புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2014

நிபந்தனைகளுடன் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி 
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை
அமர்வுகளில் கலந்த கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று நீதவான் லெனின்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போதே சந்தேக நபரினால் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி மன்றில் கோரப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபரை சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் அதற்கான ஆட்சேபம் இல்லை என்றும் சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றிற்கு அறிவித்துள்ளார்.

எனினும் சிறைச்சாலை யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் உள்ளதுடன் வடக்கு மாகாண சபை சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் உள்ளது. எனவே சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது பூரண பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் மன்று அனுமதிவழங்கியிருந்த போதும் சபை அமர்வுகளில் கமல் கலந்துகொண்டு வழக்கு விடயங்கள்  தொடர்பில் எதுவும் சபையில் பேசப்படலாகாது என்றும் ஏனைய உறுப்பினர்களுடனும் இதுகுறித்து விவாதிக்க முடியாது என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சபை அமர்வு நேரத்திற்கு உட்செல்வதுடன்  முடிந்தவுடன் வெளியேற வேண்டும் என்றும் எதிர்வரும் சபை அமர்வில் கமலின் நடவடிக்கைகளை வைத்தே  சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் நீதிமன்றின் உத்தரவுகளை மீறும் பட்சத்தில் அதற்கான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மேல் நீதிமன்றினால் பிணை வழங்கும் சாத்தியக் கூறுகள் இருந்தாலும் அவையும் நிராகரிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை அமர்வுகளில் எதிர்கட்சித் தலைவர் கமலேந்திரன் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் ரெக்சியன் தலையில் சூட்டுக்காயங்களுடன் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad