புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2014

இந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. சீர்திருத்தம் நிறைவேற்றம்

தென்னாபிரிக்கா கைவிட்டதால் இலங்கை, பாக். வாக்களிப்பை தவிர்ப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்களை கொண்டுவரும் தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) நிர்வாகக் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய
சீர்திருத்த சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது ஐ. சி. சி. யின் முழு அங்கத்துவ நாடுகளில் 8 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டது. எதிர்ப்புக் குழுவின் முன்னணியில் நின்ற தென்னாபிரிக்கா கடைசி நேரத்தில் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
தென்னாபிரிக்கா நம்பிக்கை துரோகம் செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியது.
நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சீர்திருத்தத்தின்படி ஐ. சி. சியின் நிர்வாக கட்டமைப்பு, நிதி விவகாரம் மற்றும் எதிர்காலப் போட்டி அட்டவணைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற இணை அங்கத்துவ நாடுகளுக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
புதிய மாற்றத்திற்கு அமைய டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் திட்டம் முழுமையாக நிராகரிக்கப்படுகிறது. பதிலாக 2017 ஆம் ஆண்டில், நிறுத்தப்பட்ட சாம்பின்ஸ் கிண்ணத் தொடர் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவர் நாரைன்ஸ்வாமி ஸ்ரீனிவாசன் எதிர்வரும் ஜூலை தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஐ. சி. சியின் தலைவராக பதவி ஏற்கிறார்.
கொண்டுவரப்பட்டிருக்கும் ஐ. சி. சியின் புதிய சீர்திருத்தங்கள் சம்பிரதாயபூர்வமாக ஐ. சி. சி. சட்ட விதிக்குள் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளது. இதில் 5 உறுப்பு நாடுகளைக் கொண்ட அதிகாரம் மிக்க புதிய நிறைவேற்றுக் குழு உருவாக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு நிரந்தர அங்கத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டது. அடுத்த இரு அங்கத்துவங்களையும் நிர்வாகக் குழு தேர்வு செய்யும்.
தற்போதைய கட்டமைப்பில் ஐ. சி. சி.யின் முக்கிய தீர்மானங்கள் அதன் 10 முழு அங்கத்துவ நாடுகளைக் கொண்ட நிர்வாகக் குழுவினாலேயே எடுக்கப்படுகிறது.
இந்தப் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ. சி.சி. நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கடும் விவாதம் இடம்பெற்றது. இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட 10 முழு அங்கத்துவ நாடுகள் 7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டிய நிலையில் இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்த சட்டமூலம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கொழும்பில் அண்மையில் நடத்திய விசேட கூட்டத்திலும், சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிப்பது என தீர்மானித்திருந்தது.
எனினும் கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் நடத்த நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தீவிர எதிர்ப்பு வெளியிட்டு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் இரட்டை நிலைப்பாட்டுடன் இருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டது.
“தென்னாபிரிக்கா எமக்கு துரோகம் செய்துவிட்டது” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் சகா அஷ்ரப் குறிப்பிட்டார். “நேற்று இரவுதான் (வெள்ளிக்கிழமை) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வந்ததாக எம்மிடம் கூறினார்கள். இது எமக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது” என்றும் அஷ்ரப் குறிப்பிட்டார்.
ஐ. சி. சி.யின் சர்வதேச வருவாயில் இந்தியா 80 வீதமான பங்களிப்பை செய்கிறது. அதற்கு அடுத்து இங்கிலாந்து, அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபைகள் கிரிக்கெட் பொருளாதாரத்தில் வல்லமை கொண்டதாக இருக்கின்றன. இந்நிலையில் புதிய திருத்தத்தின் மூலம் இந்த மூன்று பலம்பொருந்திய நாடுகளுக்கு அப்பால் ஏனைய 7 முழு அங்கத்துவ நாடுகளுக்கும் அதிக நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளன.
இது முழுமையாக பணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் குற்றம் சுமத்தியுள்ளார். அதேபோன்று ஊழல் எதிர்ப்பு குழுவான வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு புதிய சீர்திருத்தத்திற்கு கவலை வெளியிட்டுள்ளது. இது ஐ. சி. சி. சட்டத்திற்கு முரணானது என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஐ. சி. சி. யின் ஒளிபரப்பு உரிமம் மற்றும் சந்தைப்படுத்தலில் இந்தியா, இங்கிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு அதிக அதிகாரம் வழங்குவதால் ஏனைய அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் இலாபம் ஈட்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் ஜைல்ஸ் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
புதிய சீர்திருத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்கென விசேட நிதி ஒன்றை உருவாக்குவது, டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களிடையே ஒப்பந்தங்களை செய்துகொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கான டெஸ்ட் போட்டிகளை ஒருங்கிணைந்து அட்டவணை ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ. சி. சி.யின் இணை அங்கத்துவ நாடுகளான ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், அயர்லாந்து, பபுவா நியூகினியா, ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவையும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
எனினும் ஐ. சி. சி.யின் தலைவர், மற்றும் முக்கிய பதவிகள், நிதி மற்றும் வர்த்தகக் குழுவுக்கான உறுப்பினர்கள் இந்திய, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேவிய கிரிக்கெட் சபையில் இருந்தே பரிந்துரைக்க வேண்டும் என புதிய சீர்திருத்தம் கூறுகிறது.

ad

ad