புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

ஜெனிவாவில் வெற்றி நிச்சயம்-மனித உரிமைகள் மையம் 
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலம் கடத்தினாலும், இன்று தொடர்ச்சியான இரண்டு கண்டனப் பிரேரணை, ஐ. நா. மனித உரிமை சபையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்று பல சம்பாஷனைகள், கதைகள், வதந்திகள் என்னவெனில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில், சிறிலங்கா மீதான சர்வதேச சுதந்திர விசாரணக்கான 3வது கண்டனத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதே.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலங்கா விடயத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டவன் என்ற முறையிலும், மனுக்கள், அறிக்கைகளை வெளியிட்டதுடன், பல முக்கிய புள்ளிகளை, நிபுணர்கள், இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடியவன் என்ற முறையிலும் 25வது கூட்டத் தொடரில் ஒரு கண்டனப் பிரேரணை மேற்கொள்ளப்படுமானால், அதனது உள்ளடக்கத்தினை இப்பொழுது கூறுவது மிக கடினமான நிலையில், கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் எந்த தடையுமின்றி வெற்றியடையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஐ. நா. மனித உரிமைச் சபையில் மீண்டும் சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய மனித உரிமை மதிக்காத சிறிலங்காவின் நண்பர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளதை கண்டு சிலர் அச்சம் அடைந்துள்ளனர். இவ் நாடுகள் மட்டுமல்லாது, பாகிஸ்தான், வெனிசூலா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு பக்கபலமாக மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகித்தாலும், இவர்கள் யாராலும் சிறிலங்காவை கண்டனப் பிரேரணையிலிருந்து காப்பாற்ற முடியாது என்பதை இங்கு ஆதாரபூர்வமான ஆய்வினுடாக கூறுகிறேன்.
ஐ.நா. மனித உரிமை சபையின் அங்கத்தவர்கள், வாக்களிப்பு பற்றி ஆராயும் முன்னர், புலம் பெயர் தேசத்து தமிழர்கள், சிறிலங்கா அரசின் அணுகுமுறை பற்றி முதலில் நாம் ஆராய்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
புலம்பெயர் தமிழர்கள்
மிக அண்மையில் உதயமாகியுள்ள பெரும்பாலான புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய அரசியல் பிரச்சினையை, தங்களது சுயநலத்தை மனதில் கொண்டு, தமது தனிப்பட்ட செல்வாக்கை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை மிகவும் கவலை தரும் விடயமாகும். புலம் பெயர் தேசத்தில், உள்நாட்டு தேர்தலில் பங்குகொள்வதற்காக தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் போல் சிலர் காட்சியளிக்கின்றனர்.
இவற்றை தவிர்த்து ஒவ்வொரு புலம்பெயர் வாழ் செயற்பாட்டாளர்களும், தமிழ் தேசியத்தின் நலன்களை மனதில் கொண்டு தமது செயற்திட்டங்களை முன் வைக்க வேண்டும். அதாவது அவர்களது சிந்தனை செயற்பாடுகள் யாவும், தமிழீழ மக்கள் மேல் திமிர் பிடித்த சிறிலங்கா ஆட்சியாளரான ராஜபக்சக்களின் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு, போர்க்குற்றம், சர்வதேச மனித அபிமானத்திற்கு எதிரான செயற்பாடு போன்றவற்றை சர்வதேச மட்டத்தில் முன் வைக்கவேண்டும். இதை தவிர்த்து தாம் அங்கு சென்றோம், இங்கும் நிற்கிறோம் என காண்பிப்பது சுயநலத்தின் மறுவடிவமே.
சிலர், தம்மைபற்றிய செய்தி பத்திரிகை, இணையத்தளங்களில் வருவதே தமிழீழ விடுதலை போராட்டமென எண்ணுகிறார்கள். வேறு சிலர் தம்மை யாரும் நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்ய மாட்டார்களா என எண்ணி, சர்வதேச மட்டத்தில் தேவையற்ற அரசியல் நகர்வுகளுக்கு “ஆமா” போட்டு, அவலப்படும் நாட்டு மக்களின் அபிலசைகளை மலிவாக விற்று வருகிறார்கள். நோபல் பரிசில் ஆர்வம் கொண்டவர்கள், தமிழ் தேசியத்தின் விடயங்களை தவிர்த்து, தமது சுயசெயற்பாடுகளிற்கு நோபல் பரிசினை தேடுவது நல்லது.
முன்பு, விசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.
தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக வேலை திட்டங்களை முன்வைக்கிறார்கள். ஆகையால் படம் காட்டும் தமிழ் செயற்பாட்டாளர்கள் சக்திவாய்ந்த சர்வதேசத்தவர்களின் வேலை திட்டங்களுக்கு இடையூறு செய்யாது தமது சுயநலத்திற்கான வேலைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஐ. நா. மனித உரிமை சபை என்பது நிச்சயம் ஓர் அரசியல் கலப்படம் கொண்ட அமைப்பு. ஆனால் இது அரசியலிற்கான அமைப்பல்ல. ஐ.நா. வின் பல மனித உரிமை ஒப்பந்தங்கள், அவற்றின் 1வது சாரத்திலேயே சுயநிர்ணய உரிமை பற்றி கூறியிருந்தாலும், ஐ. நா. மனித உரிமை சபையில் தற்பொழுது சுயநிர்ணய உரிமை என்ற விடயம் வலுவிழந்து வருகிறது.
சிறிலங்கா விடயத்தில் தற்பொழுது, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயம் சூடுபிடித்துள்ள இவ்வேளையில், இங்கு சமூகமளிக்கும் மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தமிழரது சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவதற்கு முனைவது, ஓர் குழப்பத்தை உருவாக்கும் வேலை திட்டமே.
ஐ. நா. பொதுச் சபை, பாதுகாப்புச் சபை ஆகிய இரு அமைப்புக்களுமே சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவதற்கு, உகந்த இடம். ஆகையால் சுயநிர்ணய உரிமையில் அக்கறை கொண்டவர்கள், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை சபையை தவிர்த்து, நியூயோர்க்கிற்கு சென்று தமது பரப்புரை செய்வதே விரும்பதக்கது.
சிறிலங்காவின் அணுகுமுறை
இலங்கைத்தீவின் 1948ம் ஆண்டு சுதந்திரத்தை தொடர்ந்து பதவிக்கு வந்த எந்தவொரு பௌத்த சிங்கள அரசும், தமிழர்கள் விடயத்தில் மறுதலான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை. ஆகையால் சிறிலங்கா அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் உரிமை ஏதும் கொடுக்குமென யாரும் கனவு காண முடியாது. ஆகையால் சர்வதேச அழுத்தம் இல்லாது தமிழர் எந்த அரசியல் தீர்வையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
தமிழர்கள் விடயத்தில் பௌத்த சிங்கள அரசுக்களின் அணுகுமுறை என்பது, அடக்குமுறையும், யுத்தமும் என்பது இன்று நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சிறிலங்கா அரசின் செயற்பாடும் தமிழ் மக்கள் மனதில் நல்ல விடயமாக அவர்களது ஞாபகத்தில் பதிந்தாக சரித்திரமே கிடையாது. இவ்வியடமாக பக்கக் கணக்கில் எழுத முடியும். அவற்றை தவிர்த்து ஓர் சில விடயங்களை மட்டும் இங்கு தருகிறேன்.
வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் நிதி அரசிற்கு தேவைப்படுகிறது, ஆனால் இவை தவிர்ந்த மற்றைய பிரதேசங்கள் அரச நிதியில் வேலைத் திட்டங்கள் நடைபெறுகிறது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களது நிதியில் கிறிஸ்தவ தேவாலயங்கள், சைவக்கோயில், பாடசாலைகள் திருத்தப்பட்டு அவற்றின் வேலைகள் முடியும் நேரத்தில், அவ்விடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவம், அரச நிதியில் அவ் திருத்தவேலைகள் செய்து புனருத்தாரணம் செய்யப்பட்டதாக எழுதப்பட்ட கல்லை அவ் கட்டிடத்தின் சுவர்களில் பதிக்குமாறு வழங்கி வருகின்றனர். இவற்றை சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கின், குறிப்பாக யாழ் வளைகுடாநாட்டின் வளர்ச்சியாக வெளிநாடுகளுக்கு காட்டி வருகின்றனர்.
எதிர்வரும், ஐ. நா. மனித உரிமை சபையின் 25வது கூட்டத் தொடரில் சர்வதேசத்திற்கு சினிமா காட்டுவதற்காக சிறிலங்கா அரசினால் சில வீடியோக்கள் தயார் செய்யப்பட்டு வருவது பற்றி யாவரும் அறிந்ததே. இவ்வீடியோக்களில் பல பொய்யான கற்பனையான தகவல்கள் பதிவு செய்வதற்காக இராணு கட்டுப்பாட்டில் உள்ள சிலரை பயமுறுத்தி சாட்சியங்கள் பதிவாக்கியுள்ளனர்.
