புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2014

தாமதத்துக்கு தண்டனை!

ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது
என்று பார்ப்பதைவிட, தாமதமாக வழங்கப்படும் நீதியைப் போலவே, தாமதமாக செயல்படுத்தப்படும் தண்டனையும் அநீதியானது என்கிற பார்வையில்தான் அணுக வேண்டும்.
ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டது என்பது, தமிழகத்துக்கு ஒரு நிரந்தரக் களங்கம் என்பதிலும், அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத, எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாத "துன்பியல் நிகழ்வு' என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அதே நேரத்தில், அந்தப் படுகொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றத்தால் கருதப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை என்பதையும் தண்டனை அனுபவித்தவர்கள் அனைவருமே அம்புகள் தானே தவிர, எய்தவர்கள் அல்ல என்பதையும் மறந்துவிடக்கூடாது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள் பொட்டில் அடித்ததுபோல, தண்டனைக் கைதிகளின் மனநிலையை வெளிச்சம் போடுகிறது.
"தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் 11 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள முடியாது. தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் மிகழ்ச்சியாக இருப்பதாக மத்திய அரசு கூறும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தண்டனை பெற்ற கைதிகள் தாங்கள் படும் மனவேதனையை நிரூபிக்கத் தேவையில்லை' என்று தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. எப்போது தூக்கு என்று தெரியாமல் நித்திய கண்டம், பூரண ஆயுசாக அவர்கள் தவித்திருக்கும் தவிப்பை, ராஜீவ் காந்தி கொலையை மறந்துவிட்டு நினைத்துப் பார்த்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கும் நியாயம் புரியும்.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ஒரு ஆபத்தும் இருக்கிறது. ஆட்சியாளர்களுடனும், வலிமையான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடைய ஒருவருக்கு கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவரது கருணை மனு வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்பட்டு, இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு வருங்காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. காலதாமத்தைக் காரணம் காட்டி ராஜீவ் கொலையைளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, மாநில அரசின் ஒப்புதலுடன் விடுதலை செய்ய வழிகோலும் அதே வேளையில், கருணை மனுவை நிராகரிக்க கால அளவு நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்பதால், அதுவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"அரசியலமைப்பின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் (குடியரசுத் தலைவர், ஆளுநர்) தகுதியைத் கருத்தில் கொண்டு, கருணை மனுக்கள் மீது அவர்கள் இத்தனை காலத்துக்குள்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற காலவரம்பை அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்கள் வகுக்கவில்லையே தவிர, நியாயமான காலத்துக்குள் அவர்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் நியாயமற்ற, விவரிக்க முடியாத, தேவையற்ற தாமதம் ஏற்படுமானால் அப்போது மனுதாரர்களின் கோரிக்கையில் தலையிட வேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு' என்கிறது தீர்ப்பு.
ராஜீவ் கொலை வழக்கு தண்டனையை ஒதுக்கிவைத்துவிட்டு கருணை மனு மீதான காலதாமதத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு பாராட்டுகள். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருக்கும் தமிழக அரசின் முடிவும் வரவேற்புக்குரியது.
கடைசியாக ஒரு கேள்வி - ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியே, ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கும்போது, தமிழக அரசின் முடிவு வேதனை அளிக்கிறது என்றும், முன்னாள் பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் பாமர மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறாரே, குடும்பத்திலேயே குழப்பமா?

ad

ad