புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

ஜ.ம.மு.வின் வெற்றி பேரம் பேசும் சக்தி : சண். குகவரதன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தேர்தல் வெற்றியானது வெறுமனே எமது மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக அமையாது. மாறாக தமிழ் மக்களுக்கு உரிமையுடன் நலன்புரிகளை பெற்றுக்கொள்ளும் பேரம் பேசும் சக்தியாக அமையும். உரிமைகள் இல்லாத சலுகைகள் கானல்நீரைப் போன்றதாகுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் பொறியியலாளரும் மேல் மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான சண்.குகவரதன் தெரிவித்தார்.
 
மேல் மாகாணத்தில் கல்வி தொழில்நுட்ப அறிவுள்ள சமூகத்தை உருவாக்க திட்டங்களை முன்னெடுப்பதோடு கொழும்பிலிருந்து எம் மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக முழு மூச்சுடன் குரல் கொடுத்து தடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியிலேயே ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் சண். குகவரதன் இவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
 
கேள்வி : மேல் மாகாண சபையூடாக தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் உங்கள் முன்னணி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு வாக்குகளை கொள்ளையடிக்க முனைவதாகவும் இனவாதத்தை பரப்புவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறதே?
 
பதில்: இவ்வாறு இன்று குற்றம் சுமத்தும் முகமூடிக்கொள்ளைக்காரர்கள் அன்று தமிழ் மக்கள் கடத்தப்படும் போதும் கொல்லப்படும் போதும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட போது எம் மக்களிடம் கொள்ளையடிக்கும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த போது எங்கிருந்தார்கள். தமிழ் மக்களை பாதுகாக்காது ஓடி ஒளிந்திருந்தனர். இவர்களது குரல்கள் ஊமையாகியிருந்தது.
 
அதன் போது தமிழ் மக்களின் காவலனாக தனது உயிரையும் துச்சமென மதித்து தமிழ் மக்களுக்கு தலைமை வழங்கி போராட்டங்களை நடத்தி அர சாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த குரல் கொடுத்தவர் எமது தலைவர் தன்மானத் தமிழன் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியாகும்.
 
நாம் பேசுவது தமிழ் இனவாதம் அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமைக் குரலையே எழுப்புகிறோம். மக்களின் உணர்வுகளை அல்ல மனச்சாட்சியையே தட்டுகிறோம். இதனை மக்கள் அறிவார்கள்.
 
மேல் மாகாண சபையில் சலுகைகளை பிச்சையாக பெறுவது பெருமையல்ல. அது தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையென்பதை வலியுறுத்தி பெற்றுக் கொள்வதே கௌரவமாகும்.
 
இவ்வளவு காலமும் மாகாண சபையால் என்னென்ன உதவிகள் கிடைக்கின்றதென்பதை எவரும் தெரிவித்திருப்பார்களா? இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மேல் மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கல் தமிழ் பாடசாலைகளின் தரம் உயர்த்தப்படுதல் இதுபோன்ற தமிழ் மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பது எம் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு தெளிவில்லையென்பது கவலையளிக்கின்றது.
 
இனி உங்களிடம் தேர்தல் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
 
கேள்வி : கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே. கட்சியுடன் இணைந்து போட்டியிட்டீர்கள் ஆனால் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறீர்கள் என்ன காரணம்?
 
பதில் :  தேர்தல்களில் களமிறங்கும் போது அரசியல் கட்சிகள் சாதக பாதகங்களை ஆராய்ந்தே வியூகங்களை வகுக்கும். இதுவே அரசியல் சித்தாந்தம்.
 
கொழும்பு மாநகர சபைத் தேர்தலின் போது எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் சுகாதார சூழல் பிரச்சினைகள் உட்பட தமிழ் தேசிய பிரச்சினைகளில் ஐ.தே. கட்சி எம்மோடு இணைந்து போகக் கூடிய சாதகத் தன்மையில் காணப்பட்டது.
 
அன்றைய சூழலில் பெரும்பான்மை கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலமே பெரும்பாலான ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியுமென்ற தேவை இருந்தது.
 
அது மட்டுமல்லாது ஐ.தே. கட்சியில் தகுந்த வேட்பாளர்களுக்கான பாரிய வெற்றிடம் நிலவியது. ஐ.தே. கட்சியின் இணக்கப்பாடுடன் தனித்து போட்டியிட்டோம். 6 ஆசனங்களை வென்றோம்.
 
