புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

வடக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதனால் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது

வடக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பிரிந்து நிற்பதனால் எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

முரண்பாடுகளை களைந்தெறி ந்து விட்டு அனைவரும் ஒன்று படுவதனாலேயே எமது சகல உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறினார். முல்லைத்தீவு கோட்டத்திற் குட்பட்ட தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருடந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் ஏ. சி. ரியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயனாதன், வட மாகாண சபை உறுப்பினர்களான யாஸின் ஜவாஹிர் (ஜனோபர்), ரிப்கான் பதியுதீன், கு. ரவிகரன், ஜெயதிலக, முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் புரையோடிக் கிடந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாகாணங்களை எப்படி அபிவிருத்தி செய்கின்றதோ அது போல வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளது.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் என்னுடைய அனுமதியில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதை, மின்சாரம், பாடசாலை உள்ளிட்ட என்ன அபிவிருத்திகளாக இருந்தாலும் என்னுடைய அனுமதியில்தான் அத்தனை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நான் அபிவிருத்தி என்று பார்க்கும் போது அங்கு இன, மத, பிரதேச ரீதியில் பிரித்து பார்ப்பதில்லை, எந்த கிராமங்கள் அபிவிருத்தியின்றி காணப்படுகிறதோ அத்தனை கிராமங்களையும் நான் அபிவிருத்தி செய்திருக்கிறேன்.
இறுதி கட்ட யுத்தத்தின் போது ஓமந்தைக்கு வந்த சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை இரவு, பகலாக நின்று அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், பாதுகாப்பு, இருப்பிட வசதி என்பனவற்றை அமைச்சராக இன்றி ஒரு சாதாரண மகனைப் போல களத்தில் நின்று உதவி செய்திருக்கிறேன்.
இவ்வாறு வந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றியதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்திருக்கிறேன் மட்டுமன்றி மெனிக்பாமிலிருந்த உயர்தர மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கு கொழும்பிலுள்ள இந்துக் கல்லூரி, சாஹிரா கல்லூரி, ரோயல் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து திறமையான ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியேகமாக வகுப்புகளை நடத்தினோம்.
அதன் பலனாக இன்று ஒரு சிலர் என்னைக் காணுகின்ற போது அன்று நீங்கள் எங்களுக்கு தந்த அந்த பிரத்தியேக வகுப்புகளினால்தான் நாங்கள் இன்று கணிதத் துறைகளிலும், கலைப் பிரிவுகளிலும் பல்கலைக்கழகத்தில் கற்கிறோம் என்று சொல்வதை கேட்கும் போது மட்டில்லா மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக தூய்மையான எண்ணத்துடன் பணியாற்றிய என்னை வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் பிளைப்புகளுக்காக ஒரு சில தமிழ் பத்திரிகைகளையும் இணையத் தளங்களையும் பயன்படுத்தி என்னை ஒரு இனவாதியாக, மதவாதியாக, ஒரு இனத்திற்கு மாத்திரம் சேவை செய்யும் ஒருவனாக, தமிழ் மக்களின் விரோதியாக காட்ட முயல்கின்றனர்.
அண்மையில் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு செய்தி எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணி வழங்குவதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு காணி வழங்க மறுப்பதாகவும் அந்த செய்தி காணப்பட்டது. அதுமட்டுமன்றி புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை முல்லைத்தீவில் குடியேற்ற முயற்சிப்பதாகவும் உண்மைக்கு புறம்பானதும் கொஞ்சம்கூட மனிதாபிமானமற்ற வகையிலும் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடுகின்றார்கள்.
வட மாகாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு நிறைய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இருப்பதற்கு காணி, வீடு, படிப்பதற்கு ஒரு பாடசாலை, தொழுவதற்கு ஒரு பள்ளிவாசல் இதைத் தவிர அவர்கள் எதுவும் கேட்கவில்லை. எனவே, வடக்கில் வாழும் முஸ்லிம்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இந்த வட மாகாண சபைக்கும், அதனைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.
எனவே, தனித்து நின்று நாம் இந்த மாகாணத்தையும், ஐந்து மாவட்டத்தையும் அபிவிருத்திசெய்ய முடியாது. அனைவரும் ஒன்றுமைப்பட்டே அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்றார்.

ad

ad