ஆம் ஆத்மி கட்சியின் 7-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான 26 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கபட்டுள்ளது.
உதயகுமார் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் பிற வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:
தூத்துக்குடி- எஸ்.புஷ்பராயன்
திருநெல்வேலி- ஜேசுராஜ்
கோவை- பொன்சந்திரன்
ஈரோடு- குமாரசாமி
சேலம்- சதீஷ் குமார்
மத்திய சென்னை- ஜெ.பிரபாகர்
திருப்பூர்- ஆர்.சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன்
புதுச்சேரி- வி.ரங்கராஜன்
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் பிப்ரவரி இறுதியில் இணைந்தார். அப்போது அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
உதயகுமார் விதித்த 5 நிபந்தனைகள்:
ஆம் ஆத்மி கட்சியில் இணைய உதயகுமார் தரப்பில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அணு உலைகளை அமைக்கும் முன் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும், கட்சியின் தேசிய கமிட்டியில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும், பரவலாக்கப்பட்ட தலைமை கட்சியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் உதயகுமார் ஆம் ஆத்மியில் இணைந்தார்.
இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.