ஆனால் இன்று ஐ.தே. கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் தோன்றியுள்ளன. பின்னடைவைக் கண்டுள்ளது. தேசியப் பிரச்சினை தொடர்பான கொள்கையிலும் தடம்புரண்டுள்ளது.
 
எனவே எமது மக்களுக்கான அரசியல் வியூகம் வகுப்பதற்கு தள்ளப்பட்டோம். அது தனித்து போட்டியிடும் முடிவாகும். அதை விடுத்து வேறெந்த காரணமும் இல்லை. எந்த முடிவெடுத்தாலும் அது எமது மக்களுக்கானதாகவே அமையும்.
 
கேள்வி : சிறுபான்மை இன கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் பலனில்லை. பெரும்பான்மை இனக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாடு காணப்படுகின்றதே?
 
பதில் : இதுவொரு மாயை அதில் உண்மையில்லை. இன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன. பலர் பொறுப்புள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர்.
 
ஆனால் இவர்களால் தாம் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடிந்ததா? அம் மக்களின் வாழ்விடங்களை பாதுகாக்க முடிந்ததா? மத ஸ்தலங்களை பாதுகாக்க முடிந்ததா? இதற்காக அரசாங்கத்திடம் பேசினார்களா என்றால் பதில் இல்லை.
 
கொம்பனி வீதி, மாளிகாவத்தை, பொரள்ளை, அலரி மாரிகைக்கு பின்னால் சொய்சாபுர பகுதிகளில் அரசாங்கம் வீடுகளை இடித்தது. அரசுடன் இணைந்தவர்களால் இதனை தடுக்க முடிந்ததா?
 
ஆனால் நாம் எதிர்தரப்பினராக இருந்துகொண்டு வீதியில் இறங்கிப் போராடினோம். நீதிமன்றங்கள் சென்றோம். மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்றோம். ஏன் சர்வதேசத்தின் கண்களையும் திறக்கச் செய்தோம்.
 
இதனால் பல வீடுகள் இடிக்கப்படுவதை தடுத்தோம். அதற்கு மேலாக வீடுகளை இழந்து வெறும் கையுடன் நடுத்தெருவில் விடப்பட்ட மக்களுக்கு ஒரு வருட காலத்துக்காக வாழ்வதற்கு வாடகை வீட்டுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க முடிந்தது.
 
அது மட்டுமா? ஒரு வருடத்திற்கு பின்னர் சொந்தமான வீடு வழங்குவோம் என்ற உறுதி மொழியை வழங்கும் நிலைமைக்கு அரசாங்கத்தை கொண்டு வந்தோம். அதெல்லாம் அரசுடன் இணைந்ததால் பெற்றுக் கொண்டதல்ல. தனித்து போராடி மக்களுக்கு பெற்றுக் கொடுத்த வெற்றிகளாகும்.
 
ஆனால் ஆளும் கட்சியில் பங்காளிகளான தமிழ் முஸ்லிம்கள் தமது மக்களை மறந்து தமது பிள்ளைகளோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். இது தான் தனித்து இயங்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவோருக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும்.
 
கேள்வி : கொழும்பு மாநகர சபையில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள் உங்களால் மக்கள் சேவைகளை முன்னெடுக்க முடிந்ததா?
 
பதில் : கொழும்பு மாநகர சபையின் ஆட்சியதிகாரம் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே எமது மக்களுக்கான தேவைகளை அறிந்து சேவைகளை பெற்றுக் கொடுக்கும் பேரம் பேசும் சக்தி எமக்கு உள்ளது.
 
நான் மாநகர சபை உறுப்பினராக விசேடமாக வெள்ளவத்தை, கிருலப்பனை, பாமன்கடை உட்பட வட கொழும்பு, மத்திய கொழும்பு, கொழும்பு மேற்கு, கொழும்பு கிழக்கு என தோட்டங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்தேன்.
 
சுகாதார விழிப்புணர்வுகள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் பாதைகள் செப்பனிடல் மற்றும் ஏழைகளுக்கு கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுத்தல் என மாநகர சபை ஊடாக கிடைக்கும் அனைத்து மக்கள் நலன் புரிகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன்.
 
