புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

அ.இ.ம.கா கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டி

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இதற்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 வேட்பாளர்கள் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாக அதன் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் கூறினார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று மாலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாட் நேற்று இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை விடுத்தார்.
இதுவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்டு வந்த எமது கட்சி, கொழும்பில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார, கலாசார சிக்கல்களுக்கு தீர்வுகாணும் பொருட்டே இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலிலும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென எமது கட்சியின் அதியுயர்பீடம் முடிவு எடுத்திருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் அண்மைக் காலமாக கொழும்பு மாவட்ட சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கிய பலதரப்பட்ட பிரச்சினைகளை நாம் தலையிட்டு தீர்த்து வைத்ததனால் மக்களின் ஆதரவு எமக்கு அமோகமாக கிடைத்துள்ளதுடன் நாம் போட்டியிட வேண்டியது அவர்களின் விருப்பமாக இருந்து வருகிறதெனவும் தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான பிரதான குறிக்கோள், இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கான கல்வி மற்றும் வீடமைப்பு துறைகளில் சிறந்த இடத்தைப் பெற்றுக் கொடுப்பதேயாகும் எனவும் அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதி பொருளாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கூறுகையில் :- கொழும்பு மாவட்ட சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கமையவே நாம் போட்டியிட முன்வந்துள்ளோம். மக்களின் ஆதரவு உள்ள நிலையில் அரசியல் ரீதியாக எமக்கு அங்கீகாரம் தேவைப்படுகிறது. எமக்கு ஆகக்கூடியது 05 பிரதிநிதித்துவமாவது கிடைக்குமென எதிர்பார்க்கிறோமெனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் ஊடகவிய லாளர்கள் கேட்ட வினாக்களுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் றிசாட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையோ அல்லது வேறு எந்த அரசயில் கட்சியையோ அழிப்பதோ அல்லது வீழ்த்துவதோ எமது நோக்கமல்ல.  இதுவரை கொழும்பு சிறுபான்மை யினருக்காக தேர்தலில் போட்டியிட்டவர்கள் அவர்களது பிரச்சினைகளை நெருங்கிப் பார்க்கவில்லை. அவர்களால் செய்ய முடியாமல் போனதை, அவர்கள் அக்கறைப்படாததை நாம் முன்வந்து செய்து உதவ வேண்டுமென்பது மாத்திரமே எமது ஒரே குறிக்கோளாகும்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங் களிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களது எண்ணிக்கைக்கும் கொழும்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் சிறுபான்மை மாணவர்களது எண்ணிக்கையிலும் பாரிய வித்தியாசம் உண்டு. இது குறித்து எந்தவொரு அரசியல்வாதியும் சிந்தித்து பார்த்ததில்லை. இவற்றுக்காக குரல் கொடுப்பதற்கே நாம் இம்முறை போட்டியிடுகின்றோம்.
அரசாங்கத்துடன் பல கட்சிகள் இருப்பதனால் நாம் அவர்களுடன் சேர வேண்டிய தேவைப்பாடு எமக்கு இல்லை. எமக்கு வேண்டியது மக்களது அங்கீகாரம் மாத்திரமேயாகும். பிரபா கணேசனும் எமது கட்சி சார்பில் மயில் சின்னத்தில் போட்டி யிடவுள்ளார். ஆனால் அவருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு மிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா கேள்விகளுக்கு பதிலளிக் குகையில் :-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே நாம் அந்த கட்சியிலிருந்து வெளியேறினோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவர்களுடன் இணைந்து போட்டியிட நாம் முயற்சித்தபோதும் அவர்கள் எம்முடன் உடன்பாட்டிற்கு வரவில்லை.
இதனால் எமது கட்சி பல ஆசனங்களை இழக்க நேரிட்டது. இந்நிலைமை தொடர நாம் விரும்பவில்லை. எனவே அவர்களுடன் கூட்டு சேர்வது சாத்தியமாகாது. மேலும் நாம் அரசாங்கத்துடன் இருக்கின்றோமென்பதற்காக கைகட்டி வாய் பொத்தியிருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படும் போது எமது சக்தியைக் கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறோமெனவும் தெரிவித்தார்.

ad

ad