புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

ஜெயா... ‘பய’டேட்டா! - அ.தி.மு.க. டோட்டல் ஸ்கேன்

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஸ்ருதி, நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டி ருப்பது போல தெரிகிறது!
அ.தி.மு.க. பொதுக்குழுவில் சில மாதங்களுக்கு முன்
பு, 'இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. அது எங்கள் புரட்சித்தலைவியாக இருப்பார்’ என்று ஒரு தீர்மானம் போட்டார்கள். ஆனால் இன்று, அதை 'அம்மா’வும் மறந்துவிட்டார்; அ.தி.மு.க-வினரும் ஞாபகப்படுத்துவது இல்லை.நன்றி விகடன் 
'மத்தியில் இனி நாம்தான் ஆளப்போகிறோம்’ என்று ஜெயலலிதாவே சொல்லிவந்தார். அதனை இப்போது சொல்வது இல்லை. 'நாம் ஆதரிக்கும் ஆட்சிதான் அமையும். அப்போது தமிழ்நாட்டுக்குத் தேவையானதைப் பெற்றுத் தரப் போராடுவோம்’ என்பதுதான் இப்போது அவர் சொல்லிவருவது. நம்மிடம்தான் நாற்காலி இருக்கும் என்ற நம்பிக்கை போய், 'யாரிடம் நாற்காலி இருந்தாலும் நம் தயவு அவர்களுக்குத் தேவைப்பட வேண்டுமே!’ என்ற ஏக்கம் மட்டுமே மிச்சம் இருக்கிறது ஜெயலலிதாவிடம்!
'35 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க. வெற்றி பெறும்’ என்று முதலில் சொல்லிவந்த உளவுத்துறை, இப்போது '26 தொகுதிகள் வரை மட்டுமே பெற முடியும்’ என்று எண்ணிக்கையைக் குறைத்திருப்பதாகத் தகவல். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், இந்த எண்ணிக்கையும் குறையலாம். ஆனால், கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை!
ஏனெனில், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எதிர்கொள்ள இருக்கும் சாதக, பாதக அம்சங்களைக் கணக்கிட்டால், அதில் ப்ளஸ்களைக் காட்டிலும் மைனஸ்களே பல்கிப் பெருகியிருக்கின்றன!
1. பிரிந்து நிற்கும் எதிரிகள்
'இந்தக் கூட்டணி உருவாகிவிடக் கூடாது’ என்று ஜெயலலிதா நினைத்த கூட்டணி, தி.மு.க. - காங்கிரஸ் - தே.மு.தி.க. அமைந்த அணி. இது உருவாகியிருந்தால் சதவிகித வாக்குகள் அடிப்படையில், இது மிகவும் பலமானது. ஆனால், அது அமையாதது ஜெயலலிதாவுக்கு மிகமிகச் சாதகமாக அமைந்த முதல் விஷயம். தி.மு.க., பி.ஜே.பி, காங்கிரஸ், இடதுசாரிகள் என ஜெயலலிதாவின் எல்லா எதிரிகளும் தனித்தனியாகக் களம் காண்பது, ஜெயலலிதாவின் பிரசார வியூகத்தை மிகவும் இலகுவாக்கிய ஒரு விஷயம்!
2. மூன்று அஸ்திரங்கள்!
தமிழகத்தை ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆளும் அதிகார பலம், போலீஸ் பலம், பண பலம்... ஆகிய மூன்றுமே ஜெயலலிதாவின் மூன்று பிரம்மாஸ்திரங்கள்!
தேர்தல் தேதி அறிவிக்கும் வரை மக்களுக்குச் செய்யும் நன்மைகள் அனைத்தும், அ.தி.மு.க-வுக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். 'இவர்களுக்கு வாக்கு அளித்தால் தேர்தல் முடிந்ததும் விடுபட்டுப்போன ஆடு, மாடு, கிரைண்டர், மிக்ஸி கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பும் வாக்காளர்களுக்கு இருக்கும். என்னதான் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டி கண்காணித்தாலும், அதைச் செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்கள் மாநில அரசின் பணியாளர்கள்தானே! அதிலும் பெரும்பான்மையினர் காவல் துறையினர்தானே! ஒரே தவறை அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் செய்தால், தி.மு.க. மீது மட்டும் நடவடிக்கை பாயும் என்பதே இங்கு யதார்த்தம். இந்த அதிகார பலம் வேறு எந்தக் கூட்டணியிலும் இல்லாத மிகப் பெரிய ப்ளஸ்!
3. பலவீன வேட்பாளர்கள்!
10 விதமான ஸ்கிரீனிங் டெஸ்ட் வைத்த பிறகும் பலவீனமானவர்களை போலீஸ் வேலைக்கு எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளர்கள். நால்வர் அணி, மாவட்டச் செயலாளர்கள், போலீஸ், போலீஸ் உளவுத் துறை, தனியார் ஏஜென்ஸி... இவ்வளவு பேரும்  கொடுத்த ரிப்போர்ட்களை உளவுத் துறையின் உயர் அதிகாரி ஊர்ஜிதப்படுத்தி, போயஸ் கார்டன் பரிசீலனைக்கு அனுப்பி... என இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகு தேர்வானவர்கள் இவர்கள். கரூர் தம்பித்துரை, ராமநாதபுரம் அன்வர் ராஜா, திருச்சி குமார், திருவள்ளூர் வேணுகோபால் நீங்கலாக மற்றவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஏரியாவில் மட்டுமே பரிச்சயமானவர்கள்.
ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது, ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இரண்டு, மூன்று மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது. இவ்வளவு விரிந்த பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து அறிமுகம் ஆனவர்களே, நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும். (சட்டமன்ற வேட்பாளர்களுக்கு இது அவசியம் இல்லை!) ஆனால், ஜெயலலிதா அறிவித்தவர்களில் 80 சதவிகித வேட்பாளர்களிடம் இந்தத் தகுதி இல்லை!
மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் வேலைகளில் பிடிகொடுக்கவில்லை என்றால், தலைமைக்குப் புகார் சொல்லும் தகுதி படைத்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 'மகாலிங்கம்னா யாரு?, பூங்குன்றன்னா யாரு?’ என்று கேட்கக்கூடியவர்களாகத்தான் பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள்!
4. கோஷ்டி கொலவெறி!
'எந்தக் கட்சியில்தான் கோஷ்டிப் பூசல் இல்லை? அது இல்லாவிட்டால் அது அரசியல் கட்சியே இல்லையே!’ என்று சாக்கு சொல்லலாம். ஆனால், கோஷ்டிப் பூசல் அ.தி.மு.க-வில் மிக வீரியமான புற்றீசலாகப் பரவிப் பாதித்துக்கொண்டிருக்கிறது. மொட்டை பெட்டிஷன் கலாசாரம் இதன் உச்சம்! அந்தக் கட்சியில் ஜெயலலிதா தவிர மற்ற அனைவர் மீதும் போயஸ் கார்டனுக்கு மொட்டை பெட்டிஷன்கள் தினமும் பறக்கின்றன. கொள்கை நோக்கம் இல்லாத கட்சியாக இருப்பதால், அங்கு பணம், பதவி, பவுசுகளை அடைய எல்லாத் தனிமனிதர்களும் ஆலாய்ப் பறக்கிறார்கள்.
தங்கள் நால்வரைத் தாண்டி ஒருவரும் கார்டனுக்குள் போய்விடக் கூடாது என்று 'ஓ.பி.’, 'இ.பி.’, 'கே.பி.’, 'ஹெச்.பி.’ ஆகிய நால்வரும் நினைக்கிறார்கள். மாவட்ட அளவில் தங்களைத் தவிர வேறு யாரையும் இந்த நால்வருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்கள் நினைக்கிறார்கள். 'இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. ஜெயித்து, அந்த எம்.பி-யை மாவட்டச் செயலாளர் ஆக்கிவிட்டால் என்னாவது?’ என்று எல்லா அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் நினைக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களது மைனஸ் விவகாரங்களை வெளியில் பரப்புபவர்களே இவர்கள்தான். இது, எதிர்க் கட்சிப் பிரசாரங்களுக்குக் கைமேல் லாபம் அளித்து வருகிறது!
5. ஆளும் கட்சி மீதான கோபம்!
