புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைக்க முடிவு செய்தன.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, எஞ்சிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவது எனத் தீர்மானிக்கப்பட்டு, உத்தேசப் பட்டியல் வெளியானது.
இந்த நிலையில், தேமுதிக 5 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதையடுத்து, தேமுதிகவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக வேட்பாளரை அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அறிவித்தார். இதனால், கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிருஷ்ணகிரி, தருமபுரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு இடங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தனித்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். விஜயகாந்த் பிரசார நிகழ்ச்சியில் பாஜக, மதிமுக கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஆனால், பாமகவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. இந்த பிரசார கூட்டங்களில் பேசிய விஜயகாந்த் வேட்பாளர் பெயரை உச்சரிக்கவில்லை. மாறாக, வேட்பாளர் பெயரை தேசியக் கட்சி அறிவிக்கும் என்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, தான் பிரசாரத்திற்கு வருவதாகவும் கூறிச் சென்றார்.
அதேபோல, தருமபுரியில் நடைபெற்ற பாமக பிரசார கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சியினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பாஜக, மதிமுக, தேமுதிகவினர் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தாங்கள் சினிமா அரசியல் நடத்தவில்லை என்றும் சிங்கங்கள் சிறு நரிகளிடம் பிச்சை கேட்காது என்றும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் தேமுதிக, பாமக இரண்டும் ஓரணியில் நீடிப்பது சாத்தியமில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில், தாங்கள் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்த தொகுதிகளில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்டால் ஏற்கெனவே அதிருப்தியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மட்டுமன்றி, சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க பாமக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக சாதிய அமைப்புகளின் நிர்வாகிகளிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறும்பட்சத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை சென்னையில் புதன்கிழமை (மார்ச் 19) வெளியிட சாதிய அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
பாஜகவும், பாமகவின் நிலையில்லாத் தன்மையால் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. தங்களிடம் ஒன்றை ஏற்கச் சொல்வதும், அடுத்த நாளே மாற்றிக் கொள்வதாகவும் இருக்கும் பாமகவின் நிலைப்பாடு பாஜகவை மட்டுமல்லாமல், ஏனைய கூட்டணிக் கட்சிகளான தேமுதிக மற்றும் மதிமுகவையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
"நாங்களாக அவர்களை வெளியேறச் சொல்ல விரும்பவில்லை. அவர்களாக வெளியேறினால் எங்களுக்கு அதனால் எந்த இழப்பும் கிடையாது. முடிந்தவரை விட்டுக் கொடுத்துப் போகத்தான் நாங்கள் நினைக்கிறோம். தேமுதிகவும், மதிமுகவும்கூட ஒத்துழைத்து வருகிறார்கள். பாமக ஜாதிக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக இருந்தால், அது பற்றிக் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், முடிவை இழுத்தடிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பாமக பிரிந்து போவதால் அவர்களுக்குத்தான் இழப்பு'' என்று பாஜகவினர் கருதுகிறார்கள்.

ad

ad