புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

ராகுல் காந்தியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு-தி மு க காங்கிரஸ் காலில் மீண்டும் விழப் போகிறதா ?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தயவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த திமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையொட்டி, திமுக அணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தில்லி துக்ளக் லேனில் உள்ள தனது இல்லத்துக்கு புதன்கிழமை வரவழைத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து "தினமணி' நிருபர் கேட்டதற்கு திருமாவளவன் அளித்த பதில்:
"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தொடரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த மசோதா; எஸ்சிஎஸ்பி எனப்படும் தாழ்த்தப்பட்டோர் நலன்கள் தொடர்புடைய துணைத் திட்டம், டிஎஸ்பி எனப்படும் பழங்குடியினர் துணைத் திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்; தனியார் துறை வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு, இந்திய ஆழ்கடல் பகுதியிலேயே தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வகை செய்யும் படகுகள், மீன் பிடி வலைகளை மத்திய அரசே வழங்க வேண்டும்; தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்களில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஜெனீவாவில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற ஆதரவு தரும்படி ராகுலிடம் மனு அளித்தேன். மற்றபடி பொதுவான அரசியல் நிகழ்வுகளை மட்டும் பேசினோம்' என்று திருமாவளவன் கூறினார்.
பின்னணி என்ன? இச்சந்திப்பு குறித்து காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகையில், "திமுகவும் காங்கிரஸýம் மீண்டும் ஓரணியில் சேரும் வாய்ப்புகள் தொடர்பாக இரு தலைவர்களும் பேசினர். தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக பாஜக அணியுடனோ காங்கிரஸýடனோ சேருவது பற்றி இதுவரை தெளிவுபடுத்தவில்லை. ஆகவே, திமுகவும் காங்கிரஸýம் தனித்தனியாகப் போட்டியிட்டால் அது மற்ற அணிகளுக்கு (அதிமுக, பாஜக) சாதகமாக அமையும் என்பதை திருமாவளவனிடம் ராகுல் விளக்கினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த சில கட்சிகள் தற்போது திமுக அணியில் சேர்ந்து விட்டதை திருமாவளவன் சுட்டிக்காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
"பாஜக அணி, அதிமுக, தேமுதிக ஆகியவை தனித்தனியாகத் தேர்தல் களம் கண்டால் காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்; எனவே, கொள்கை அடிப்படையில் அல்லாது எதார்த்த அடிப்படையில் தற்போதைய அரசியல் நிலையை அணுகும்படி திமுக தலைமையிடம் கூறும்படி ராகுல் அறிவுறுத்தியதாகவும் காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறின.
காங்கிரஸ் மீது அதிருப்தி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக 2011-ஆம் ஆண்டில் தமிழக உளவுத் துறை ஐஜியாக இருந்த ஜாஃபர் சேட், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோருடன் பேசியதாகக் கூறப்படும் செல்போன் உரையாடல் பதிவுகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாயின.
இதன் பின்னணியில் சில காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று திமுக மேலிடம் சந்தேகிக்கிறது. இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை அண்மையில் காங்கிரஸ் மேலிடம் சார்பில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சந்தித்தபோது, கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, தமிழ்நாட்டில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை ஜி.கே. வாசனுக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
"கடந்த ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லாதபோதும் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களித்தது போல, இம்முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருச்சி சிவாவை விலக்கிக் கொண்டு வாசனுக்கு வாய்ப்பு அளிக்கலாம்' என காங்கிரஸ் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு வெளியில் இருந்து திமுக ஆதரவு அளித்ததாகவும் தற்போது, காங்கிரஸýடன் ஒட்டோ, உறவோ வேண்டாம் என்ற நிலையில் திமுக இருப்பதாக குலாம் நபி ஆசாத்திடம் கருணாநிதி கூறிய பதிலால் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில்தான் கனிமொழி-ஜாஃபர் சேட் செல்போன் உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழலில், திமுக அணியில் இருக்கும் திருமாவளவனை நேரில் அழைத்து ராகுல் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ad

ad