புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

“இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் அந்த முருகனின் தாயார் சோமணி, இருபத்து மூன்று வருடங்களாக மகனைப் பற்றி வாய் திறக்காதவர் தற்போது மனம் விட்டு பேசியிருக்கிறார்.
தமிழக சஞ்சிகையொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,
‘இலங்கையில் எங்கே வசித்தீர்கள்? அங்கே எப்படி இருந்தீர்கள்?
யாழ்பாணத்தில் இருந்து முப்பது கிலோமீற்றர் தூரம் இருக்கிற இத்தாவில், ‘பளை’, யாழ்ப்பாணம்தான் எங்கட ஊர். நல்ல உழைப்பாளி குடும்பம். விவசாய காணியெல்லாம் இருந்தன. என்னோட மனுஷன் (கணவர்) நல்ல முருக பக்தர். அங்கிருக்கிற கோயிலில் பூசாரியா வேலை செய்தவர். எனக்கு ஐந்து ஆம்பிள பிள்ளைகள். நான்கு பொம்பள பிள்ளைகள். மூத்தவ மகள், இரண்டாவதா பிறந்த மகன் போராளியா இயக்கத்திற்கு போயிட்டவர். மூணாவதா முருகன் பிறந்தவர்.
போராளியாக சென்ற மூத்த மகன் எங்கு இருக்கிறார்?
போராளியா இருந்த என்ட மகன் போர் நிறுத்த காலகட்டத்தில் இயக்க வேலை விபத்தில் மாவீரராகிட்டார். அப்போ இயக்கத்துக்கும் சிங்கள ஆர்மிக்கும் சண்டையிருந்தது. இந்தியன் ஆர்மி வந்தபின்னாடி எங்கட சனத்த அப்போ ஒன்டும் பண்ண இல்ல. நல்லாதான் இருந்தாங்க. மகன் இறந்தபோது அந்த உடலை வீட்டுக்கு கொண்டு வந்திருந்தவர்கள். மக்கள் சனங்க எல்லாம் மரியாதை செலுத்தினவ. அப்போ இந்தியன் ஆர்மியும் வந்து நின்டு பார்த்துட்டு துயரம் விசாரிச்சுட்டு போயிடுச்சு. ஏதும் கேக்க இல்ல. அந்த நேரம் எங்கட வீட்டுல இந்திராகாந்தி படம், ராஜீவ்காந்தி படம் மாட்டி வச்சிருந்தினம். அந்த படம் பள்ளிகூட போட்டியில முருகன் கீறி (வரைந்து) வாத்தியாரிடம் நூறு ரூபாய் பரிசு வாங்கினவர். அதைத்தான் ப்ரேம் போட்டு சுவற்றில் தூக்கியிருந்தினம். இந்தியன் ஆர்மி அதையும் விசாரிச்சவா. இப்படி என்டு நாங்க விவரிச்சு சொன்னோம்.
அதன் பிறகு ஒரு தடவ இந்தியன் ஆர்மி வந்தவ. அப்போ மாவீரராகிப்போன எங்கட பெரிய மகன் படத்தையும் இந்திராகாந்தி பக்கத்தில மாட்டி வச்சிருந்தினம். பார்த்துட்டு ஒன்டுமே சொல்லல.
இந்தியன் ஆர்மி அங்கிருக்கும் தமிழர்களுக்கு எதிராக திரும்பியதா? உங்களுக்கு எதிராக ஏதாவது செய்ததா?
இந்திய இராணுவத்துக்கும் இயக்கத்துக்கும் பிரச்சனையாகிப்போன பிறகு நிலமை ரொம்ப மோசமாயிட்டது. யாரை நம்பினமோ அவங்களே இப்படியாகி நிக்கிறப்போ என்னெண்டு சொல்றது. மோசம்தான். அந்த சமயத்தில நாங்க மாவீரராகிப்போன எங்கட மகனின் படத்தை கழட்டி மண்ணுக்குள்ள வச்சிட்டோம். அப்போ ஒரு தடவா இந்தியன் ஆர்மி வந்தது. சுவத்தை பார்த்தது. இந்திராகாந்தி படமிருக்கு. ராஜீவ்காந்தி படமிருக்கு. உங்கட மகன் படம் எங்கேண்டு கேட்டது. பயத்துல இப்படி எடுத்து மறைச்சுட்டோம்னு சொன்னம். அப்படி செய்யக்கூடாது. என்னயிருந்தாலும் அவர் ஒரு போராளி. மாவீரர் படத்தை அப்படி வைக்கக்கூடாது. எங்க இருக்குண்டு கேட்டவ. மண்ணுக்குள்ள இருந்து எடுத்தோம். அதை இந்தியன் ஆர்மியே வாங்கி துடைச்சு ஒழுங்குபடுத்தி சுவத்தில மாட்டி போட்டு போனவ. பிறகு எங்க வீட்டுக்கு வரவேயில்ல.
சரி, முருகன் எப்போது இயக்கத்திற்கு போனார். எப்போது இந்தியாவுக்கு வந்தார். நினைவிருக்கிறதா?
‘‘ஓம். நன்றாக நினைவிருக்கு அய்யா. என்ட பெரிய மகன் இறந்த பிறவுதான் முருகன் இயக்கத்திற்கு போனவர். எனக்கு மனசெல்லாம் அடிச்சுக்கொண்டது. இப்பதான் ஒரு பிள்ளைய கொடுத்துட்டோம். இன்னொரு பிள்ளையையும் கொடுக்கணுமா. என்னாகுமோ என்ற தவிப்பு ஒருபுறம். மறுபுறம் நாட்டுக்காக இதையெல்லாம் செய்யத்தான வேணும்டு நினைப்பு. தவியா தவிப்போம். அப்பதான் ஒரு தடவ வீட்டுக்கு முருகன் வந்தவர். எங்காவது வெளிநாட்டுக்குப் போ என்றோம். பார்க்கலாம்மென்டு சொல்லிட்டுப் போனவர். பிறகு கனநாள் கழிச்சு வெளிநாடு போறேன்னு சொன்னவ. அப்பத்தான் இங்கன தமிழ்நாட்டுக்கு வந்தார்.
அதன் பிறகு என்ன நடந்தது? முருகன் என்ன ஆனார் என்ற விவரம் எல்லாம் உங்களுக்கு எப்போது தெரியவந்தது?
ஒண்டுமே புரிய இல்லப்பா. இங்க தங்கியிருந்துட்டு வெளிநாடு போகணுமின்டுதான் வந்து நின்னவர். பிறகு எந்த தகவலுமில்ல. இப்படி நடந்துபோச்சுதுன்டு எனக்கு கன காலம் கழிச்சுதான் தெரியவந்தது. என் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கும். அம்மா கஷ்டப்படுவா என்டு மறைச்சிருக்கலாம். பேப்பர்ல வந்த படத்தை காட்டி உன்ட மகன்தானே என்டு அங்க கேட்டவ. எனக்கு குழப்பம். அப்போ மொட்டையடிச்ச தலையோட இருந்தவர். பேரு வேற முருகன் என்டு இருக்கு. அங்க அவரோட உண்மையான பேரு சிறீகரன். இதனாலயும் குழப்பம். மனசு கிடந்து அடிச்சுக்கொண்டது.
பிறகு எப்போது இங்கே வந்தீர்கள். எத்தனை ஆண்டுகள் கழித்து முருகனை பார்த்தீர்கள்?
