புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

அனந்தி எழிலன் : பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது 

காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே தேவை” என்று வலியுறுத்தி சிறீலங்கா தலைநகர் கொழும்பில் தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனவர்களின்
உறவுகளால் நடத்தப்பட்டுள்ளது. இதைத்தான் தொடர்ந்து பலரும் வற்புறுத்தியும் வருகின்றனர்.

ஆனால் கடந்த வாரம் இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் வடமகாணசபை உறுப்பினரான அனந்தி எழிலன் அவர்கள் “காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சனைக்கு உள்ளூரிலேயே தீர்வு காண வேண்டும்” என்று சாட்சியமளித்துள்ளதாக பிபிசி தமிழோசை வெளியிட்ட செய்திக்குறிப்பில் காணப்படுகிறது.

உண்மையில் அனந்தி அவர்கள் அப்படி சாட்சியமளித்தாரா? அல்லது பிபிசியின் புரட்டு வேலையா? என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

அனந்தி தான் அப்படி சாட்சியமளித்திருக்கவில்லை என்றால் உடனடியாக பிபிசிக்கு தமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். பிபிசி ஒரு அனைத்துலக கவனம் பெற்ற ஊடகம். அனாமதேயமான ஒரு ஊடகம் அல்ல அது. எனவே தெளிவாக தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனந்தி எழிலன் பிபிசி குறிப்பிடுவதுபோல் அப்படித்தான் சாட்சியமளித்துள்ளாhர் என்றால் அது மிகவும் கவலைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

அனந்தி எழிலன். இறுதிவரை தமிழர்தேச விடுதலைக்காக களமாடி இனஅழிப்பு அரசின் படையினரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப்போராளியான எழிலனின் துணைவியார். மே 18 இற்கு பிறகு கைது செய்யப்பட்ட தனது கணவரையும் சக போராளிகளையும் மக்களையும் விடுவிக்குமாறு துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர். இதற்காக பெரும் ஆபத்துக்களையும் சந்தித்து வருபவர்.

அரைவிதவைகள் ( Half widows) என்ற எமது இனப்பெண்களின் மீது இனஅழிப்பு அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இனஅழிப்பு வடிவத்தின் ஒற்றைக் குறியீடு அனந்தி எழிலன். புலிகளின் பிரதிநிதி என்ற மக்களின் மனபிம்பத்தையும் அரைவிதவைகள் என்ற இனஅழிப்பு குறீயீட்டையும் இனங்கண்டு தமது வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக சம்பந்தர் குழு அனந்தியை வடக்கு மாகாண சபை தேர்தலில் களமிறக்கி தமது வெற்றியை உறுதி செய்ததையும் நாம் அறிவோம்.

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மறைந்த போது “தேசத்தின் குரல்” என்று அவரை குறிப்பிட்டார். தற்போது எமது “தேசத்தின் உண்மையான குரல்” அனந்தி எழிலன்தான்.

மே 18 இற்கு பிறகான இன்றைய எமது தேசத்தின்- எமது மக்களின்- எமது இனப் பெண்களின் ஒட்டு மொத்த குறியீடு அனந்தி எழிலன் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்குள் சிக்கியிருக்கும் ஒரு இனத்தின் அனைத்து அவலங்களையும் அவர் பிரதிநித்துவப்படுத்துகிறார்.

அண்மையில் இனஅழிப்பு அரசு இவரை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று அறிவித்ததன் பின்னணியில் இந்த “தேசத்தின் குரல்” குறித்த ஆழமான புரிதல்களை இனஅழிப்பு அரசு அடையாளம் கண்டுகொண்டமையே காரணமாகும்.

அண்மையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த அனந்தி தமிழர் இன அழிப்பு தொடர்பாக – தமிழர் விடுதலை தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் மிகவும் காத்திரமான செய்திகளை பதிவுசெய்துவிட்டு திரும்பியிருந்தார்.

ஒரு பெண்ணாக – தாயாக, இன அழிப்பில் சிக்கியவராக – அதற்கு தினமும் முகம் கொடுத்து வருபவராக மட்டுமல்ல தமிழர்களின் அரசியற் பிரதிநிதியாக அவரை அனைத்துலகம் தமது முன்னைய நிலைப்பாடுகளை தளர்த்தி கொஞ்சம் நேர்மையுடன் அணுக முற்பட்டதும் – முற்படுவதும் பலரும் அறியாத செய்தி.

அண்மையில் இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப் அனந்தியை சந்திப்பதை ஒரு தனி நிகழ்ச்சி நிரலாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை “பயங்கரவாத” முத்திரை குத்தப்பட்டிருந்த தமிழர் போராட்டம் அனந்தி எழிலன் மூலமாக அதன் முன்னைய தன்மைகளிலிருந்து விடுபட்டு அனைத்துலக மட்டத்தில் வேறொரு பரிமாணத்தை எட்டிக்கொண்டிருக்கிறது.

