புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று இலங்கை அஞ்சும் பிரேரணையை தாம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் இந்த அறிவித்தலை நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ளது.அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில்
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
இந்தநிலையிலேயே அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள தகவலின்படி எதிர்வரும் மார்ச்சில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் யோசனை கொண்டு வரப்படவுள்ளது.
எனினும் அதில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரப்படவுள்ளதா என்று தெரியவில்லை. என்றாலும் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் மூன்றாவது முறையாக கொண்டு வரவுள்ள இந்த யோசனை, இலங்கை அரசாங்கம் நல்லிணக்க விடயங்களில் முன்னேற்றத்தை காட்டவில்லை.
அத்துடன் காணி சுவீகரிப்பு, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல், மதத்தலங்கள் மீது தாக்குதல் போன்ற செயல்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்ற அடிப்படையில் கொண்டு வரப்படவுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இறுதிப்போரின் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை. அத்துடன், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களும் இல்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வோஷிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையால் அமெரிக்காவை போன்ற நடவடிக்கைகளை எடுக்கமுடியாது. இலங்கைக்கென தனியான வழிமுறை, கொள்கைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைகளால் நாட்டில் குழப்பம் ஏற்படும்: ஜனாதிபதியின் செயலாளர்
போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை என்பது இலங்கைக்குள் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் குறைந்தது 5 வருட காலமாவது அவசியம்.
26 வருடங்கள் இருந்து வந்த நெருக்கடியின் பின்னர் நல்லிணக்கம் என்பதை ஓரிரு நாட்களில் செய்து விட முடியாது எனவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த அமெரிக்கா மட்டுமல்லாது பிரித்தானியாவும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசாங்கத்தின் எதிரான செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டமை, சமய மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜனாதிபதியின் செயலாளர், சர்வதேச விசாரணை என்பது பழைய காயத்தை மீண்டும் தோண்டுவதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அப்படியான விசாரணை ஒன்று நடத்தப்படுமானால் அதனுடன் தொடர்புடைய சகல தரப்பிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய முன்னாள் செயற்பாட்டாளர்கள் மற்றும் இந்திய அமைதிப்படையிடமும் விசாரணைகளை நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் சர்வதேச விசாரணையானது இலங்கைக்குள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் விடயமாகும். அத்துடன் இராணுவத்தின் மன தைரியத்தை சிதைப்பதாகவும் அமைந்து விடும்.
இவ்வாறான பிரச்சினைகள் குறித்து ஏனைய நாடுகளிடம் விசாரணைகளை நடத்தாது இலங்கைக்கு எதிராக மட்டும் ஏன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அப்படியான விசாரணைகள் நடத்தப்படுமாயின் 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து முன்னோக்கியதாக அந்த விசாரணை இருக்க வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த விசாரணைகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்புகள் ஏற்படும்.
மக்களை மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்தின் மேலும் அதிகமான காலம் தேவைப்படுகிறது.
காணாமல் போனதாக கூறப்படும் 13 ஆயிரம் பேர் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் பிரித்தானியா போன்ற நாடுகள் இந்த தகவல்களை வெளியிடுவதில்லை என்றார்.

ad

ad