புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014

எழுவர் விடுதலையை தடுத்தால் தமிழ் நாடே யுத்த பூமியாகும்! திரையுலகம் எச்சரிக்கை

திரை அமைப்புகளின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் (இடமிருந்து) பாடலாசிரியர் தாமரை, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்ஸி தலைவர் அமீர், இயக்குநர்கள் ஆர்.கே.
செல்வமணி, பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, கரு.பழனியப்பன்.
ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடுவித்து அதனை காக்க வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தமிழ்த் திரையுலகம் உறுதுணையாக இருக்கும்.
எந்தப் பிரச்னையிலும் சினிமாக்காரர்கள் மூக்கை நுழைக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு போராட வேண்டியது, போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியது எங்களின் கடமை.
உலக நாடுகள் பலவும் மரண தண்டனையை ஒழித்து வரும் இந்த காலக் கட்டத்தில், 10 கோடி தமிழர்களின் நம்பிக்கை கனவை கலைக்கும் விதத்தில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒவ்வொரு நாளும் எத்தனை இரவுகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் செத்து செத்து பிழைத்து இருப்பார்கள். சிறையில் இருந்தவர்களை விட அவர்களைப் பிரிந்து வெளியில் வாழ்ந்து கொண்டிருந்த அற்புதம்மாள் போன்றவர்களுக்கு எத்தனை எத்தனை வலிகள் இருந்திருக்கும்.
10 கோடி தமிழர்களின் மன பிரதிபலிப்புகள்தான் இப்போது விடுதலை செய்தி வருகிற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
தமிழ் இனம் எங்கோ ஒரு மூலையில் எழுந்து நிற்கிற இந்த செய்திக்கு, தமிழக முதல்வர் தாய்மை உள்ளத்தோடு முடிவு எடுத்திருக்கிறார். இதற்காக தமிழக முதல்வருக்கு உலக தமிழர்களின் கண்ணீர் நன்றிகள்.
மறத்தல், மன்னித்தல் மனித மாண்பு. ஆனால் அகிம்சை பேசிய காந்தி கட்சியில் இருப்பவர்களுக்கு இரக்கமில்லையே.
எந்தெந்த ரூபத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பை முன்னெடுத்து செல்ல வேண்டுமோ, அந்த வழியில் உலகத் தமிழர்களிடையே இதை தமிழ்த் திரையுலகம் எடுத்துச் செல்லும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வரின் முடிவுகளுக்கு தமிழ்த் திரையுலகம் உறுதுணையாக நிற்கும் என்றார் பாரதிராஜா.
கூட்டத்தில் இயக்குநர்கள் செல்வமணி, வி.சேகர், நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் பேசினார்கள்.

ad

ad