புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

வாக்குறுதி வழங்கிய கோத்தபாயவை மேல் நீதிமன்றில் கடுமையாக சாடிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையாவிடமும் சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் வாக்குறுதி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மேல்நீதிமன்றில் தெரிவித்தார்
2007ஆம் ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் திகதி கொம்பனித்தெருவில் குண்டுத் தாக்குதல் நடாத்தி லெப்டினட் திசாநாயக முதியான்சலாகே திசாநாயகாவிற்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவும் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கான கொழும்பில் பல இடஙகளில் ஆயுதங்களை மறைத்து வைத்ததாகவும் அரசியல் கைதியான பத்மநாதன் ராஜிவ்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் எதிரிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5(1)ஆம் பிரிவின் தகவல் கொடுக்க தவறிய குற்றத்தை எதிரி ஒத்துக்கொள்ளுவாராயின், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1) பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை அரச தரப்பு மீளப்பெறும் என நீதிமன்றிற்கு தெரிவித்த போது, மேல்நீதிமன்ற நீதிபதி மொறாயஸ் எதிரி சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி கே. வி .தவராசாவிடம் உமது கட்சிக்காரர் 5(1)ஆம் பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒத்துக்கொள்ளத் தயாரா என வினவிய பொழுது சிரேஸ்ட சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில் பாதுகாப்பு செயலாளர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் இன்றுவரை அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது பற்றியோ விடுதலை சம்பந்தமாக பாதுகாப்புச் செயலாளரோ, நீதி அமைச்சோ, அல்லது சட்டமா அதிபரோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலத்திற்கு காலம் பதவியில் இருப்பவர்கள் கைதிகளுக்கு வாக்குறுதிகளை வழங்கி விடுகின்றார்கள். அதனை நம்பி கைதிகளும் தங்களுக்கு பிணையோ அல்லது புனர்வாழ்வோ விடுதலையோ கிடைக்கும் என நம்பி பின்னர் ஏமாந்து விடுகின்றனர். ஆனால் இன்றுவரை ஒன்றும் நடைபெறவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்களால் மட்டுமே அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறியுள்ளன.
மந்திரி சபையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல பத்திரிகையௌர் மாநாட்டில்; 12ஆயிரம் கைதிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் விடுதலை செய்யப்பட்டவர்களில் கொலைக் குற்றம் புரிந்தவர்களும் விடுதலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என பலநூற்றுக்கணக்கானோர் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சில கைதிகள் 15 வருடங்களுக்க மேற்பட்ட காலம் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதனாலேயே இந்த விபரங்களை இங்கே முன்வைக்கின்றேன்.
இந்த வழக்கில் முக்கிய சான்றாக இணைக்கப்பட்டுள்ள குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சுயமாக சட்டரீதியாக பெறப்படவில்லை என்பதை நிரூபிக்க 10 நிமிட குறுக்கு விசாரணையே போதுமானதாகும். கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் வழக்கின் தடயப் பொருட்களாக கடுதாசித் துப்பாக்கியும் சில உலோக உருண்டைகளும் மருத்துவ சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரச தரப்பிற்கு குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய சான்றுகளல்ல. எந்தவித சான்றுகளும் காணப்படவில்லை. இந்த வழக்கில் எதிரி குற்றத்தை ஒத்துக் கொள்வதாயின் அதற்கான முக்கிய காரணம், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட எதிரி ஆறு வருடங்களாக சிறையிலிருக்கின்றார். கடந்த பல தவணைகளில் அரச தரப்பின் வேண்டுகோளையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அரச தரப்பு எனது கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை வாபஸ் பெற்று 5(1)ஆம் பிரிவின் குற்றத்தை ஒத்துக் கொள்ளுமிடத்து எதிரிக்கு தண்டனையாக ஒரு வருடத்திற்கு உட்பட்ட காலத்திற்கு புனர்வாழ்வு வழங்கப்படுமாயின் குற்றத்தை ஒத்துக் கொள்ள எதிரி விரும்புகின்றார் என எதிரியின் சட்டத்தரணி நீதிமன்றிற்கு கூறிய பொழுது மேல்நீதிமன்ற நீதிபதி மொறயஸ் எதிரி குற்றத்தை ஒத்துக் கொள்ளுமிடத்து குறைந்த தண்டனை வழங்கப் படுமெனவும் அந்தத் தண்டனை காலத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுமெனவும் தெரிவித்த நீதிபதி எவ்வளவு காலம் தண்டனை வழங்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.
குற்றத்தை ஒத்துக் கொள்ளுமிடத்து தண்டனை வழங்கபபடுவதை தனது கட்சிக்காரர் விரும்பவில்லையெனவும் ஒரு வருடத்திற்கு உட்பட்ட காலத்திற்கு புனர்வாழ்வு வழங்கப்படுமாயின் மட்டுமே குற்றத்தை ஒத்துக் கொள்ள எதிரி விரும்புகின்றார்.
எனவே இந்த வழக்கை விசாரணைக்கு திகதி குறிக்கும்படி எதிரி தரப்பு சட்டத்தரணி வேண்டிக் கொண்டதையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

ad

ad