புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2014


வீரம் - விமர்சனம்!

ஜித் வந்து நின்னாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு அஜித் அரிவாள் தூக்கி அதகளம் புரிந்தால் கேக்கவா வேணும்! முழுக்க முழுக்க அஜித்துக்கு எப்படி மாஸ் சேர்க்கலாம் என்ற எண்ணத்திலேயே படமாக்கப்பட்டிருகிறது வீரம். வெள்ளை முடியொடு வந்து வீரமாய் சண்டைபோடுவது மட்டுமல்ல, ரசிகர்களின் உள்ளங்களையும் ஜெய்க்கிறார் அஜித். நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்டி சட்டையில் பளிச்சென இருக்கிறார் அஜித்.



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டான்சத்திரம் ஊரில் அண்ணனுக்காக தம்பிகள், தம்பிகளுக்காக அண்ணன் என்று பாசமலர் பிரதர்ஸாக இருக்கிறார்கள் அஜித்தும் அவரது தம்பிகளும். ஊருக்குள் அநியாயம் செய்பவர்களை வீட்டுக்கு கூட்டி வந்து வயிறார சோறு போட்டு உபசரிக்கிறார்கள் அஜித் மற்றும் சகோதரர்கள். என்னடா இதுன்னு ஆச்சரியப்படுவதற்குள் அடிவாங்க ஒடம்புல தெம்பு வேண்டாமா? என்று வாயால் வசனம் பேசும் அஜித் அடுத்த நிமிடம் தன் தம்பிகளோடு சேர்ந்து ரௌடிகளை ரவுண்டுகட்டி அடிக்கிறார். 

கல்யாணம் என்கிற பேச்சை யார் எடுத்தாலும் அவங்களையும் சப்பாடு போட்டு அடிக்கிறார். வீட்டில் ஒரு பொண்ணு வந்தா அண்ணன் தம்பிகளை பிரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் இருக்கும் அஜித்தை காதலிக்க வைக்கிறார்கள் தம்பிகள். அதற்கான ஐடியாக்களைக் கொடுக்கத்தானே சந்தானத்தை படத்துல வச்சிருக்காங்க. எங்க அண்ணன் உங்கள காதலிக்கிறார்ன்னு தமன்னாகிட்டயும், அந்த பொண்ணு உங்கள லவ் பண்றாங்கன்னு அஜித்திடமும் பொய் சொல்லி பத்தவைக்க ஒரு வழியா இருவரும் ஃபாரின் லொகேஷனில் டூயட் பாடுகிறார்கள். 


ரௌடிகளால் வெட்டுப்பட்ட தன் அண்ணனை பறிகொடுத்த தமன்னாவுக்கு சண்டை என்றாலே பிடிக்காது. ஆனால் அஜித் கத்தியோடும் ரத்தத்தோடும் தான் குடும்பம் நடத்துகிறவர் என்று தமன்னாவுக்கு தெரிய வருகிறது. காதலிக்காகவும் தம்பிகளின் பாசத்துக்காகவும், இனி அருவா சவகாசமே வேண்டாம் என்று முடிவு செய்து நல்லவனாக மாறுகிறார் அஜித்.

 அஜித்தை தன் குடும்பத்துக்கு அறிமுகம் செய்கிறார் தமன்னா. அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற தமன்னாவின் தந்தை நாசர் அஜித்தையும் அவர் தம்பிகளையும் திருவிழாவை முடித்துவிட்டுத்தான் ஊருக்கு போக வேண்டும் என்று சொல்லி அவர்களை அங்கேயே தங்க வைக்கிறார். (இதெல்லாம் எந்த குடும்பத்துல நடக்குமோ தெரியல)

போன இடத்தில் அஜித்தை ரௌடி கும்பல் துரத்திக்கொண்டே வருகிறது. தமன்னாவின் குடும்பத்துக்கு தெரியாமல் அவர்களை அடித்து துவைக்கிறார் அஜித். வரிசையாக ஆபத்து தொடர்ந்து வர, உண்மையை விசாரித்தால் ரௌடிகளின் குறி நாசரின் குடும்பத்துக்குத் தான், தனக்கு இல்லை என்பது அஜித்துக்கு தெரியவருகிறது.


