புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் 56 பக்க குற்றப்பட்டியலின் சுருக்கம்
சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், நேற்று வொசிங்டனில் வெளியிடப்பட்ட நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள் -2013 என்ற அறிக்கையிலேயே, இதுகுறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், ஒவ்வொரு மனிதஉரிமை மீறல்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டு, அதற்கு ஆதாரமான சம்பவங்கள், சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த விரிவான அறிக்கையின் சுருக்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

“பலகட்சி ஆட்சிமுறை கொண்ட அரசியலமைப்பைக் கொண்டுள்ளது சிறிலங்கா குடியரசு.

அதிபர் மகிந்த ராஜபக்ச 2010ம் ஆண்டு, இரண்டாவது ஆறாண்டுப் பதவிக்காலத்துக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் குடும்பமே அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

அவரது இரண்டு சகோதரர்கள் முக்கியமான நிறைவேற்று அதிகாரப் பதவிகளில் இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் பாதுகாப்புச் செயலராகவும் மற்றவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருக்கின்றனர். மூன்றாவது சகோதரர், நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கிறார். 


அதிபரின் மகன் உள்ளிட்ட பெருமளவான அவரது உறவினர்கள் அரசியல் மற்றும், இராஜதந்திரப் பதவிகளை வகிக்கின்றனர்.

அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களில், எல்லா பிரதான கட்சிகளும் மோசடிகளிலும், சட்டமீறல்களிலும் ஈடுபடுவதாக சுதந்திரமான பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல்களின் அரசாங்க வளங்களை ஆளும்கட்சி பயன்படுத்துவது முக்கிமான பிரச்சினை.

பாதுகாப்புப் படைகள் மீது அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை பேணி வருகின்றனர்.

பாதுகாப்புப் பரைடகள், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர்.

சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், மற்றும் ஆளும் கூட்டணியுடன் இணைந்துள்ள ஏனையோர், உயர்ந்தபட்ச தண்டனை விலக்கை அனுபவிக்கின்றனர்.

மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்ட மிகச்சிறிய எண்ணிக்கையான, அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது மட்டுமே சிறிலங்கா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், 2009இல் முடிவுக்கு வந்தபோரின் போது இழைக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக எந்தவொருவரும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், சிறிலங்காப் படைகள் மற்றும் அரசஆதரவு துணை ஆயுதக்குழுக்களினதும், நீதிக்குப் புறம்பான கொலைகளும், காவல்துறையினராலும், சிறிலங்கா படைகளாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், துன்புறுத்தப்படுவதும் மற்றொரு முக்கியமான பிரச்சினையாகும்.

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்துள்ள தனிநபர்களால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

அச்சமான சூழலை உருவாக்குதல், சுயதணிக்கை, பலவந்தமாக காணாமல்போதல், முன்னைய ஆண்டுகளில், காணாமற்போன ஆயிரக்கணக்கானோர், குறித்து பொறுப்புக்கூறுவதில் குறைபாடு, பரந்தளவிலான மனிதஉரிமை மீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை, குறிப்பாக, காவல்துறையினரின், சித்திரவதைகள், ஊடக நிறுவனங்கள், நீதித்துறை மீதான தாக்குதல்கள், ஆகியவை ஏனைய மனிதஉரிமை மீறல்களாகும்.

போர் முடிந்தவுடன் இருந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொலைகள், ஆட்கடத்தல்கள் குறைந்துள்ளன.

எனினும், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை கொண்டுள்ளோர், அரசசார்பாளர்களால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், அதிகரித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், பரந்தளவில் சுயதணிக்கையை பின்பற்றுவதும், சிறிலங்கா அரசாங்கம் சில இணையத்தளங்களை தடை செய்துள்ளதும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்படாமையும், ஜனநாயக செயற்பாடுகளைப் பலவீனப்படுத்துகிறது.

பொதுவாக எல்லா இடங்களுக்கும் பொதுமக்கள் பயணம் செய்யக் கூடிய நிலை இருந்தாலும், வடக்கில் தொடர்ந்தும் இராணுவ மற்றும் காவல்துறை சோதனைச்சாவடிகளை சந்திக்க வேண்டியுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் ஏனைய சில இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் கட்டப்படுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் தாம் விரும்பிய இடங்களில், மீளக்குடியேற முடியவில்லை.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் பாகுபாடுகளும் தொடர்வதுடன், சிறார் துஸ்பிரயோகங்களும் தொடர்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ் சிறுபான்மையினர், பாகுபாடு காட்டப்படுகின்றனர்.

மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், பாகுபாடுகளும் அதிகரித்துள்ளன.

தொழிலாளர் உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர் தொழிலாளர் பிரச்சினைகளும் உள்ளன.

அரசாங்கத்தில் ஊழல், மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை, நிலவுவதுடன், அரசாங்க மற்றும் வர்த்தக உயர் பதவிகள், ஆளும்கட்சியினரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்குமே வழங்கப்படுகிறது.

பலவந்தமாக ஆட்கள் காணாமற்போதல் தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாக உள்ளது.

காணாமற்போனவர்கள் தொடர்பான எந்த அதிகாரபூர்வ தரவுகளும் இல்லை.

நம்பகமான பொறுப்புக்கூறல் இல்லாததுடன், இத்தகைய சம்பங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய அச்சம் கொண்டுள்ளனர்.” என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad