புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014


கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வழக்கம்போல கடைசி கட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்த மலிங்கா 4 விக்கெட்டுகளை
வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார்.
இருபது ஓவர் உலகக் கோப்பையை முன்னிட்டு வங்கதேசத்தின் மிர்பூரில் திங்கள்கிழமை பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெராரா அதிரடியாக ரன் குவிக்க முற்பட்டார். புவனேஸ்வர் குமார் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய அவர் வருண் ஆரோன் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்த பெராராவை, மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த முகமது ஷமி அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார். வந்த வேகத்தில் பவுண்டரி, சிக்ஸர்கள் பறக்க விட்ட ஜெயவர்தனே, அமித் மிஸ்ரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்தில் ஏமாந்தார் தில்ஷன். பகுதிநேர பந்து வீச்சாளராக வந்த சுரேஷ் ரெய்னா, கடைசி இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் சங்ககராவை 4 ரன்களில் அனுப்பி வைத்தார்.
இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், மேத்யூஸþடன் இணைந்து அதிரடியாக ரன் குவித்தார். ஆனால் எதிர்முனையில் இருந்த மேத்யூஸ் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 25 பந்துகளில் 29 ரன்கள் குவித்த சண்டிமால் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் குலசேகரா வெளுத்துக் கட்டினார்.
இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், ரோஹித் சர்மா ஜோடி மோசமான தொடக்கம் தந்தது. தவன் 2 ரன்களிலும், ரோஹித் 4 ரன்களிலும் ஏமாற்றினர். பின்னர் களமிறங்கிய "டி-20' நாயகன் சுரேஷ் ரெய்னா தனக்கே உரிய பாணியில் ரன் குவித்தார். குலசேகரா பந்தை சிக்ஸருக்குப் பறக்க விட்ட ரெய்னா, சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்தார். 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 பந்துகளில் 41 ரன்கள் விளாசி ரெய்னா பெவிலியன் திரும்பினார். ரஹானே டக் அவுட்டில் வெளியேறினார். இருபது ஓவர் ஆட்டத்துக்கு ரஹானே தேவைதானா என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் அவர் ரன் எடுக்காமல் வெளியேறி தோனியை யோசிக்க வைத்துள்ளார்.
அடுத்து கோலியும், யுவராஜ் சிங்கும் சிக்ஸர்கள் பறக்கவிட இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மலிங்கா வேகத்தில் கோலி போல்டாகி வெளியேற யுவராஜ் சிங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர் ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அஸ்வின் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி பவுண்டரிகளாக விளாசினர். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா பந்து வீசினார். 2-வது பந்தில் அஸ்வின் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் பின்னி ரன் அவுட்டானார். 4-வது பந்தில் புவனேஸ்வர் குமார் ஒரு ரன் அடிக்க, 5-வது பந்தில் அஸ்வினும், கடைசி பந்தில் அமித் மிஸ்ராவும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 148 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் மார்ச் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
தோனி பேட் செய்யவில்லை: பயிற்சி ஆட்டத்தில் 15 வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, ஃபீல்டிங் செய்த 11 வீரர்கள்தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. இளம் வீரர்களுக்கு பயிற்சியாக அமையும் என்பதற்காக தோனி கடைசி வரை பேட்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. ஆனால், அவர் ஃபீல்டிங் செய்தார். ஒருவேளை தோனி பேட்டிங் செய்திருந்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும். அதேபோல, விராட் கோலிக்குப் பதிலாக ரெய்னா 3-வது வீரராக களமிறங்கினார். கோலி 6-வது வீரராக களம் புகுந்தார்.

ad

ad