அதன் பிறகு எதிர்பார்த்தது போலவே தன் வீரத்தைப் பயன்படுத்தி தமன்னாவின் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது க்ளைமாக்ஸ்!  

படத்தின் முதல் பாதியில் கலகலப்பான அஜித்தைக் காட்டியும், இரண்டாவது பாதியில் செண்டிமெண்டான காட்சிகளோடு சீரியஸ் அஜித்தைக் காட்டி திரைக்கதை நகர்த்துகிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியில் வந்த சந்தானத்தைவிட இரண்டாவது பாதியில் வரும் தம்பி ராமைய்யா அசத்துகிறார். நைட்டியைப் போட்டுக்கொண்டு அவர் போடும் ஆட்டம் கலகலப்பு! 

சம்பந்தமே இல்லாமல் தமன்னாவுடன் இரண்டு ஃபாரின் டூயட் தேவையா? நம்ம ஊர்ல இடமா இல்ல... அதுவும் சிலிண்டர் சைசில் தொப்பை வைத்துள்ள அஜித் கோட்டு போட்டுக் கொண்டு காதல் பாட்டு பாடுவது சகிக்கல. கோவில் திருவிழாவுல ‘சிங்சக்கா...’ பாட்டுக்கு வேட்டிய மடிச்சுக்கட்டி ஒரு டான்ஸ் போட்டாரே... கலக்கல்! 


பாலா, விதார்த் என அஜித்தின் தம்பிகளாக வருகிறவர்கள், அண்ணண்டா! என்று கத்துவதோடு சரி, ரொம்பவும் சிரமப்படாமல் அஜித்துக்கு பின்னாலயே நிற்கிறார்கள். அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு பெருசா வேலையில்லை. இப்படி கூறா இருக்கியே நீ என்ன ஜாதிடான்னு வில்லன் கேட்க, அதற்கு அஜித் கொடுக்கும் விளக்கம் அசத்தல்.

இனிமே பெரிய ஹீரோவ வச்சு படம் எடுக்கிறவர்கள்... யாரும் லாஜிக் பாக்காதீங்கன்னு சொல்லி போஸ்டர் அடிச்சு ஒட்டிடுங்க பாஸ். அஜித் சண்டைபோட்டு இடைவேளை என்று போட்ட பிறகு அந்த ரயில் அதே இடத்துல நிக்குதே... அஜித்துக்கு பயந்து ஜனங்க ஓடிப்போயிடலாம், ரயில் ஓட்டுனர் கூடவா ஓடிப்போயிட்டாரு! தூக்கு தண்டனை கைதி தப்பிச்சு வந்து அஜித் கூட சண்டைபோட்டுகிட்டு இருக்காரு... இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லையா?


இரண்டாவது பாதியில் வரும் செண்டிமெண்ட் காட்சிகள் பழைய ஸ்டைலாக இருந்தாலும் திரைக்கதையின் வேகம் அதை மறைத்துவிடுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பாடிய முதல் பாடல் நல்லா இருந்தாலும், வேற யாரையாவது பாட வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கலாம். ‘ரதகஜ துரக பதாதிகள்...’ என ஒலிக்கும் தீம் பாடல் அஜித்துக்கு ஏத்த கெத்தோடு இருக்கிறது!

குறைகள் சில இருந்தாலும் குடும்பத்தோடு பார்த்து குதூகலிக்க வீரம் படத்தை தாராளமாக பார்க்கலாம்! படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சேதாரம் இல்லாமல் தாராள கலெக்‌ஷனை அள்ளிக்கொடுக்கும் வீரம் என்பது நிச்சயம்.

வீரம் - அஜித்தின் அதகளம் அபாரம்!

ad

ad