புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

பாஜவுடன் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணியா? 

பாஜவுடன் தொகுதி ஒதுக் கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் 

விஜயகாந்த் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம் பெற்றுள்ளன.திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜவை பொறுத்த வரையில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது.

பாமகவுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிகவை பாஜ கூட்டணியில் இழுக்கும் முயற்சியும் நடந்து வந்தது. ஆனால், பாஜ அணியில் இடம் பெற 20 தொகுதிகள் வழங்க வேண்டும். அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தேமுதிக வைத்தது. இதில் சில கோரிக்கைகளை பாஜ தரப்பில் ஏற்கவில்லை. இதை தேமுதிக ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், பாஜ கூட்டணியில் இடம் பெறுவது குறித்து விஜயகாந்த் தொடர்ந்து மவுனம் கடைப்பிடிக்கிறார்.அது மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணலை விஜயகாந்த் நடத்தி வருகிறார். இதனால், ஒருவேளை 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. நேர்காணலின் போது யாருடன் கூட்டணி, தனித்து போட்டியிடலாமா என்பது குறித்தும் விஜயகாந்த் கேட்டார். அதில், கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று ஒரு சிலரும், தனித்து போட்டியிடலாம் என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக காங்கிரசுக்கும், தேமுதிகவுக்கும் இடையே ‘திடீர்‘ நெருக்கம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன், தேமுதிக கூட்டணி வைத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக பேச்சு நடந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் மூவரும் வருகிற 14ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச உள்ளனர்.பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் 13ம் தேதி சென்னையில் இருக்க விஜயகாந்த் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள் ளார். காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு அன்று மாலை விஜயகாந்த் டெல்லிக்கு புறப்பட்டு செல்வார் என்று தெரிகிறது.

இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், மின்வெட்டு உள்ளிட்ட பல் வேறு பிரச்னைகள் குறித்து மனு கொடுப்பதற்காக தான் பிரதமர் மன்மோகன்சிங்கை விஜயகாந்த் சந்திக்க உள்ளார் என்று தேமுதிகவை சேர்ந்த ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். பிரதமருடனான விஜயகாந்த் சந்திப்பை, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமரை சந்திக்க விஜயகாந்த்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad