சனி, மார்ச் 15, 2014


ஜனாதிபதி மஹிந்தவிற்கு வேலணை வேணியன் பாராட்டு

தனது வாழ்நாளுக்குள் கண்டு விட்டாராம்
வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கையை சங்க வீதியெனப் பெயர் மாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்தமைக்கு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சங்க வீதியெனப் பெயர் மாற்றம் செய்வதே தனது கனவாக இருந்தது எனினும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களினால் சங்க வீதி எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றமை ஒரு பெரிய விடயமல்ல எனவும் அவர் தெரிவித்தார். இப்பெயர் மாற்றம் செய்யும் விடயத்தை தானே முதலில் மாநகர சபையில் பிரேரணையாகக் கொண்டு வந்து மாகாண சபையூடாக இது இடம்பெற முயற்சிகள் செய்தேன். எனினும் சிலர் இவ்விடயத்தில் தேவையற்ற தலையீடுகளை ஏற்படுத்தி விடயத்தைக் காலதாமதமாக்கி விட்டனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக அவரது நல்லெண்ணத்தின் பயனாக இப்போது பெயர் மாற்றப்படுகிறது.
இதற்காக ஜனாதிபதிக்கு நான் மீண்டும் மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது வாழ்நாளுக்குள் இப்பெயர் மாற்றத்தைக் கண்டுவிட வேண்டுமென எண்ணியிருந்த எனது கனவில் ஜனாதிபதி அவர்கள் பால் வார்த்துள்ளார்.
இவ்விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே முயற்சி எடுத்த என்னைப் புறந்தள்ளிவிட்டு சிலர் தனித்தும், கட்சி ரீதியாகவும் பெயர் எடுக்க முனைந்தனர். இப்போது ஜனாதிபதியின் தீர்மானத்தால் அவர்கள் அனைவரும் மூக்குடைபட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இதனைத் தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும் பயன்படுத்த முனைந்தார். ஆனால் இனி அது சரிப்பட்டுவராது எனவும் வேலணை வேணியன் தெரிவித்தார்.