இதில் விசேடமாக, சில சர்வதேச நிறுவனங்களும், அரசுகளும் ஆவணப்படுத்தியுள்ள சில சம்பவங்களை பொய்யென நிரூபிப்பதற்காக இவை நடைபெறுகின்றன. சிறிலங்காவை பொறுத்த வரையில் அங்கு எந்த சுதந்திரமான கருத்திற்கோ, எழுத்திற்கோ இடமில்லை என்பதை சர்வதேசம் நன்கு அறியும். இதேவேளை பல மிரட்டல்களின் மத்தியில் சில பல பொய்யான தவல்கள் அடங்கிய அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.
வேடிக்கை என்னவெனில், சிறிலங்கா அரசின் புனர்வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்பவர்களுக்கு மீண்டும் புனர்வாழ்வு வழங்குவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு எண்ணுகிறதாம். இவ்விடயத்தில் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு உள்ளடக்குமானால் மிக நல்ல விடயம்.
ஆனால் ஒன்று, சிறிலங்கா அரசு சில விமானங்களை ஒழுங்கு செய்து புலம்பெயர் வாழ் மக்களை சிறிலங்காவிற்கு அழைத்து இவ் புனர்வாழ்வினை கொடுக்குமனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது ஊர் கிராமங்களை நேரில் பார்ப்பதற்கு பல இளைஞர், யுவதிகள் மிகவும் ஆவலாக உள்ளர்கள் என்பதை சிறிலங்கா அரசிற்கு அறியத் தருகிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து புலம்பெயர் வாழ் இளைஞர், யுவதிகள் தமது நிலங்களில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, பௌத்தமயப்படுத்தல், இராணுவமயப்படுத்தல் போன்ற அட்டூழீயங்களை நேரில் பார்வையிடுவதற்கு வழி வகுக்கும்.
அங்கத்துவ நாடுகள்
கபோன் நாட்டினுடைய ஜெனிவா, ஐ. நா. பிரதிநிதி, திரு என்டொங் ஏலா என்பவரே, ஐ. நா. மனித உரிமை சபையின் 2014ம் ஆண்டிற்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஐ. நா. மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள். பட்டியல் பிராந்தியா ரீதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகள் - அல்ஜீரியா, பேனி, பொட்ஸ்வானா, புங்கீனோ பசோ, கொங்கோ, கொட் தி வார், எதியோப்பியா, கபோன், கென்யா, மொறோக்கோ, நமீபியா, சியாறீலீயோன், தென் ஆபிரிக்கா.
ஆசிய நாடுகள் - சீனா, இந்தியா, இந்தோனிசியா, ஜப்பான், கசாகஸ்தான், குவைத், மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரிய குடியரசு, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வியாட்னாம்,
லத்தீன் அமெரிக்கா கரீபியன் நாடுகள் - ஆஜந்தீனா, பிறேசில், சிலீ, கொஸ்ர றீக்கா, கியூபா, மெக்சிக்கோ, பேரு, வெனீசுலா.
மேற்கு ஐரோப்பாவும் மற்றைய நாடுகள் - அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மானி, அயார்லாந்து, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் - செக் குடியரசு, ஏஸ்ரொனியா, மொன்ரநீகிரோ, ருமெனியா, ராஷ்யா, மசீடொனியா.

புதிய அங்கத்தவர்கள்
2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட 1வது கண்டனத் தீர்மானத்தில், 47 அங்கத்துவ நாடுகளும் வாக்களிப்பில் பங்குகொண்டன. இதில் 24 நாடுகள் தீர்மானத்திற்கு சார்பாகவும், 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தனர்.
இதேபோல், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 22வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட 2வது கண்டனத் தீர்மானத்தில், 46 அங்கத்துவ நாடுகளும் மட்டுமே வாக்களிப்பில் பங்குகொண்டன. இதில் 25 நாடுகள் தீர்மானத்திற்கு சார்பாகவும், 13 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்த அதேவேளை, கபோன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி, 47 அங்கத்துவ நாடுகளில், 14 நாடுகளது சேவை காலம் முடிவுற்ற, இவர்களுக்கு பதிலாக 14 புதிய நாடுகள், மூன்று வருடங்களிற்கு அங்கத்துவ பெற்றுள்ளன. 14 புதிய நாடுகளின் பட்டியல் பிராந்திய ரீதியாக பின்வருமாறு.