மாநகர சபை உறுப்பினர் என்ற பதவிக்கு அப்பால் சென்று அனைத்து மதவழிபாட்டுத் தலங்களுக்கும் நிதியுதவிகள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் இலவசமாக அப்பியாசக் கொப்பிகள் பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளதோடு மாநகர சபை மற்றும் லயன்ஸ் கழகங்களோடு இணைந்து இலவச மருத்துவ முகாம்கள் அத்தோடு அரச சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவைகளையும் நடத்தியுள்ளேன். எனது சேவைகளை பட்டியலிடத் தேவையில்லை மக்கள் அறிவார்கள்.
 
கேள்வி : மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் உங்கள் இலக்கு என்ன?
 
பதில் : எனது முதல் இலக்கு மேல் மாகாணத்தில் கல்வி அறிவுள்ள அதேவேளை தற்போதைய தொழில் சந்தைக்கு ஏற்றவிதத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதாகும். அதற்கான திட்ட யோசனையை தயாரித்து எனது முதல் பிரேரணையின் மாகாண சபைக்கு முன் வைப்பேன்.
 
அத்தோடு 6 ஆம் 8 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்றுவிட்டு அதனை தொடர முடியாது கைவிட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழிற் திறமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டத்தை ஆரம்பித்து தொழில் வாய்ப்புக்களுக்கான வழி வகைகளை ஏற்படுத்துவேன்.
 
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு தொழில் தேடி வருபவர்களுக்கு தேவையான அடையாள அட்டை பிறப்புச்சான்றிதழ் உட்பட வேறு அரசாங்க சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை வழங்குவேன். இதனூடாக அவர்களுக்கான வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்வேன்.
 
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளை தரமுயர்த்தி அதற்கேற்றாற் போல் வளங்களை வழங்கி எமது பிள்ளைகளின் கல்விக் கண்களை திறக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
 
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதியாரின் கனவை நிறைவேற்றி எமது மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் காணி துண்டோடு வாழ்வதற்கான நிலைமையை ஏற்படுத்த மாகாண சபையூடாக என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ அனைத்தையும் முன்னெடுப்பேன்.
 
கேள்வி : தமிழ் மக்களும் ஜெனிவாவும் இன்றைய நிலையும் உங்கள் கருத்தென்ன?
 
பதில்: இலங்கை அரசாங்கத்தை நம்பி நம்பி ஏமாந்து போன தமிழ் மக்கள் இன்று ஜெனீவாவில் சர்வதேசத்தை நம்பி ஏமாந்து விட்டனர். சர்வதேசம் தமிழன் முதுகில் குத்தி விட்டது இனியும் சர்வதேசத்தை நம்புவதால் பலனில்லை. எனவே வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அதற்கு வெளியே தலைவர் மனோ தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியையும் அரசியல் ரீதியாக பலப்படுத்தும் புதியதொரு விதி செய்ய தமிழ் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்கான சந்தர்ப்பம் மேல்மாகாண சபைத் தேர்தலில் எமது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி எமது வெற்றியை உறுதி செய்து எங்கள் உரிமைகளை பேரம் பேசும் சுதந்திரம் படைப்போம்.
 
கேள்வி- இறுதியாக உங்கள் கருத்து?
 
தமிழ் மக்கள் இன்னல்படும் போது ஓடி ஒளிந்து மௌனிகளானவர்கள் இத்தேர்தல் திருவிழாவில் முக மூடிகளை அணிந்து கொண்டு பொய்க்கால் குதிரையாட்டத்தை மக்கள் முன் ஆடுகின்றார்கள். சலுகைகளை காட்டி எம் மக்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்கத்தின் "ஒப்பந்தக்காரர்களாக" களமிறக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழருக்கான குரல் மனோகணேசனை பலமிழக்கச் செய்ய பொய்யான வாக்குகளை அள்ளி வீசுகின்றனர்.
 
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து எமது பிரதிநிதித்துவத்தை மாகாண சபையில் குறைத்து பெரும்பான்மை இனத்தவருக்கு தாரை வார்க்கும் ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்கி வாக்குகளை சீரழிக்க வேண்டாம்.
 
தேர்தல் தினத்தன்று நேர காலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தமிழன் தன்மானம் காக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியை வெற்றி பெறச் செய்யுங்கள். 

ad

ad