புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

தேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்கை

இரு மாகாண சபைகளிலும் 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிலைமை கண்காணிப்பு
வீதிகளில் எழுதுவோர் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடும் தண்டனை
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பொலிஸ் திணைக்களம் அறிவிக்கிறது.
சட்டவிதிமுறைகளை மீறி பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள், பதாகைகள் கொடி தொங்க விடுபவர்கள் மற்றும் வீதிகளில் எழுதுபவர்களுக்கு எதிராக இம்முறை தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கு அப்பால் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமை யகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்,
மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறை, செயற்பாடுகள் பொலிஸ் தேர்தல் செயலகத்திற்கு மேலதிகமாக 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் நேற்று அதிகாலை வரை 7 முறைப்பாடுகள் தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த தேர்தல் தொகுதியில் மாத்திரம் முதலாவது துப்பாக்கிப் பிரயோகம் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை மாறாக ஐ.தே.க வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் வன்முறைகளைத் தவிர்த்து நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களிடம் கேட்டுக்கொள் கின்றேன் என்றார். 1982ம் ஆண்டின் மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 74 வது சரத்தின் பிரகாரம் பெனர்கள், பதாகைகள், கொடிகள் தொங்கவிடுவது போஸ்டர்கள் ஒட்டி சேதப்படுத்துவது தேர்தல் விதிமுறைகளை மீறும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனினும், வேட்பாளர் ஒரு குறித்த இடத்தில் சமுகமளிக்கும் சந்தர்ப்பத்தில், அனுமதிப்பெற்ற கூட்டம் ஒன்று நடைபெறும் இடத்தில் மற்றும் அனுமதிக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மாத்திரம் போஸ்டர்கள் ஒட்டவும், பதாகைகள், பெனர்கள், கொடிகள் தொங்கவிட்டு கழற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக பொது இடங்களில் ஒட்டுவது குற்றமாகும். இவ்வாறு சட்ட விரோதமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டப்படும் போஸ்டர்களை அகற்றவும், பெனர்கள், பதாகைகள், கொடிகளையும் அப்புறப் படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 20 மில்லியன் ரூபா நிதியை பொலிஸ் திணைக்களத்திற்குத் தேர்தல்கள் செயலகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கமைய, இந்த நடவடிக்கைகளுக்கு என 451 தற்காலிக ஊழியர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கொழும்பு, காலி போன்ற நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர் களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட் டுள்ளன. தேர்தல் திணைக்களம் ஒதுக்கியுள்ள 20 மில்லியன் ரூபா பணமானது மக்களின் பணமாகும். எனவே, தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் செயற்படும் பட்சத்தில் மக்களின் பணத்தை செலவு செய்வதை தவிர்க்க முடியும்.
தேர்தல் சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்தை சார்ந்த போதிலும் அது பொலிஸாரினால் மாத்திரம் நூறு வீதம் செய்ய முடியாது. இதற்கு பொது மக்கள் உட்பட பலதரப்பட்டவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
அதேபோன்று வீதிகளில் வரையப்படும் சித்திரம், இலட்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீதி அபிவிருத்தி அதிகார சபை குறித்த சேதத்திற்கான தொகையை மதிப்பிடும் பட்சத்தில் அது பாரிய குற்றமாக கருதப்பட்டு தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அப்பால் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொது மக்கள் முறைப்பாடு தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொது மக்கள் 0112421111 என்ற பொலிஸ் தலைமையக இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும். தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் 153 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் பொருட்படுத்தாத பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் பட்சத்திலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றார்.

ad

ad