ஆபிரிக்க நாடுகள் - அங்கோலா, மொறிற்ரனியா, லீபியா, யூகாண்ட ஆகிய நாடுகள் வெளியேறியுள்ள அதேவேளை , அல்ஜீரியா, மொறோக்கோ, நமீபியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன.
ஆசிய நாடுகள் - மலேசியா, மாலைதீவு, காற்ரார், தாய்லாந்து ஆகிய நாடுகள் வெளியேறியுள்ள அதேவேளை, சீனா, சவூதி அரேபியா, வியாட்னாம் ஆகியவற்றுடன் மாலைதீவு மீண்டும் இம்முறையும் தெரிவாகியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா கரீபியன் நாடுகள் - ஈகுவாடொர், கொத்தமாலா வெளியேறியுள்ள அதேவேளை, கியூபா, மெக்சிக்கோ ஆகியவை தெரிவாகியுள்ளன.
மேற்கு ஐரோப்பாவும் மற்றைய நாடுகள் - ஸ்பெயின், சுவிற்சாலாந்து வெளியேறியுள்ள அதேவேளை , பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகியவை தெரிவாகியுள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் - போலந்து மோல்டாவ குடியரசு வெளியேறியுள்ள அதேவேளை, ரஷ்யா, மசீடொனியா ஆகியவை தெரிவாகியுள்ளன.
இதில் வெளியெறியுள்ள போலந்து ஐரோப்பிய யூனியன் நாடாகவுள்ளதுடன், தெரிவாகிய மசீடொனியா ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவத்திற்கு தெரிவாகியுள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
33 நாடுகள்
ஏற்கனவே அங்கத்துவம் வகிக்கும் 33 நாடுகளும், சிறிலங்கா மீதான கண்டனப் பிரேரணை மீது எப்படியாக வாக்களித்தார் என்பதை கவனிப்போம். 33 நாடுகளினது பட்டியல் கீழ் வருமாறு.
பேனி, பொட்ஸ்வானா, புங்கீனோ பசோ, கொங்கோ, கொட் தி வார், எதியோப்பியா, கபோன், கென்யா, சியாறீலீயோன், இந்தியா, இந்தோனிசியா, ஜப்பான், கசாகஸ்தான், குவைற், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொரிய குடியரசு, ஐக்கிய அரபு இராச்சியம், ஆஜந்தீனா, பிறேசில், சிலீ, கொஸ்ர றீக்கா, பேரு, வெனீசுலா, ஆஸ்தீரியா, ஜேர்மானி, அயார்லாந்து, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா, செக் குடியரசு, ஏஸ்ரொனியா, மொன்ரநீகிரோ, ருமெனியா ஆகிய நாடுகளில்.
இறுதியாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான கண்டனப் பிரேரணைக்கு, இவ் 33 நாடுகளில், சர்பாக 19 நாடுகளும், எதிராக 7 நாடுகளும், நடுநிலையாக 6 நாடுகளும், கபோன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த இரு கண்டனப் பிரேரணையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் கணிப்பின் அடிப்படையில், 25வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணைக் வாக்கெடுப்பிற்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக அது வெற்றியாக நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வாக்கெடுப்பு ஒன்று நடைபெறும் பட்சத்தில், முன்னைய வாக்கெடுப்பிற்கு 25வது கூட்டத் தொடருக்குமிடையில் மூன்று அல்லது நான்கு வாக்கு வித்தியாசங்களே காணப்படும்.
அதாவது கடந்த வாக்கெடுப்பில் போலந்து சிறிலங்கா மீதான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது, ஆனால் ரஷ்யா தீர்மானத்தை எதிர்த்தே வாக்களிக்கும், தென் ஆபிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தவறும் பட்சத்தில், இவ் வாக்களிப்பில் நடுநிலைமையே வாகிக்கும்.
இதற்கு தென் ஆபிரிக்காவில் வாழும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழாகள் முக்கிய காரணிகளாவார்கள். கடந்த முறை நடைபெற்ற வாக்களிப்பில் மலேசியா நடு நிலைமை வாகித்தது குறிப்பிடத்தக்கது. ஆனல் இம்முறை இவ் வாக்கு நிச்சயம் எதிராகவே வாக்களிக்கப்படும். சிலவேளைகளில் இம்முறை எம்முறையும் இல்லாதவாறு, நடுநிலை வாக்குகள் கூடுதலாக காணப்படலாம்.
