொருளாதாரத் தடை என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுமா என்பது கூட உறுதியில்லை.
ஆனால், அதுபற்றிப் பேசப்படும் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
ஒன்றுக்கு இரண்டு ஜெனீவா தீர்மானங்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தை வழிக்குக்கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகளுக்கு வலுவானதொரு ஆயுதம் தேவைப்படுகிறது.
இதனால், அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தை இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க பிரித்தானியா வலியுறுத்தக் கூடும்.
அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கூட்டுப் பொருளாதாரத் தடை ஒன்று விதிக்கப்படுமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தை நிச்சயம் ஆட்டம் காணச் செய்யும்.
ஏனென்றால், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையின் முக்கியமான ஏற்றுமதிப் பங்காளர்கள்.
இலங்கையின் முதன்மைப் பத்து இடங்களிலுள்ள ஏற்றுமதிப் பங்காளி நாடுகளில், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.
2012ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, இலங்கையின் ஏற்றுமதியில், அமெரிக்கா 22.6 வீதம், பிரித்தானியா 9.8 வீதம், பெல்ஜியம் 5.2 வீதம், ஜேர்மனி 4.8 வீதம், இத்தாலி 4.3 வீதம், பிரான்ஸ் 2.62 வீதம் பங்களிப்புச் செய்கின்றன.
அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடை ஒன்று ஏற்படுமானால், இலங்கை இந்த ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
இதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் அரைப் பங்கு அடியோடு பெயர்ந்து போகும்.
அத்தகையதொரு நிலை ஏற்படுமானால், இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும்.
அது அடிபணிவுக்கோ, ஆட்சி மாற்றத்துக்கோ காரணமாக அமையலாம்.
ஏனென்றால், இத்தகைய பொருளாதாரத் தடை பொதுமக்களை பெரிதும் பாதிக்கும்.
எனவே, இந்தப் பொருளாதாரத் தடையை விதிக்க முன்னர், மேற்குலகம் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கும்.
இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு, அதனை வழிக்குக் கொண்டு வருவதற்கு வேறு சாதகமான வழிமுறைகள் இல்லாத சூழலில் இதுபற்றி யோசிப்பதை தவிர, மேற்குலகிற்கு வேறு கதியும் இல்லை.

ஹரிகரன்

ad

ad