ஒன்னறை வருஷம் கழிச்சு, என்ட மகனோட முகத்தை பார்க்கனுமென்டு நான் பழைய பேப்பரை எல்லாம் கிளறி பார்த்துட்டு இருக்கிறப்போ, ஒரு கடிதாசி கிடந்தது. எடுத்து பார்த்தா என்ட மகன் முருகன் எழுதினதுதான். “அம்மா, எனக்கொரு மகள் பிறந்திருக்கா. நீங்க வந்து அழைச்சிட்டுபோய் வளர்த்துக்கோங்க. எனக்கு என்னவும் நடக்கலாம்” என்றபடி எழுதியிருந்தவர். ஓ....எனக்கு மனசு அடிச்சி போச்சி அய்யா.. எப்ப கல்யாணம் நடந்தது. எப்போ குழந்தை பிறந்தது என்டு தவிச்சு போயிட்டேன். எப்படியாவது வந்து பார்க்கலாமெண்டால் இயலல. பிள்ளைங்க பயந்துகிட்டு விடல. பணம்கொடுக்க இல்ல.
கடைசியா நான் நாள் கணக்கா தேங்கா மட்டைய எல்லாம் சேகரிச்சு, அதை வித்துபோட்டு பணத்தை சேர்த்து வச்சிதான் இங்க வந்து சேர்ந்தன். என்னடாப்பா இப்படி நடந்ததுன்னு கேட்டன். “கர்ப்பிணியானவளை அப்படியான இடத்துக்கு அனுப்ப யாரும் சம்மதிப்பாங்களாம்மாண்டு நடந்ததை சொன்னவர். எனக்கு என் மகன் செய்திருப்பாண்டு நம்ப இல்ல. எங்கட நேரம். இப்படியாகிப்போச்சு.”
சரி உங்க மருமகளையும், பேத்தி அரித்திராவையும் எங்கு சந்தித்தீர்கள்?
என்ட மருமவ நளினிய பூந்தமல்லி சிறையிலதான் பாத்தன். மனசெல்லாம் அடிச்சுக்கொண்டது. என்னெண்டு சொல்ல. கடைசியா அவதான் எனக்கு ஆறுதல் சொன்னவ. அப்பதான் பேத்தி எங்க இருக்கா என்டு கேட்டன். கோயமுத்தூர்ல இருக்கெண்டா.. எனக்கு ஒன்றும் புரிய இல்ல. என்ன ஆச்சுதென்றால் குழந்தை அரித்திரா உள்ள ரொம்பவும் பயந்தபடியே இருந்திருக்கா. இதுக்கு மேலயும் உள்ளுக்க வச்சிருக்ககூடாதென்டு, கோயமுத்தூருக்கு அனுப்பியிருக்கா. அதே வழக்குல கூட இருந்த சக சிறைவாசி ஒருவர், அவரின் அம்மாவிடம் அனுப்பி வளர்க்க ஒப்படைத்திருந்தவ. பிறகு நான் தேடிப்போய் அலைஞ்சுதான் என்ட பேத்திய பார்த்தன். பையனமாதிரியே இருந்தவ. கூட்டிகிட்டு வந்தன். இங்கிருந்து சிலோனுக்கு அழைச்சுட்டு போறதுதான் பெரும் பாடாகிப்போச்சு.
1998ம் ஆண்டு, முதன் முறையா தீர்ப்பு வந்தபோது எங்கு இருந்தீர்கள். விடுதலையாகிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்தீர்களா?
அப்போ நான் இங்கதான் இந்தியாவில் நின்டோம். (சென்னையில்) தீர்ப்பு கிடைக்க மூன்று மாதம் முன்னவே இங்க வந்துட்டன். கொஞ்சம் பேரை தவிர்த்து மற்றவ எல்லாம் விடுதலையாகிடுவா. இவங்க ரெண்டு பேரில் ஒருத்தர் விடுதலையாகிடுவான்டுதான் நம்பியிருந்தோம். அன்னைக்கு பார்த்து நிறைய பேருக்கு சமைச்சு வச்சி, நிறைய முட்டைய எல்லாம் வாங்கி சமைச்சு வச்சிருந்ததோம். கடைசியா பார்த்தா எல்லாருக்கும் தூக்கு தண்டனைன்னு சொல்லிட்டாவ. சத்தம்போட்டு அழமுடியல. இங்க வாடக வீட்டுல இருக்கினம். நான்தான் முருகனின் அம்மான்டு யாருக்கும் தெரிய இல்ல. அப்படி ஒரு பிரச்சினை ஆனபடியால் சத்தம்போட்டு அழமுடிய இல்ல. குழந்தை அரித்திராவுக்கு ஏன் அழறோமெண்டு தெரியல. ஆனா அவளும் அழுதவ. அதை என்னென்டு சொல்றது.
