புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013

இலங்கை மீது நிபந்தனைகளை விதிப்பதற்கு முன் அரசின் பணிகளை பார்த்து முடிவெடுக்க வேண்டும்

ஐ.நா.மனித உரிமைப் பேரவையிடம் அமைச்சர் வேண்டுகோள்
அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசிடம் ஒப்படைத்த பொறுப்புக்களை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
அதனடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நம்நாட்டு பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று வெளிவிவகார
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பென்ஸா லட்டினா என்ற லத்தீன் அமெரிக்க செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திடம் இந்த பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நிறுவனங்கள், வளங்கள் இருக்கின்றன.
அத்துடன் நாம் இவற்றை நிறைவேற்றும் அதேவேளையில் நாட்டை கட்டியெழுப்பி தொடர்ந்தும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு கெளரவமான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்து பொதுமக்களின் மத, இன மற்றும் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவும் தயாராக இருப்பதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தோற்கடித்து இப்போது நான்காண்டுகள் கடந்துவிட்டன.
இன்று நாட்டில் திரும்பிய இடமெல்லாம் முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறதென்று தெரிவித்த பேராசிரியர், 30 ஆண்டுகால யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவை மக்கள் மறக்கக்கூடிய வகையில் இவ்வாணைக்குழு தெரிவித்த 300 பரிந்துரைகளை நிறைவேற்றும் பணியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறதென்று கூறினார். வடபகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி பூர்த்தி அடைந்துவிட்டதென்றும் 11ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சம அந்தஸ்துடைய மக்களாக சமூகத்தில் அரசாங்கம் சேர்த்துள்ளதென்றும் கூறினார்.
வடபகுதியின் கடற்றொழில், விவசாயத்துறைகள் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறதென்றும் வடபகுதியில் தற்போது 22 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதென்றும் இத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தேசிய மட்டத்திலான பொருளாதார அபிவிருத்தி 7 சதவீதமாகவே இருக்கிறதென்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
யுத்தத்தினால் சிதைந்து போன வீடுகளை புனர்நிர்மாணம் செய்தல், நெடுஞ்சாலைகளை அமைத்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் அமைத்தல் ஆகியவற்றுடன் மேலும் பல சமூக அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 4ஆயிரம் பேருக்கு நாம் புனர்வாழ்வளித்து அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தி இருக்கிறோம். யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
2012 மார்ச் மாதம் முதல் 2013 மார்ச் மாதத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்று இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் பல மேற்கத்திய நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் இந்த புனர்வாழ்வு செயற்பாடுகள் எவ்விதம் நடைபெற்றிருக்கிறதென்பதை ஓர் அறிக்கையின் உருவில் சுயாதீன சர்வதேச விசாரணையாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எவ்விதம் இன ரீதியில் சிறுபான்மையானோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் நிரூபித்து காட்ட வேண்டியுள்ளது.
இவ்விதம் நிபந்தனைகளை போடுவது தவறு என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரசாங்கம் செய்த பணிகளை பார்த்து முடிவெடுக்க வேண்டுமென்றும் கூறினார். சில அரசாங்கங்கள் இலங்கை எடுக்கும் சுயாதீன முயற்சிக்கு எதிராக செயற்படுகின்றன என்றும் பண பலத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் இலங்கைக்கு அவப்பெயரை பெற்றுக் கொடுப்பதற்கு தவறான பிரசாரங்களை செய்து வருவதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ad

ad