புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

    "யார்க்கர்' மலிங்காவிடம் பாகிஸ்தான் பணிந்தது

நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் திரிமன்னே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை
வீழ்த்தி மலிங்கா அசத்த, இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவை அடுத்துள்ள ஃபதுல்லாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குசல் பெரேரா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், தில்ஷனுக்குப் பதிலாக வாய்ப்பு பெற்ற திரிமன்னே, சங்ககராவுடன் ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
திரிமன்னே 110 பந்துகளை சந்தித்து 102 ரன்கள் குவித்தார். சங்ககரா தன் பங்குக்கு 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் மேத்யூஸ் 50 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி ஒரு சிக்ஸரின் உதவியுடன் 55 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் அடித்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் உமர் குல் மற்றும் அஃப்ரிடி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களான ஷர்ஜில் கான் 26 ரன்களும், ஷேஸாத் 28 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மிஸ்பா- உல்-ஹக் மற்றும் உமர் அக்மல் இருவரும் தேவையுணர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் அடித்த உமர் அக்மல், சுரங்கா லக்மல் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இருப்பினும், மறுமுனையில் மிஸ்பா தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
ஆனால், முக்கியமான கட்டத்தில் "யார்க்கர்' மலிங்கா தன் நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் அஃப்ரிடியை அனுப்பி வைத்தார். அதே ஓவரில் மிஸ்பாவும் 73 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியன் திரும்பினார். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.
கடைசி நேரத்தில் உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் போராடிய போதும் அவர்களால் வெற்றிக்குத் தேவையான ரன்களைக் குவிக்க முடியவில்லை. 49-வது ஓவரில் எஞ்சியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் மலிங்காவின் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் மட்டுமே எடுத்தது.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் மலிங்கா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ad

ad