‘‘சரி. உங்கள் மகன் முருகனை சந்திக்கும்போதெல்லாம் என்ன உணர்வீர்கள்? பட்ட கஷ்டமெல்லாம் எப்படி?
ஓம் மப்பா. அந்த கதையென்டு போனால் பொழுது விடியாதப்பா. என்ட மகனை பார்க்கனுமெண்டு போக வழித் தெரியாம போய் எங்கெங்கோ அலைஞ்சிருக்கேன். ஜெயில் வாசலிலேயே ரெண்டு மூன்று நாள் படுத்துக்கிடப்பேன். அப்பவும் அனுமதி கிடைக்காது. பிறகுதான் பார்க்க விடுவாங்கள். ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போதும், வெளிய வரும்போதும் என்ட புள்ள உயிரோட வருவானா. கிடைப்பானா என்டுதான் வருத்தமா இருக்கும். இங்க போகாத கோயில் இல்ல. வேண்டாத சாமி இல்ல.
கடைசியா ஒரு ஆசைய வளத்துக்கிட்டன். என்னோட உயிர் எங்கேயும் போகக்கூடாது. இலங்கையிலும் சரி, லண்டனிலும் சரி. எங்கயும் போகக்கூடாது. இந்த மண்ணுலதான் உயிர் போகனும். ஏனெண்டால் அப்பதான் என் மகன் முருகன் வந்து எனக்கு இறுதி கிரியை செய்ய ஏலும். மத்த இடமெண்டால் முடியாது. என்னோட மத்த பிள்ளைங்க எல்லாம் எங்கிருந்தாலும் இங்க வந்துடுவா இல்ல. முருகனால அப்படி வெளியில எங்கும் வர முடியாதில்ல. அதனால் என் உயிர் இங்கதான் இந்தியாவுக்குள்ள போகனுமெண்டு வேண்டிகிட்டன். வேற என்ன செய்ய முடியும்.
உங்கள் மருமகள் நளினியை சந்திக்கும்போது என்ன பேசுவீர்கள்?
‘அய்யோ... என்னப்பா கேட்டியல். அவ என்ட மவளப்பா.. கொள்ளை ஆசை வச்சிருப்பா. ஒவ்வொரு முறையும் நளினிதான் எனக்கு ஆறுதல் சொல்லுவா. இப்போ பார்த்தபோதும் அப்படித்தான். ஒன்டும் கவலைபடாதியள். கெட்டது ஏதும் நடக்காது என்று நம்பிக்கை சொன்னவ. என்ன இருந்தாலும் மருமகளோட மனசுல என்ன இருக்குமெண்டு தெரியாதா?.. ஒன்பது பிள்ளைய பெற்றவளாயிற்றே. தான் பெற்ற குழந்தைய பார்க்க முடியேல. மடியில கிடத்தி கொஞ்ச முடியலென்டு எவ்வளவு சுமை இருக்கும் நளினிகிட்ட. சொல்லி மாளாதுப்பா.
இந்தமுறை சந்திச்சப்போ மகள் அரித்திராவோட போட்டோவ எடுத்து வந்தீர்களா என்டு கேட்டா. நான் வழக்கம்போல இல்லேம்மா. அதுல நிறைய பிரச்சினை இருக்கு. அவளோட படம் எப்படியாகிலும் வெளியில வந்தா பிள்ளையோட படிப்பு போயிடும். அவ மனமும் வருத்தமாயிடுமென்டு சமாதானம் சொன்னன். அந்த வலைகம்பியிலேயே தலைய அடிச்சிக்கிட்டு நளினி அழுதவா. நான் என்ன செய்ய முடியும். நளினி ரொம்பவும் அழுதவ.
இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். இன்றைய நிலையில் எப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு நிற்கிறீர்கள்?
ஒரு பிரச்சனையுமில்லேப்பா. ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் கிடந்தோம். இப்போ அந்த கஷ்டம் குறைஞ்சிருக்கு. முருகனுக்கு அடுத்தவர் சுவிஸ்லாண்டுக்கு போனவ. அப்படியே ஒவ்வொருத்தரா ஏழு பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு கூப்பிட்டவர். கடுமையான உழைப்பு. அந்த குளிரில் நேரம் காலம் பார்க்காம உழச்சவ. இப்போ பரவாயில்ல. எல்லோருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. முருகனோட அப்பா, நான், அரித்திரா எல்லாம் ஒரு வீட்ல இருந்தோம். எங்கட மனஷன் (கணவர்) அந்த குளிரில் இருக்க முடியேல. கடைசி காலத்தில நான் என்னோட மண்ணுலேயே கிடந்து போறன் என்டு இத்தாவில், “பளைக்கு” கிளம்பிட்டவ. அங்க எங்கட குடும்ப முருகன் கோயில் இருக்கு. பூசாரியா இருந்துகிட்டு அங்கேயே தங்கியிருக்கிறவர். நான் வருஷம் ஒருகா வந்து என்ட மனுஷனையும் இங்க முருகனையும் பார்த்துட்டு லண்டன் போவன். நாங்க யாருமே அவரோட இல்ல. சொந்தகாரங்கதான் துணையா இருக்கிறாங்க.
கடைசியா இப்போது 2011ம் ஆண்டு மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டபோது. தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டபோது....?
(கண்கள் கலங்கி குரல் தழுதழுக்கிறது.) என்னவெண்டு சொல்ல. அப்போ நாங்க எல்லாரும் லண்டனில்தான் நிற்கிறம். உடனே வந்துபோக விசா கிடைக்க இல்ல. நானும் என்னோட மனுஷனும், அரித்திராவும் லண்டனுக்கு வெளியே ஒரு ஊரில் இருந்தம். லண்டனுக்குள் ரயிலில் வர பதிமூன்று மணிநேரமாகும். எங்க ஏழுபேர் பிள்ளைகளோட கவலையும் கூடிப்போச்சு. பத்து பதினைஞ்சு நாள் யாரும் யார் வீட்லேயும் சமைக்க இல்ல. சாப்பிட இல்ல.
நாங்க இருக்கிற பகுதியில எந்த கோயிலும் இல்ல. லண்டனுக்குள்ளாதான் ஒரு பெருமாள் கோயில் இருக்கு. நாங்க மூன்று பேரும் புறப்பட்டு அங்க போயிட்டோம். இரவில் உறவுக்காரங்க வீட்டில் இருப்போம். பகல் முழுக்க அந்த கோயிலில் கிடப்போம். சாமிதான் துணை. சாமிதான் விடிவென்டு வேண்டிக்கொண்டு கிடப்போம். ...ஏ... யப்பா... அந்த காலத்த என்னவெண்டு சொல்ல. ஒரு நாளா, ரெண்டு மாதமா, 23 வருஷமப்பா... நான் அழுத கண்ணீரு ஆற்றை நிரப்பியிருக்குமே.