மனித உரிமை சபை பற்றி என்னால் முன்பு கூறப்பட்ட எந்த ஆருடமும், எந்த மாற்றமுமின்றி நிறைவேறியுள்ளது. என்னை பொறுத்த வரையில், வாக்களிப்பு வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்பதே முதல் விடயம். அங்கு எவ்வளவு வாக்குகள் பெற்றனர் என்பது இரண்டாவது விடயமாகவே பார்க்கப்படும்.
தென் ஆபிரிக்கா தமிழர்கள் 
தென் ஆபிரிக்காவில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் மிக கௌரவத்துடன் சமனாக நடத்தப்படுகிறார்கள். 1823ம் ஆண்டு பிரித்தனிய கலனித்துவ ஆட்சிக்காலத்தில், இலங்கைதீவில் தேயிலை தோட்டங்களில் வேலைசெய்வதற்காக தென் இந்தியாவிலிருந்து தமிழர் வரவழைக்கப்பட்டனர்.
1860 காலப்பகுதியில் தென் ஆபிரிக்காவில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து தமிழர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் இன்று தென் ஆபிரிக்காவின் கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் வேலை செய்வதை காண்பது மிக அரிதாகவுள்ளது. இவர்கள் தென் ஆபிரிக்காவில் - புத்திஜீவிகளாகவும், கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், வர்த்தகர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், வங்கிகளிலும், தேசிய பாதுகாப்பு பிரிவுகளிலும் மிகச் சிறந்து விளங்குகிறார்கள்.
அன்று தேயிலை தோட்டங்களில் வேலைசெய்வதற்காக வரவழைக்கப்பட்ட தமிழர்களில், பத்துவீதத்திற்கு குறைவான மலைநாட்டுத் தமிழர்களே, இன்று தேயிலை தோட்டங்கள் தவிர்ந்த மற்றைய துறைகளில் வேலைசெய்கின்றனர். மற்றவர்கள் பரம்பரைபரையாக தொடர்ந்து மிகவும் குறைந்த சம்பளம், மோசமான வாழ்விடம், வாழ்க்கை முறையில் தேயிலை தோட்டங்களில் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.
இவ் அடிப்படையில்,தென் ஆபிரிக்காவின் வெள்ளையர்களின் இனவெறி ஆட்சிக்கு பல மடங்கு மேலாக, சிறிலங்காவின் பௌத்த சிங்கள இனவெறி ஆட்சி விளங்குவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நூற்று ஐம்பதிற்கு மேலான சைவக் கோயில்கள், தமிழ் பாடசாலைகள், கலாசார சமய அமைப்புக்கள் பரவலாக காணப்படுகின்றன. ஆகையால், வெள்ளை இனவெறி ஆட்சியை வென்று ஓர் சமத்துவ ஆட்சியை அமைத்துள்ள நெல்சன் மண்டலாவின் வழித்தோன்றல்கள், ஐ.நா. மனித உரிமை சபையில் எந்தவொரு இனவெறி ஆட்சியாளர்களுக்கு சார்பாக ஆதரவாளிக்க மாட்டார்கள்.
இதை அறியாத சிறிலங்கா அரசு, தென் ஆபிரிக்காவின் ஆதரவிற்கு கங்கணம் கட்டி நிற்பது மிகவும் வேடிக்கையான விடயம். இது தான் சிறிலங்கா ஆட்சியாளர்களின் அரசியலும் இராஜதந்திரமும்.
எனது பார்வையில், 1971ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி தரப்படுத்தல், தமிழ் இளைஞர்களது ஆத்திரத்திற்கும், ஆவேசத்திற்கும், அரசியல் பிரவேசத்திற்கும் வித்திட்டு, இறுதியில் முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தில் முடிந்துள்ளது.
தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, போர்க்குற்றம், மனித அபிமானக் குற்றங்களுக்கு, கூடிய விரைவில் ஓர் சர்வதேச சுதந்திர விசாரணை அமைக்க தவறும் பட்சத்தில், மீண்டும் ஓர் யுத்தம் தமிழீழ இளைஞர்களால் மேற்கொள்ளப்படுவதை யாரும் தவிர்க்க முடியாது. அவ் யுத்தத்திற்கு வேறுபட்ட ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
ச. வி. கிருபாகரன் பிரான்ஸ்
tchrfrance@hotmail.com

ad

ad