புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2013

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்து விட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு!
இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்.
சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த இந்த விழாவுக்கு வழக்கம் போல ப.சிதம்பரம் கோஷ்டியைத் தவிர மற்றவர்கள் வரவில்லை.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி மட்டுமே உட்கார வைக்கப்பட்டார்.
வரவேற்றுப் பேசிய அழகிரி, இறுதிக்கட்டப் போரின் போது, நடேசன் என்பவர் சொல்லி, குமரன் பத்மநாபன் மூலம் இந்தியாவுக்கு செய்தி அனுப்பினார்கள். போரை நிறுத்த கோரிக்கை வைத்தார்கள். இந்திய அரசு அதற்கான முயற்சி எடுத்தது. ஆனால், நெடுமாறனும் வைகோவும்தான் தடுத்துவிட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் ஆட்சியே மாறப் போகிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிடும். தனி ஈழம் கிடைத்துவிடும் என்றார்கள். இதைப் பற்றியெல்லாம் நன்கு தெரிந்தவர் சிதம்பரம் மட்டும்தான் என்று கூறி சிதம்பரத்துக்கு வழிவிட்டார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் மட்டும் நிறைவேறியிருந்தால், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தொடர்ந்து ஆட்சி செய்துகொண்டு இருந்திருப்பார்கள். கடந்த 15 ஆண்டு சோகங்கள் நடந்து இருக்காது. இறுதிக்கட்டப் போரை நிறுத்தப் பெரும்முயற்சி எடுத்தோம். அது வெற்றி பெறவில்லை.
போர் முடிந்த பிறகு என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும் என்றுதான் பேச வந்துள்ளேன். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்று காங்கிரஸ் மீது பழிச்சொல் வீசப்படுகிறது. அவர்களுக்கு என்னென்ன செய்து வருகிறோம் என்பதை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் பொறுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற பீடிகையுடன் சிதம்பரம் பேச ஆரம்பித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு எப்படி அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத்தருவது என்பதுதான் முதல் பிரச்சினை. இலங்கை இறையாண்மை பெற்ற ஒரு நாடு. அங்கு தங்களுக்குத் தலைவராக சரியான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா, இல்லையா என்பது அந்நாட்டு மக்களின் சொந்த விஷயம். அதில் நாம் தலையிட முடியாது.
அத்தகைய நாட்டில், சிறுபான்மை மக்களுக்கு இறையாண்மை பெற்ற இன்னொரு நாட்டில் உரிமை பெற்றுத்தருவது என்பது எளிதானதல்ல. நம் நாட்டில் காஷ்மீரிகள், நாகா மக்கள்... தனி நாடு கேட்கிறார்கள். அதை நாம் சரி என்றா சொல்கிறோம்?
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரத்தான், இந்தியா-இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதை நிறைவேற்றுவதாக ஜெயவர்த்தன முதல் இப்போதைய ஜனாதிபதி ராஜபக்ச வரை ஒப்புக்கொண்டனர்.
நான் ராஜபக்சவை ஒருமுறை சந்தித்தபோது அவர், 13-வது திருத்தம் என்ன... அதற்கு மேலே 13 பிளஸ் செய்து தருகிறேன் என்றார். ஆனால், இந்த வாக்குறுதிகளை எல்லாம் இலங்கை அரசு மீறியது.
எனவே, முரட்டுத்தனமாக மோதாமல் இராஜதந்திரத்துடன் அணுகி 13-வது சட்டத் திருத்தத்தை காப்பாற்றுவோம் என்று ராஜீவ் காந்தி பெயரில் சூளுரைக்கிறேன் என்ற சிதம்பரம் இறுதிக்கட்டப் போர் பற்றிப் பேசினார்.
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை நான் மறுக்கவில்லை.
 2009-ம் ஆண்டு நம்முடைய முயற்சிக்கு உளப்பூர்வமாக அவர்கள் செவிசாய்க்கவில்லை. அப்படி நடந்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கக் கூடும்.
இறுதிக்கட்ட போரில் நடந்த இனப்படுகொலை பற்றி விரிவான, உண்மையான விசாரணை நடத்த வேண்டும். அது உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை அடையாளம் காட்டப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதுபற்றியெல்லாம் நம்முடைய குரல் தொடர்ந்து ஒலிப்பதால்தான், இப்போது உலக நாடுகள் பேசுகின்றன.
கனடாவும் பிரிட்டனும் எப்படியும் பேசலாம். அவர்கள் இலங்கைக்கு அண்டை நாடு அல்ல. அப்படி நாம் முற்றிலுமாக புறக்கணிக்க முடியுமா? ஒட்டுமொத்தமாக துண்டித்து விட்டால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் தொடர்ந்து எப்படி உதவுவது?
துரும்புகூட செல்லாவிட்டால், நாளைக்கு இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு வர விசா கிடையாது என்று ராஜபக்ச கூறுவார். நாம் என்ன செய்ய முடியும்?'' என்று கருணாநிதிக்கு மறைமுகமாக பதில் அளித்த சிதம்பரம்,
உள்ளூர் அரசியல் போன்றதுதான் உலக அரசியலும். அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல இந்தியாவும் அரசியல் இராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பு அப்படியே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது. அவர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று முடித்தார்.

ad

ad