புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2014


தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
தில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்
உடனிருந்தனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
"பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் தமிழகத்துக்கான மேலிட பார்வையாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு என்னை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை கடந்த மாதம் சந்தித்துப் பேசினேன். கூட்டணி தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் ஆகியோருடன் சென்னையில் பேச்சு நடத்தப்பட்டது. இதன் பயனாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலை பாஜக தலைமையிலான அணியில் சேர்ந்து எதிர்கொள்வதென மதிமுக முடிவு செய்தது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் சென்னை வண்டலூரில் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும்படி என்னையும் மதிமுக தலைவர்களையும் பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், வேறு அலுவல் காரணமாக தில்லிக்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினேன்.
சென்னை பொதுக் கூட்டம், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாங்கள் விவாதித்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற விரும்பும் மதிமுகவின் நிலையையும் முறைப்படி தெரிவித்தேன்.
மோடி ஆதரவு அலை: நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசுகிறது. தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆதிக்கம் இல்லாத ஒரு புதிய அரசியல் மலரவிருக்கிறது. பாஜக அணியில் மேலும் பல கட்சிகள் சேரவுள்ளன. அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக அணி திகழும். மக்களவைத் தேர்தலையொட்டி நரேந்திர மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது. நாடு முழுவதும் பாஜக மட்டும் 250-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறோம்.
பாஜக அணி மத்தியில் ஆட்சி அமைத்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்கப்படும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எனவே, தேர்தலில் பாஜக அணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நோக்குடன் மதிமுக செயல்படும். பாஜக அணியில் சேர எவ்வித நிபந்தனையையும் மதிமுக வைக்கவில்லை' என்றார் வைகோ.

ad

ad