புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014


விஜயகாந்தின் கூட்டணி பேரம் :நெல்லை சமக மாநாட்டில்
சரத்குமார் கடும் தாக்கு - படங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று நடைபெற்றது. மாநில அவை தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
தென்மண்டல செயலாளர் என்.சுந்தர் வரவேற்று பேசினார்.


கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசியபோது,   ‘’நெல்லை மாவட்டம் பல்வேறு பெருமைகளை கொண்டது. சுதந்திர போராட்டம், அரசியல், இலக்கியத்தில் ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கியது.
அகத்தியம், தொல்காப்பியத்தை தந்தது. சுதந்திர போராட்டத்தில் நெல்கட்டும் செவல் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வாஞ்சிநாதன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரை தந்த மண் இது. ‘தினத்தந்தி’ மூலம் பாமரனையும் பத்திரிகை படிக்க வைத்த சி.பா. ஆதித்தனார் தோன்றியதும் நெல்லை சீமையில்தான்.
இங்கே ராதிகா பேசிய போது, கட்சியின் மகளிர் அணி மாநாடு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை நான் வரவேற்கிறேன். அவர் மகளிர் அணி தலைவியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டால், மகளிர் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படும்.
சமத்துவ மக்கள் கட்சி தற்போது 7–வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் ஆதரவால் வளர்ந்து கொண்டு இருக்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் ஒருமுறை பீகார் சென்று இருந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் பீகார் மக்களிடம் தமிழில் பேசினார். கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. ஆனால், அங்கிருந்தவர்களுக்கு தமிழ் தெரியாது. அவர் என்ன பேசுகிறார்? என்றும் தெரியாது. காமராஜர் உண்மையை பேசிக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் நம்பியதால் அந்த கைதட்டல் எழுந்தது.
சமத்துவ மக்கள் கட்சியை ஒரு சமுதாயத்துக்குள் அடைக்க பார்க்கிறார்கள். ஆனால், இறைவனின் படைப்பில் அனைவரும் சமம். அனைவருக்கும் சிவப்பு நிற ரத்தம்தான். அனைவரும் ஒன்றுதான் என்பதால், எங்கள் இயக்கத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்தோம்.
நாடு சுதந்திரம் அடைந்த போது 565 குறுநில மன்னர்கள் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்தார்கள். அவர்களிடம் இருந்து மகாத்மா காந்தி அகிம்சை போராட்டங்கள் நடத்தி தேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தார்.
பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை. அது நாட்டுக்கும் உகந்தது இல்லை. சாதி, மத வேறுபாடுகளும் தேவையில்லை. சமத்துவம் தழைக்கும் போது நாட்டை கூறு போட முடியாது. நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நெல்லையில் மாநாடு நடப்பதாக கூறுகிறார்கள். பல ஊர்களில் இதுபோன்ற கூட்டத்தை நாம் பார்த்து இருக்கிறோம். நெல்லைக்கு வந்தால் மட்டும் அதற்கு வேறு சாயம் பூசுகிறார்கள்.
நாட்டு நடப்பை விஜயகாந்த் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களோடு மட்டும்தான் கூட்டணி என்று கூறியவர், தற்போது பா.ஜனதா, காங்கிரசுடன் கூட்டணிக்காக அலைகிறார்.
எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு சிற்பி சிற்பம் செதுக்கிக்கொண்டிருந்தார். அதை பலரும் பார்த்து வியந்தார்கள். அப்போது கடற்கரையில் சூரியன் உதித்தது. அதை மக்கள் இன்னும் ஆர்வமாக பார்த்தார்கள். அந்த சிற்பிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தனது சிற்பத்தை விட சூரியன்தான் பெரிது, என்று எண்ணினார். தானே சூரியனாக மாற வேண்டும் என்று கடவுளிடம் வரம் கேட்டு, சூரியனாக மாறினார்.
அந்த சூரியனை மேகக்கூட்டம் மறைத்தது. அப்போது சூரியனைவிட மேகம்தான் பெரிது என்று நினைத்து மேகமாக மாறினார். மேகம் மலைச்சிகரத்தில் மோதி மழையாக பெய்தது. பின்னர் மழையாக மாறினார். தொடர்ந்து அருவியாக விழுந்தார். அங்கே ஒரு சிற்பி சிலை செதுக்கிக்கொண்டிருந்தார். மலையில் உள்ள பாறைகளை உடைத்து பல சிற்பங்கள் செதுக்கி வருவதாக அவர் தெரிவித்தார். இதைக் கண்ட அவருக்கு மீண்டும் சிற்பியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கடவுளிடம் கேட்டார். ஆனால், சிற்பி வேலையை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டதாக கடவுள் கூறிவிட்டார்.
இதே போல் விஜயகாந்த் நிலைமை தற்போது உள்ளது. தனது நிலையை மறந்துவிட்டு, அந்த சிற்பி போன்று கூட்டணிக்காக கட்சிகளிடம் மாறி, மாறி பேரம் பேசி வருகிறார். இது கேலிக்கூத்தானது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தயவால் சட்டசபைக்கு சென்றீர்கள். எதிர்க்கட்சி தலைவராக உட்கார வைக்கப்பட்டீர்கள். யாரால் இந்த கவுரவம் கிடைத்தது?
சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா முதல்–அமைச்சர் ஆக வேண்டும், தி.மு.க. கூண்டோடு அழிய வேண்டும் என்று விஜயகாந்த் கூறினார். இப்போது அவரது நிலை என்னவாயிற்று?
நாங்கள் வெறும் தேர்தலுக்காக மட்டும் கூட்டணி சேரவில்லை. தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தோம். பஞ்சபூதங்கள் போல் அ.தி.மு.க. கூட்டணி பலம் பெற்று இருக்கிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது.

நாங்கள் பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை எதிர்பார்க்கவில்லை. கொடுத்ததை பெற்றுக்கொள்வோம். பெற்றதில் வெற்றி காண்போம்.  ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இல்லை. அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும். அதன் மூலம் ஜெயலலிதா பிரதமராக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’என்று தெரிவித்தார்.

ad

ad