இது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய பகடையாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல தனக்கு பிறகு வெள்ளை வேட்டிகட்டிய மற்றும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கோட்சூட் போட்ட கும்பல்களிற்கு அப்பால் மக்களோடு மக்களாக வாழ்ந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட குறிப்பாக பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கனவு கண்டதன் ஒரு பகுதியும் கூட.

ஒரு தேசத்தை பெண்கள் ஆள்வதுதான் சிறப்பு. அதுவும் இன அழிப்புக்குள்ளான ஒரு தேசத்திற்கு அது கட்டாயமும்கூட. பயங்கரவாத முத்திரை குத்தி அழிக்கப்பட்ட ஒரு போராட்டத்திற்கு – தேசத்திற்கு பெண்களின் தலைமை என்பது அதன் “பயங்கரவாத” கூறுகளை நீர்த்துப்போக செய்ய உதவுகிறது என்பது ஒரு இராஜதந்திர செய்தியுமாகும்.

அனந்தி எழிலனின் அரசியற் பிரவேசத்தை நாம் இப்படி பல தளங்களில் அடையாளம் கண்டோம். வெளியில் பகிர முடியாத பல கூறுகளும் இதன் பின்னணியில் இருக்கின்றன. அவற்றை காலம் வரும்போது பேசுவோம். அவர் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. வரலாறு அவரை இழுத்துக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலின் ஒரு பகுதியாகவே இன்று விதிவிலக்கில்லாமல் அனைவரும் அரசியல் செய்யப்புகுந்துள்ள போதும் அதை முதன்மைப்படுத்தும் கூட்டமைப்பின் ஒரு வேட்பாளராக களமிறங்கிய போதும் அனந்தி மக்களின் உணர்வுகளின் வடிகாலாக மே 18 இற்கு முந்தைய ஒரு அரசியலின் தொடர்ச்சியாகவே அடையாளம் காணப்பட்டார்.

பிபிசி செய்திக்குறிப்பில் காணப்படும் ஒரு தவறைத்தவிர வேறு எதுவுமே அவரை களங்கப்படுத்தவில்லை. உடனடியாக தனது இடத்தையும் தனது அரசியல் இருப்பின் கனதியையும் உணர்ந்து பிபிசிக்கு தனது கண்டனத்தை அனந்தி வெளியிட வேண்டும். அப்படி தான் குறிப்பிட்டது உண்மையென்றால் தமிழ் மக்களுக்கு அது குறித்து விளக்கம் சொல்ல வேண்டிய கடப்பாடும் கடமையும் அனந்திக்கு இருக்கிறது.

கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக இருந்தும் அவர்களை தாண்டியும் காத்திரமான விடயங்களை செய்து கொண்டிருக்கும் அனந்தி சம்பந்தர் – சுமந்திரன் போன்றவர்களின் அரசியலுக்குப் பலியாகிவிடக்கூடாது என்று தமிழ் மக்களின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

அடுத்து கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாக அரசியல் செய்யும் ததேமமு உடன் நீங்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதும் எமக்கு தெரியும். நல்ல விடயம். ஆனால் அண்மைக்காலமாக அவர்களும் நுட்பமாக “புலீநீக்கம்” செய்யும் அரசியலை செய்து மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே அவர்களது நுண்ணரசியலுக்குள்ளும் விழுந்து விடாதீர்கள். தனித்துவமான உங்கள் அரசியற் பயணம் தொடரட்டும்.

காலம் இட்ட கட்டளைப்படி வரலாறு காட்டிய பாதையில் தலைவன் வழியில் நாம் விடுதலையை வென்றெடுப்போம். அதற்கு தாயகத்தில் குறிப்பாக உங்களைப் போன்ற பெண் தலைமைகள் உருவாவது காலத்தின் கட்டாயம். பிராந்திய – பூகோள நலன்களை மையப்படுத்தியும் அனைத்துலக இராஜதந்திர நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் தமிழர் தேசத்திற்கு பெண்களின் தலைமையே அனுகூலமானது.

எனவே உங்களின் தயக்கம் – தடுமாற்றம் உங்களை மட்டுமல்ல இனிவரப்போகும் பெண்களின் தலைமைகளை இல்லாமல் செய்யும் ஆபத்து நிறைந்தது. எனவே தடுமாற்றம் வேண்டாம்.

எழிலனின் கனவை அர்த்தமுள்ளதாக மாற்றுவீர்கள் என்ற பெரு நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

ஈழம்ஈநியூஸ்.

ad

ad