புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
அதேசமயம், அத் தீர்ப்பின்படி மூவரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் கபில் சிபல் புதன்கிழமை கூறியதாவது:
"ராஜீவ் காந்தி கொலையாளிகளின் தூக்குத் தண்டனையைக் குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்ததில் காட்டிய ஆர்வத்தை ராஜீவ் கொலையாளிகள் விஷயத்தில் காட்டாதது வியப்பளிக்கிறது.
ராஜீவ் கொலையாளிகளுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலின் வலியுறுத்திய கருத்து.
ஆனால், அதன் பிறகு உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பை அளித்துள்ளது. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார்.
இதையடுத்து, ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இந்த விவகாரம் எனது துறை ஆய்வின் வரம்புக்குள் வரவில்லை' என்று மட்டும் கபில் சிபல் பதில் அளித்தார்.
சிதம்பரம் கருத்து: இந்த விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் செய்தியாளர்களிடம் கருத்துக் கேட்டதற்கு, "மூவருக்கும் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டதால் எனக்கு மகிழ்ச்சியென்றோ, மகிழ்ச்சி இல்லை என்றோ கூறத் தேவையில்லை' என்று மழுப்பலாகக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: ""ராஜீவ் படுகொலையால் ஏற்பட்ட பாதிப்பு எப்போதுமே ஈடுசெய்ய முடியாதது. இந்த வழக்கில் மூன்று கைதிகளையும் "குற்றமற்றவர்கள்' என நீதிமன்றம் குறிப்பிடவில்லை. மூவரின் கருணை மனுக்கள் 2000-ஆம் ஆண்டில்தான் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கருணை மனு மீது முடிவெடுக்க ஆகும் காலதாமதத்தை வைத்து தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆயுள் சிறை விதிக்கும் தீர்ப்பு விவாதத்துக்கு உரியதாகும்'' என்றார் சிதம்பரம்.
ஆனால், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசு முடிவெடுக்கும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசனை செய்திருக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு: இந் நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசைக் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக செயல்படுமானால், அதன் நடவடிக்கை சட்டத்தின் ஆய்வுக்கு உள்படுத்தக் கூடியதாக அமையும். தூக்குத் தண்டனையை ஆயுள் சிறையாகக் குறைக்கும் தீர்ப்புக்கும், தண்டனை பெற்றவரை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. சிறையில் உள்ள கைதியை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால், அது அரசியலமைப்பு விதிகளுக்கும், சிறைச்சாலை நெறிமுறைகளுக்கும் உள்பட்டதாக இருக்க வேண்டும். நாட்டின் பிரதமராக இருந்தவரோடு மேலும் 17 இந்தியப் பிரஜைகள் கொல்லப்பட்ட வழக்கில் மூவரும் தூக்கு தண்டனை பெற்றவர்கள் என்பதை தமிழக அரசு மறந்து விடக் கூடாது. இந்த விஷயத்தில் பொறுப்பற்ற வகையில் தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது' என்றார்.

ad

ad