புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2013

வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி?

வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். 

வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை புதிதாக உருவாக்கும் யோசனையை வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத்திட்டத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்திருந்தார்.

இது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஊடகங்களில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இதையடுத்து, ஆளுனருக்கும், மாகாணசபைக்கும் இடையிலான பனிப்போர் தீவிரம் பெற்றது.

இந்தநிலையில், வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத்திட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி கடந்தவார இறுதியில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணசபையினால் கோரப்பட்டுள்ள, போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு நிதி அமைச்சின் கீழ் செயற்படும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு, வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறி எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இரு திணைக்களங்களை உருவாக்குவதற்காகவும், இதற்கான ஆளணி அனுமதியைப் பெற்று நியமிப்பதற்கும் உதவி வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, மாகாணசபையினால் கோரப்படும் இரு திணைக்களங்களை உருவாக்குவது தொடர்பான, அதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாணசபைக்கு ஆளுநர் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையிலேயே, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து திணைக்களங்களை அல்லது அதிகார சபையை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad