புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2014

சர்வதேச விசாரணை கொண்டுவந்தால் விளைவுகள் பாரதூரமானவையாகும்; எச்சரிக்கிறார் மூத்த ராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டால் அதன் விளைவுகள் மிகப் பாரதூரமானவையாக இருக்கும் என்பதுடன் இதனால் சர்வதேசப் பொருளாதாரத்
தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் இலங்கை மீது விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார் இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், ஐ.நா மற்றும் பிரான்ஸுக்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக.
 
"இறுதிக் கட்டப் போரின் போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அரச படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம்' என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி தொடர்பில் பி.பி.சி செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
சர்வதேச விசாரணை சுதந்திரமற்றது
மேற்படி டுவிட்டர் செய்தி நடுநிலையற்றது என்று சாடியுள்ள தயான், விசாரணை எதுவுமில்லாத முற்கூட்டிய அனுமானம் எனவும் தெரிவித்துள்ளார். 
 
சாதாரண இராஜதந்திர முறைப் படியான வழக்கங்களை விட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்து கொண்டிருக்கிறது. நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது. 
 
இந்த டுவிட்டர் செய்தியைப் போல, அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையும் ஒரு போதும் சுதந்திரமானதாக இருக்க வாய்ப்பில்லை. 
 
தவறான வெளிவிவகார கொள்கை
இலங்கை அரசின் தவறான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளே தற்போதைய கடுமையான அனைத்துலக அழுத் தங்களுக்குக் காரணம் என்ற போதிலும், இலங்கை மீதான அழுத்தங்கள் அனைத்தையும் நியாயமானவை என்று கூறமுடியாது.
 
இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 ஆம் ஆண்டிலேயே இத்தகைய சர்வதேச விசாரணைக்கான முயற்சியயான்றை அமெரிக்கா எடுத்திருந்தது. ஆனால் அப்போது அது முடியாமல் போய்விட்டது.
 
ஜெனிவாவில் இலங்கையின் பிரதிநிதித்துவத்தினால் அப்போது கிடைத்த வெற்றி காரணமாக அவர்களின் முயற்சி தோல்வி கண்டது. அப்போது இருந்த வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இராஜதந்திர நகர்வுகள் இன்று இல்லாததால் தான் இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
 
விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்
சர்வதேச விசாரணையை நோக்கிய அமெரிக்காவின் செயற்பாடுகளின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கும். அது அமெரிக்கா கூட எதிர்பார்க்காத அளவுக்கு அபாயகரமானதாக இருக்கலாம். 
 
சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்று உருவாகுமானால் இரண்டு வழிகளில் அது ஏற்படலாம். ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவர் நியமிக்கப்படலாம் அல்லது சர்வதேச விசாரணை ஆணைக்குழு ஒன்று உருவாகலாம். 
 
அந்த விசாரணையின் தீர்ப்புகளுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்படத் தவறினால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களால் இலங்கைக்கு எதிராகச் சர்வதேச ரீதியான பொருளாதார, வணிக மற்றும் நிதித் தடைகள் கொண்டு வரப்பட்டு இலங்கையின் பொருளாதாரக் குரல் வளை நசுக்கப்படலாம்.
 
சமூக இடைவெளியை அதிகரிக்கும்
அதற்கும் முன்னதாக, எதிர்வரும் மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை மோசமாகத் தோல்வி கண்டால் அது நேரடியாக பங்குச் சந்தைகளைப் பாதிக்கும். 
 
அதே போல இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டுமன்றி மற்றைய அதிகாரிகளுக்கும் சர்வதேசப் பயணங்களை மேற்கொள்ள முடியாதபடி புலம்பெயர் தமிழர்களால் வழக்குகள் போடப்படலாம். 
 
அமெரிக்கா போன்ற நாடுகளின் இவ்வாறான கடுமையான நிலைப்பாடுகள் இலங்கையினுள் இனரீதியான சமூக இடைவெளியை இன்னும் அதிகரிக்கச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. என்றும் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ad

ad