என்னெண்டு சொல்ல.. அங்கால இலங்கை நாட்டிலும் நிக்க முடிய இல்ல. இங்கால வெளி தேசத்திலயும் நிக்க முடிய இல்ல. இங்க வந்து நிக்கலாமென்டால் அதுவுமில்ல. அங்கொரு பிள்ளை, இங்கொரு பிள்ளையெண்டு ஓடி ஓடி நான் பட்ட கஷ்டம் அந்த சாமிக்குதான் தெரியும். அழுதழுது கண்ணே போயிடுச்சு. லண்டன் பெருமாள் கோயில்ல கிடந்தப்போ பேத்தி அரித்திராதான் எனக்கு ஆறுதல் சொன்னவ. அழவே மாட்டா. தைரியமா நிப்பா. ஆனா பட்டுன்னு காணாம போயிடுவா.. பார்த்தா கோயிலில் ஒரு பக்கமா இருந்து வருவா.
கண்ணுல்லாம் சிவந்து போயிருக்கும். வீங்கியிருக்கும். மனசுதீர தனியா அழுதுட்டு முகத்தை கழுவி வந்து நிக்கிறா என்டு தெரியும். என்னவெண்டு கேட்க ஏலும். அந்த பிள்ளையோட நிலமைய நினைச்சு பார்க்க ஏலல.. மனசு உடைஞ்சு போவேன்.
உங்களுக்கென்று ஒரு விருப்பம், அதாவது ஆசை இருக்குமில்லையா. என்ன மாதிரியான விருப்பத்தை வைத்திருக்கிறீர்கள். நினைக்கிறீர்கள்.?
எனக்கொரு நம்பிக்கை இருக்கு அய்யா. என்ட புள்ளைங்க அறிவு, சாந்தன், முருகன் மூன்று பேருக்கும் நல்லது நடக்கும். மூன்று பேரோட தூக்கு தண்டனையும் ரத்தாகும். சோனியா அம்மா, முதல்வர் அம்மா, மற்ற தலைவர் ஐயாக்கள், இந்த நீதிமன்றம் எல்லாம் மனசு வைக்கும் என்டு நம்பியிருக்கேன். வெளியில வந்திடுவாங்க. அப்போ எனக்கொரு ஆசை பாக்கியிருக்கு.. என்ட மத்த பிள்ளைகளுக்கு எல்லாம் நல்லபடியா கல்யாணம் செய்து வச்சிருக்கோம். யாருக்கும் எந்த குறையும் வைக்கல. அதனால நளினிக்கும் முருகனுக்கும்... கோயில்ல வச்சி முறையா எல்லாரையும் அழைச்சு.. அவங்களுக்காக எவ்வளவோ பேரு, இங்க இந்த மண்ணுல கஷ்டப்பட்டிருக்காங்க. பாடுபட்டிருக்காங்க. அப்படி எல்லாரையும் அழைச்சு ஒரு கல்யாணத்தை செய்து வச்சிடனும். அது ஒரு குறையா இருக்கு. பிறகு கண்ண மூடினேன் என்டாலும் பரவாயில்லய்யா..
இங்குள்ளவர்களுக்கு கடைசியா என்ன சொல்ல வருகிறீர்கள்? என்ன கருத்தை வைத்திருக்கிறீர்கள்?
நான் என்னய்யா சொல்ல முடியும். காஞ்சிபுரம் போய் செங்கொடியோட இடத்தை பார்த்து கும்பிட்டு வந்திருக்கேன். லண்டனில் இருந்து மற்ற பிள்ளைகள் வந்தாலும் அங்க போய் கும்பிட்டுதான் திரும்புவார்கள். எங்கள் வீட்டு பூசை அறையில், எங்களின் குலதெய்வமாக செங்கொடியின் படமும் இருக்கு. இந்த இடத்தில எத்தனை பேர் இப்படி தியாகம் செய்து அவர்களுக்காக பாடுபட்டிருக்கினம். எத்தனை பேர் சிறைபட்டிருக்கினம். எத்தனை பேர் கொடுமைய சந்திச்சிருக்கினம். ஓ...ப்பா....(கண்கள் கலங்கி நிற்கிறது) யாரை மறக்க முடியும். யாரை விடமுடியும். அத்தனை பேரையும் நான் மனசால கும்பிட்டுகிட்டுதானய்யா இருக்கேன்.
பா. ஏகலைவன்

ad

ad