புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

    வாவ்ரிங்காவின் கிராண்ட்ஸ்லாம் கணக்கு துவக்கம்

களிமண் தரை மட்டுமல்லாது எம்மண்ணிலும் நாயகனாக விளங்கிய ரஃபேல் நடாலை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஸ்டான் என செல்லமாக அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் நடாலை, தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
17 கிராண்ட்ஸ்லாமுக்கு சொந்தக்காரரான ரோஜர் ஃபெடரரை அரையிறுதியில் வெற்றி கொண்ட நடாலை, இறுதிச் சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த ஸ்டான் தோற்கடித்தது ஸ்விட்சர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது ஸ்டான் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 36 ஆட்டங்களில் பங்கேற்ற பின்பே இந்த கோப்பையை ஏந்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன் கோரன் இவானிசெவிக் 48 ஆட்டங்களில் பங்கேற்று 2001-ல் விம்பிள்டன் பட்டம் வென்றார்.
காயத்தால் கதை மாறியது: இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், ஆஸ்திரேலிய ஓபனை வென்று பீட் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்ளங்கையில் காயம், இறுதிச் சுற்றின்போது ஏற்பட்ட முதுகுவலி ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து துரத்தியதால் நடால் பட்டம் வெல்ல முடியவில்லை. இதனால், கலங்கிய விழிகளோடு பீட் சாம்ப்ராஸ் கையால் 2-வது இடம் பிடித்ததற்கான கோப்பையையே வாங்க முடிந்தது. மாறாக, வென்றிருந்தால் தன் சாதனையை சமன்செய்த சாம்பியனுக்கு, முன்னாள் சாம்பியன் பட்டம் அளித்திருந்திருப்பார்.
ஃபெடரருக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி பெற்ற பின் நடால் உள்ளங்கை காயத்தால் அவதிப்படுவதாக செய்தி வெளியானது. அன்று முதலே வாவ்ரிங்கா பட்டம் வெல்லும் வாய்ப்பு கனிந்தது. இம்முறை பட்டம் தனக்கு என தீர்க்கமான முடிவுடன் விளையாடியது வாவ்ரிங்காவின் ஆட்டத்திறனில் அப்பட்டமாக தெரிந்தது.
ஆரம்பமே அமர்க்களம்: எந்த நெருக்கடியும் இன்றி ஸ்டான் முதல் இரண்டு செட்களைக் கைப்பற்றி "நம்பர் 1' வீரருக்கு கிலி ஏற்படுத்தினார். முதல் செட்டில் நடால் அடுத்தடுத்து "டபுள் ஃபால்ட்' செய்தார். இதை சாதகமாக்கிய ஸ்டான், நடாலின் சர்வை பிரேக் செய்து 37 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.
2-வது செட்டில் வாவ்ரிங்கா 2-1 என முன்னிலையில் இருந்தபோது நடால் காயம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருப்பினும் 6-2 என 2-வது செட்டையும் ஸ்டான் கைப்பற்றினார்.
3-வது செட்டில் நடால் சுதாரித்தார். முதன் முறையாக வாவ்ரிங்காவின் சர்வை பிரேக் செய்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3 என அந்த செட்டை தன் வசப்படுத்தினார். 4-வது செட்டில் ஸ்டான் தவறேதும் நிகழாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அந்த செட் 6-3 என ஸ்டான் வசமானது.
சானியா ஜோடிக்கு 2-வது இடம்: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ருமேனியாவின் ஹோரியா டெக்காவ் ஜோடி, ஃபிரான்சின் கிறிஸ்டியானா மிலடெனோவிச், கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை எதிர் கொண்டது. 58 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சானியா ஜோடி 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
தோல்விக்குப் பின் சானியா கூறுகையில்,""இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் நாங்கள் நன்றாக ஆடினோம். இந்த ஆண்டு முழுவதும் டெக்காவ் உடன் இணைந்து ஆடுவேன். இரட்டையர் பிரிவிலும் சாம்பியன்களான எர்ரானி - வின்சி ஜோடியிடம்தான் தோல்வியடைந்தோம்'' என்றார்.
இதுதான் சிறந்த கிராண்ட்ஸ்லாம்
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்றது குறித்து வாவ்ரிங்கா கூறுகையில் ""என்னைப் பொறுத்தவரையில் இந்த கிராண்ட்ஸ்லாம்தான் சிறந்தது. இங்கு அனுபவித்து விளையாடினேன். ஓர் ஆண்டில் எல்லாமே மாறி விட்டது. இப்போதும் நம்பமுடியவில்லை இது கனவா, நனவா என்று'' என்றார். கடந்த முறை 4-வது சுற்றில் ஜோகோவிச்சுக்கு எதிராக நீண்ட போராட்டத்துக்குப் பின் வாவ்ரிங்கா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வாவ்ரிங்கா இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை ஓபனில் பட்டம் வென்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் அடியெடுத்து வைத்தார். அதனால்தான் போட்டி தொடங்கும் முன், ஜோகோவிச், நடாலை வீழ்த்துவேன் என அவர் தெரிவித்தது போலவே அதை நிறைவேற்றிக் காட்டினார் ஸ்டான்.
கலங்கிய விழிகளுடன் நடால்
பரிசளிப்பு விழாவின்போது முதலில் 2-ம் இடம் பிடித்த நடாலுக்கு கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையைப் பெற்ற நடால் பேசத் தொடங்கும் முன் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. கைதட்டல் நிற்க சில நிமிடங்கள் ஆனது. இத்தனை பேரின் நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்ட விரக்தியின் உச்சத்தில் நடால் கண்களில் இருந்து நீர்த்துளி எட்டிப் பார்த்தது. அதைத் துடைத்த விட்டபடியே, "வெல்....' என எச்சில் விழுங்கியபடி பேச ஆரம்பித்தார் நடால். அவரது பேச்சின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது நன்றி என்ற வார்த்தையே.
அவர் பேசுகையில் ""ஸ்டானுக்கு நன்றி. இந்தப் பட்டம் வெல்ல நீங்கள் (ஸ்டான்) தகுதியானவர். நீங்கள் கோப்பை வென்றதில் மகிழ்ச்சி. எனக்கு இன்று அதிர்ஷ்டம் இல்லை என்பதை விட இந்த பாராட்டுக்கு நீங்கள் தகுதியானவர். ஆதரவளித்த என் அணிக்கு நன்றி. நீங்கள் இல்லையென்றால் என்னால் இன்று இங்கு நிற்க முடியாது. வெற்றிக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. மன்னித்து விடுங்கள். காயத்தால் வெற்றி வசப்படவில்லை'' என்றார்.
இரண்டாவது செட்டின் போது நடால் திடீரென காயம் காரணமாக அவதிப்பட்டார். ஏழு நிமிடங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது நடால் காயத்தால் அவதிப்படுவது குறித்து தன்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை என ஸ்டான் "சேர் அம்பயரிடம்' குற்றம் சாட்டினார். ஆனால், நடாலை வீழ்த்திய செருக்கு ஸ்டானிடம் துளியும் இல்லை.
ஸ்டான் ஏன் சாம்பியன்...
ஏஸ் 19 1
முதல் சர்வ் வெற்றி 87% 60%
2-வது சர்வ் வெற்றி 51% 42%
மொத்த வெற்றிப் புள்ளிகள் 116 88
இரட்டைத் தவறுகள் 2 3
வேகமான சர்வ் (கி.மீ/மணி) 217 200
சராசரி வேகம் 177 134
பிரேக் புள்ளிகளை வென்றது 5/15 2/6

ad

ad