புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014



அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையுடன் சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் 19 சிக்சர்கள் அடித்து சிலிர்க்க வைத்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
மூன்று அணிகள் தலைவிதி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், தகுதி சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து–நெதர்லாந்து அணிகள் ( பி பிரிவு) சைலெட் மைதானத்தில் நேற்று மோதின. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எதிரணி பயன்படுத்திய 8 பந்து வீச்சாளர்களையும் பின்னியெடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே பாய்ன்டர் 57 ரன்களும் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கெவின் ஓ பியைரன் 42 ரன்களும் (16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு 47 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.
190 ரன்கள் இலக்கை 14.2 ஓவருக்குள் நெதர்லாந்து ‘சேசிங்’ செய்து விட்டால் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி சூப்பர்–10 சுற்றை எட்டும். தோற்றால் அயர்லாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். 14.2 ஓவர்களை தாண்டி நெதர்லாந்து இலக்கை அடைந்தால் ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இப்படி மூன்று அணிகளின் தலைவிதியை நிர்ணயித்த இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து பவுண்டரியுடன் ரன்கணக்கை தொடங்கியது.
சிக்சர் மழை
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரெனும், ஸ்டீபன் மைபர்க்கும் அயர்லாந்தின் பந்து வீச்சை சூறாவளியாய் சுழன்றடித்தனர். நாலாபக்கமும் பந்து ஓடிக் கொண்டே இருந்தது. மெக் பிரையன் மற்றும் குசாக்கின் ஓவர்களை புரட்டியெடுத்த மைபர்க் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை பறக்க விட்டார். ‘இது நேரடி போட்டியா? அல்லது சிக்சர் மற்றும் பவுண்டரியை மட்டும் காண்பிக்கும் ‘ஹைலெட்சா’ என்று பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் சந்தேகமே வந்திருக்கும். அந்த அளவுக்கு இந்த ஜோடி களத்தில் அமர்க்களப்படுத்தியது. ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவர்களில் மட்டும் 91 ரன்கள் திரட்டி பிரமிக்க வைத்தனர். பீட்டர் போரென் 31 ரன்களில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த மைபர்க் 63 ரன்களில் (23 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
ஆனாலும் நெதர்லாந்தின் வாணவேடிக்கை மட்டும் பஞ்சமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. டாம் ஹூப்பரும், விக்கெட் கீப்பர் வெஸ்லே பரேசியும் கைகோர்த்து,  தங்கள் பங்குக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். டாக்ரெலின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை ஹூப்பர் தூக்கியடித்தார். இதனால் நெதர்லாந்து அணி ஜெட் வேகத்தில் இலக்கை நோக்கி முன்னேறியது. இவர்களை எப்படி அடக்குவது என்பதே அயர்லாந்து கேப்டனுக்கு தெரியவில்லை. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜிம்பாப்வே வீரர்களும் நொந்து போய் விட்டனர்.
நெதர்லாந்து வெற்றி
டாம் ஹூப்பர் 45 ரன்களில் (15 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அவுட் ஆனார். இதன் பின்னர் பரேசி 14–வது ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் விரட்டியடித்து தங்களது லட்சியத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். நெதர்லாந்து அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரிலிங்கான வெற்றியை சுவைத்தது. பரேசி 40 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். 13.5 ஓவரில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டு செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் 175 ரன்களை குவித்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
அது மட்டுமின்றி இந்த இன்னிங்சில் நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் 19 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் ஓட விட்டனர். அதாவது 162 ரன்களை ஓடாமலேயே எடுத்து விட்டனர். அதிக சிக்சர் பதிவான இன்னிங்சாகவும் இது அமைந்தது.
‘பி’ பிரிவில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்த போதிலும், ரன்–ரேட்டில் முன்னிலை பெற்ற நெதர்லாந்து அணி சூப்பர்–10 என்ற அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
ஜிம்பாப்வேவுக்கு ஆறுதல்
முன்னதாக இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை ஜிம்பாப்வே 13.4 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிகும்புரா 53 ரன்களுடன் (21 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி ஜிம்பாப்வே நம்பிக்கையான நிலையை அடைந்த போதிலும், நெதர்லாந்தின் விசுவரூபத்தால் ஜிம்பாப்வேயின் கனவு கோட்டை உடைந்து போய் விட்டது.
தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தகுதி சுற்றில் 8 சிறிய அணிகள் கலந்து கொண்டன. இதில் ‘ஏ’ பிரிவில் வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் நெதர்லாந்தும் சூப்பர்–10 சுற்றை எட்டியுள்ளன. எஞ்சிய நேபாளம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின.
***
நெதர்லாந்து நிகழ்த்திய உலக சாதனைகள்
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணி நேற்று ஒரே நாளில் பல வியக்கத்தக்க சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு:–
* தனது இன்னிங்சில் நெதர்லாந்து அணி 19 சிக்சர்களை நொறுக்கியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 18 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.
* இந்த ஆட்டத்தில் நெதர்லாந்தும் (19 சிக்சர்), அயர்லாந்தும் (11 சிக்சர்) மொத்தம் 30 சிக்சர்கள் எடுத்துள்ளன. இதுவும் உலக சாதனை தான். இதற்கு முன்பு நியூசிலாந்து–இந்தியா (2009–ம் ஆண்டு), ஆஸ்திரேலியா–இந்தியா (2010–ம் ஆண்டு) இடையிலான ஆட்டங்களில் தலா 24 சிக்சர் எடுக்கப்பட்டதே ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது. அந்த சாதனையும் காலியானது.
* பவர்–பிளேயில் (முதல் 6 ஓவர்) நெதர்லாந்து 91 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு பவர்–பிளேயில் நியூசிலாந்து அணி 2009–ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
* நெதர்லாந்து வீரர் 30 வயதான ஸ்டீபன் மைபர்க் 17 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். 20 ஓவர் கிரிக்கெட்டில் 2–வது அதிவேக அரைசதம் இதுவாகும். இந்தியாவின் யுவராஜ்சிங் 12 பந்துகளில் (2007–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) அரைசதம் அடித்து இந்த சாதனைப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 17 பந்தில் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2012–ம் ஆண்டு) அரைசதம் அடித்திருந்தார். அவருடன் ஸ்டீபன் மைபர்க் 2–வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ad

ad