திங்கள், பிப்ரவரி 17, 2014

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேர் தூக்கை ரத்து செய்யக்கோரும் தீர்ப்பு நாளை 
ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
 
3 பேரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதற்காக, இந்திய ஜனாதிபதி அதிக காலம் எடுத்துக் கொண்டதால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்தனர்.
 
கடந்த 4 ஆம் திகதியன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவ்கீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையான அமர்வில் அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாகன்வதி தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.
 
பின்னர் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
இந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் தரப்பில் எழுத்துபூர்வமான வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு நாளைய தினம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.