புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழினத்தின் சரிவாக அமையும்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
வலி.தென்மேற்கு பிரதேசசபை கடந்த வெள்ளிக்கிழமை மானிப்பாய் கலாசார மண்டபத்தில் தேசிய வாசிப்புமாத மற்றும் உள்ளூராட்சி வார நிறைவு விழாவைக் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு அந்நாடுகளின் பாரம்பரிய விவசாய முறைமைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் சீர்குலைப்பதை ஒரு உத்தியாகக் கையாண்டார்கள்.
அதேபோன்றுதான் சிங்கள ஆட்சியாளர்களும் எமது பண்பாட்டைச் சீரழித்து, இலங்கையை ஒரே நாடு, ஒரே மக்கள் என்று ஒற்றைப் பண்பாடுடைய தேசமாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
போரில் அழிவுகளைச் சந்தித்திருக்கும் தமிழ் இனத்தின் மீளெழுச்சியில் மிகப்பெரும் சக்தியாக நிமிர வேண்டியவர்கள் எமது இளைஞர்கள். இதனால், எமது இளைஞர்களின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கில் பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.
எமது இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. பாலியல் பிறழ்வான நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன.
சினிமாப் போதை தலைக்கேற்றப்பட்டுள்ளது. சினிமா ஒரு அற்புதமான கலை. திரைப்படக்கலையைப் புரிந்துகொள்வதற்கும், நல்ல திரைப்பட இரசனையை வளர்த்தெடுப்பதற்கும் திரைப்படக் கழகங்கள் தோன்றுவது ஆரோக்கியமானது.
ஆனால், ஒரு குவளைப் பாலுக்கு அழுகின்ற ஏராளமான குழந்தைகள் எங்களிடையே இருக்கும்போது நடிகர் சங்கங்கள் அமைத்து, நடிகர்களின் உருவப் படங்களுக்குக் குடங்குடமாகப் பாலாபிஷேகம் செய்யும் அளவுக்கு அல்லவா எமது இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். இவற்றின் விளைவுகளில் ஒன்றுதான் அண்மையில் வாள்களோடு கைதுசெய்யப்பட்ட ஆவாகுழு. இதற்கு, இளைஞர்களை மாத்திரம் குற்றவாளிகளாக்கிவிட்டு நாங்கள் தப்பித்துவிட முடியாது.
தமிழ்ச் சமூகத்தை வழிநடத்துவதற்கும் தவறுகளைத் தட்டிக்கேட்பதற்கும் இன்று ஒரு வலுவான தேசியத் தலைமை இல்லை. இந்நிலையில், சீரழிவுச்சாத்தான்களின் பிடிக்குள் அகப்படாமல் எமது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கே இருக்கின்றது. அந்த வகையில், வாசிப்பின் முக்கியத்துவங்களை அதிகம் புரிந்து கொள்ள வேண்டிய தரப்பினராகவும் பொற்றோர்களே உள்ளார்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளைப் பாடநூல்களைத் தவிர வேறு நூல்களைப் படிப்பதற்கு அனுமதிக்காத நிலையே இன்று நிலவுகின்றது. பாடசாலைக் கல்வியில் பிள்ளைகள் உச்சப் புள்ளிகளைப் பெற வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக் கல்வியைப் பற்றி யோசிப்பதில்லை.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மூன்றாம் வகுப்பில் இருந்து பாடநூல்களோடு மேலதிக வாசிப்பிலும் ஈடுபடத்தொடங்கிய மாணவர்கள் பெரும்பாலானோர்கள் பிற்காலத்தில் பாடசாலைக் கல்வியை இடையில் கைவிடாதவர்களாகவும், போதைக்கு அடிமையாகாதவர்களாகவும், சிறைக்குச் செல்லாதவர்களாகவும் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல நண்பர்களாக நூல்களே விளங்குகின்றன.
அது மாத்திரம் அல்லாமல்,காட்சி ஊடககங்களைப்போல அல்லாது புத்தகங்கள் படிப்பவர்கள் மனதில் கற்பனைகளை வளர்க்கின்றன. தொலைக்காட்சி மற்றும் திரைப்படக் காட்சிகளை மூளை உள்ளவாறு அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். அதற்கு மூளை சிந்திக்க வேண்டியதில்லை.
ஆனால், நூல்களில் விபரிக்கப்படும் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் மூளை கற்பனையிலேயே உருவகித்துக் கொள்ளும். கற்பனைகள் சிந்தனைகளை வளர்க்கும். சிந்தனைகள் சாதனைகளுக்கு இட்டுச்செல்லும்.
உலகின் சாதனையாளர்கள் எல்லோரும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்கும் பழக்கமுடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நாமும் எமது பிள்ளைகளை நாள்தோறும் ஒரு மணி நேரமாவது வாசிப்பில் ஈடுபட வைக்க வேண்டும். அதுதான் இன்று நிலவும் பண்பாட்டு நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை வளர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வலி. தென்மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் ச.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad