புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு
அவை நடைமுறைப்படுத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதல்களுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர்.
மீனவர்களின் வேண்டுகோளை அடுத்து, இந்த சம்பவங்களைத் தடுக்க இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை (ஜனவரி 27) காலை 10 மணிக்கு இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது.
முன்னதாக பேச்சுவார்த்தைக்கு வந்த இலங்கை மீனவர்களை, தமிழக மீனவர்கள் கைக்குலுக்கி வரவேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவப் பிரதிநிதிகளும், இலங்கையைச் சேர்ந்த 10 மீனவப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், துறையின் செயலாளர் எஸ்.விஜயகுமார் உள்பட 7 தமிழக அதிகாரிகளும், மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுசித்ரா துரை உள்பட மத்திய அரசின் 3 அதிகாரிகளும், இலங்கை அரசின் மீன் மற்றும் கடல் வளத்துறையின் இயக்குநர் ஜெனரல் நிமல் ஹெட்டிராச்சி தலைமையில் 8 அதிகாரிகளும் இதில் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, மதிய உணவு இடைவேளைக்காக பகல் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது.
மீண்டும் பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இரு நாட்டு மீனவர்கள் தரப்பிலும் இருந்தும் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் விவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம் பேசியது:
இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையும் சுமுகமாக, பயனுள்ளதாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவுகளை முதல்வர் ஜெயலலிதா மற்றும் இருநாட்டு அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் சென்று, அனைவரின் ஒப்புதலைப் பெற்றப் பிறகே முடிவுகள் வெளியிடப்படும்.
கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன?
பதில்: பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அரசுக்கு அனுப்பி அதன் பின்னர் தெரிவிக்கப்படும்.
கேள்வி: பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன?
பதில்:  இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன் பிடிப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விவரங்கள் அரசுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்படி, பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
இலங்கை நாட்டின் மீனவ சங்கப் பிரதிநிதி டி.சதாசிவம், ஜஸ்டின் ஜோய்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியது:
இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல விஷயங்கள் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தீர்மானங்களையும் வகுத்துள்ளோம்.
இந்தத் தீர்மானங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அவர்களின் ஒப்புதலைப் பெற்று முடிவுகளை வெளியிடுவோம்.
கேள்வி: பேச்சுவார்த்தையில் எத்தகைய விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன?
பதில்: இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக கடலில் மீன்பிடிக்கும்போது தமிழகம் மற்றும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. இந்த தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கேள்வி: பாரம்பரிய பகுதியான பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் விவாதித்து சுமுக முடிவு எடுத்துள்ளோம். இதன் விவரங்கள் இரு நாட்டு அரசுகளுக்கும் தெரிவிக்கப்படும். அரசுகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு முடிவினை அறிவிப்போம்.
கச்சத்தீவு பிரச்னை என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான விவகாரம். ஆனால், பிரச்னையில்லாமல் மீன் பிடிப்பது தொடர்பாகவே நாங்கள் பேச்சுவார்த்தையில் விவாதித்துள்ளோம் என்றார் அவர்.

ad

ad