புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்
40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–
பாராளுமன்ற தேர்தல்
வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கம் எத்தனையோ பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகமே போட்டியிடும் வாய்ப்பினை இந்தத்தேர்தலில் தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, நமக்கு இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.
மக்கள் பணி
இப்போது லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். கழகத்தின் எளிய தொண்டர்கள் இப்படி மக்கள் தொண்டாற்றும் உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் கழகம் பெற்றுள்ளது போல், பாராளுமன்ற மக்களவையிலும் இது நாள் வரை இருந்திடாத அளவு கழகத்தின் சார்பில் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற தேனினும் இனிய செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆலமரம் போல் தழைத்து வளர்ந்திருக்கும் நம் கழகத்தின் ஆணிவேர், கிளைக்கழக அமைப்புகளும், தன்னலம் கருதாது உழைக்கின்ற என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளும் தான் என்பதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணமும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. 2004–ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.
இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தெருமுனை கூட்டங்கள்
தமிழக வாக்காளப் பெருமக்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் கழக அரசின் சாதனைகளை; முன்னோடித்திட்டங்களை; வளர்ச்சித்திட்டங்களை; தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.
வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக தி.மு.க.வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றோடு நேரடி சந்திப்புகள் வழியாகவும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவரவேண்டும். மொத்தத்தில், கழக உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார பீரங்கியாக மாற வேண்டும்.
அரசியல் தொண்டு
வழக்கமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை போல, இந்த நேரடித்தொடர்பு பிரச்சாரமும் மும்முரமாக நடைபெற்றிட வேண்டும். அந்த அளவிற்கு நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவடையும் வரை விழிப்புடன் களப்பணியாற்றிட வேண்டும் என்று, என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தமட்டில் பொதுவாழ்வும், அரசியல் தொண்டும் ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத தவம். பலகோடி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சுய அர்ப்பணிப்பு. எனதருமைக்கழக உடன்பிறப்புகள் அனைவரும் என் இதயத்தின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்பது எனது ஆவல்.
நீங்கள் அனைவரும் பணியாற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே“ என்பது, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு. எனவே, 40 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் வேட்பாளராக, உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுவதாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.
40 தொகுதியிலும் வெற்றி
கழக வேட்பாளர்கள் அனைவரது வெற்றியிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் உண்டு; நாம் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு. கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் அண்மையில் இணைந்த உடன்பிறப்புகள் வரை, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வண்ணம், நீங்கள் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.
‘40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்’ என்ற மகத்தான செய்தி வரும் வரை கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ad

ad