புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

    மாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர் யாரையும் நிறுத்தாமல் தேமுதிக மௌனம் காத்ததால், வாக்குப்பதிவு நடத்தும் சூழல் தவிர்க்கப்பட்டது. இதனால், எந்தப் பரபரப்பும் இன்றி மாநிலங்களவைத் தேர்தல் முடிவுக்கு வரவுள்ளது.
இதனால், அதிமுகவைச் சேர்ந்த எஸ்.முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், ஏ.கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும், அதிமுக ஆதரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) மாலை 3 மணிக்கு முடிந்தது.
6 இடங்களுக்கு ஆறு பேர்: காலியாகவுள்ள ஆறு இடங்களுக்கு, 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் தினத்திலேயே தனது மனுவை தாக்கல் செய்தார். அதிமுக அணியைச் சேர்ந்த 5 பேரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு இல்லாமல் கே. பத்மராஜன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று மனுக்கள் பரிசீலனை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் புதன்கிழமை (ஜனவரி 29) காலை 11 மணி முதல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இந்த வேட்புமனு பரிசீலனை, தேர்தல் பார்வையாளரும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுமான பிரவீண் குமார் முன்னிலையில் நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான ஏ.எம்.பி. ஜமாலுதீன் உள்ளிட்ட அதிகாரிகள் வேட்புமனுக்கள் பரிசீலனையை மேற்கொள்கின்றனர்.
இந்த பரிசீலனையின் போது, வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் உடனிருப்பார்கள். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 31 ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிமுக அணி மற்றும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
தேமுதிக மௌனம்: கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி வாக்குப் பதிவுக்கு வழிவகுத்த தேமுதிக, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் தனது நிலைப்பாடு எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்தது. அந்தக் கட்சிக்கு சட்டப் பேரவையில் 28 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போதும், ஏழு பேர் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டிருந்தால் அந்தக் கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்திருக்கும். ஆனாலும், மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக போட்டியிடாமல் மௌனம் காத்தது. தேர்தலில் போட்டியிடாததுடன் யாருக்கும் தனது ஆதரவையும் அந்தக் கட்சி அளிக்கவில்லை. இதனால், காலியான 6 இடங்களுக்கு 6 பேர் போட்டியிட்டுள்ளதால் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட உள்ளது.
தேமுதிக போட்டியிட்டிருக்குமானால், வாக்குப் பதிவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கும். தேவை ஏற்பட்டால் வாக்குப் பதிவு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. போட்டியின்றி 6 பேரும் தேர்வாகியுள்ளதால் வாக்குப் பதிவு நடத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை.
6 பேருக்கு ஆதரவு எப்படி?
ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பேரவையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 4 வேட்பாளர்களுக்கு 136 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு போக, எஞ்சியுள்ள 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.ரங்கராஜனுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இடதுசாரிகள் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், இடதுசாரிகளின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்ற போதும் போட்டி வேட்பாளர் யாரும் இல்லை என்ற காரணத்தால், 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் (திமுக 23 மற்றும் மனிதநேய மக்கள் கட்சி 2 மற்றும் புதிய தமிழகம் 1) திருச்சி சிவாவின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ad

ad