புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2014

முன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்? – சிறிலங்கா கலக்கம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்தமாத முற்பகுதியில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவன பணியகத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனமே ஏற்பாடு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம், தமது கடப்பாட்டை மீறியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்டீபன் ராப்புடன் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனும் கலந்து கொண்டிருந்தார்.

கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிட இணைப்பாளரும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியுமான சுபினய் நந்தியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்தே, இந்தக் கூட்டத்தை புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததாக, சிறிலங்காவின் அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

இந்த இரகசியச் சந்திப்பு பற்றிய விபரம், தெரியவந்ததை அடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோபமடைந்து, கொழும்புக்குத் தெரியாமல் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது குறித்து புலம்பெயர்ந்தொருக்கான அனைத்துலக அமைப்பை கண்டித்துள்ளார்.

உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாமல் உள்ளூர் பணியகம் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது.

சந்திப்பின் போது, வன்னியின் கிழக்குப் பகுதியில் நடந்த இறுதிக்கட்டப் போர் பற்றி, அமெரிக்க குழுவினர் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளிடம் விசாரித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள தகவல்களின்படி, சிறப்பு படையணிகளில் இடம்பெற்றிருந்தவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி போராளிகள், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் மூலம் பயன்களைப் பெற்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட தகவல்களை, அமெரிக்கா தமது தீர்மானத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் முன்னாள் போராளிகளுக்கான நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டது.

ad

ad