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அந்த அளவுக்கான வெறுப்பு, இப்போது இல்லையே தவிர... கோபமே இல்லை என்றும் சொல்ல முடியாது. இலவசத் திட்டங்கள் நீங்கலாக அனைத்து மக்களுக்குமான முழுமையான ஒரே ஒரு திட்டம்... இதுவரை அமலாகவில்லை. சத்துணவுத் திட்டம், உழவர் சந்தை, சமச்சீர் கல்வி, இலவச மருத்துவக் காப்பீடு, 100 நாள் வேலைத்திட்டம்... என்பது போன்ற பெரும்பான்மை மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய செயல்கள்தான், அரசியல் தலைவர் ஒருவரின் மாபெரும் சாதனையாக காலம் கடந்தும் நிலைத்திருக்கும். ஆனால், அப்படி ஒன்றை ஜெயலலிதா இதுவரை அமல்படுத்தவே இல்லை.
அறிவித்தத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அந்தக் கோபத்துக்கான வடிகாலாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளையும் நாம் மறுக்க முடியாது. முக்கியமாக, 'கொள்கை அடிப்படையிலான அரசாங்கமா, நலத்திட்டங்களை அமல்படுத்தும் அரசாங்கமா... இந்த இரண்டில் இது எது?’ என்ற குழப்பம் பொதுமக்களுக்கும் இருக்கிறது; ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது!
6. விஷமாக ஏறும் விலைவாசி!
மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. ஆனால், மத்திய தர வர்க்க மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார் ஜெயலலிதா. ஆனால், இதில் மாநில அரசுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. மாநிலத்தின் உணவு உற்பத்தியையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்தாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்தவே முடியாது.
தமிழகத்தில் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகப்படுத்த, எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எல்லாப் பொருள்களையும் அயல்மாநிலத்தில் இருந்து கொண்டுவர வேண்டும் என்றால், விலைவாசி இறங்கவே செய்யாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணமே தவிர, அதுவே முழுமையான காரணம் அல்ல.
100 இட்லிக் கடைகளைத் திறந்து, 100 காய்கறிக் கடைகளை அமைப்பதால் ஏழு கோடி மக்களின் வயிற்றை நிரப்ப முடியும் என்பது அபத்தம். விஷமாக உயரும் விலைவாசியைக் கவனிக்காமல்விட்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தல் சரிவுக்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்!
7. 'ஈழத் தாய்’... நம்ப முடியவில்லை!
'தனித் தமிழீழத்துக்குப் பொது வாக்கெடுப்பு’ என்று பிரகடனம் செய்தார் ஜெயலலிதா. ஒரே ஒரு நாள் வாழ்த்து அறிக்கை வெளியிட்டு, தமிழ்த் தேசியவாதிகள் வாயை மூடிக் கொண்டார்கள். 'ராஜீவ் காந்தி கொலை வழக்குக் கைதிகளுக்குத் தூக்கு ரத்து செய்யப்படுவதோடு, அனைவரும் விடுதலை’ என்று அதிரடி கிளப்பினார். தமிழீழ ஆதரவாளர்கள் தரையில் விழுந்து தண்டனிட்டார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத் தடைக்குப் பிறகு, விவகாரம் என்ன ஆனது என்பதை ஜெயலலிதாவே கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவின் தேர்தல் நேரத் திரைக்கூத்தாக அமைந்துவிட்டது ஈழத் தமிழர்கள் மீதான அவரது அபிமானம். கொள்கையை மாற்றிக்கொள்வார் என்பதைவிட, ஆளே இன்னும் மாறவில்லை என்பதுதான் தமிழ்த் தேசியவாதிகளைப் பயமுறுத்துகிறது. இடதுசாரிகள் நடத்தப்பட்ட விதம், இனியொரு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர எந்தக் கட்சியுமே தயங்கும்; மிரளும்; பதுங்கும். அநேகமாக அவருக்கு இனி கூட்டணிகளே அமையாது. அதை அவருமே விரும்ப மாட்டார் போலும்!
8. சிறுபான்மையினர் சினம்!
பி.ஜே.பி-யுடன் கூட்டுச் சேருவதற்கு ஜெயலலிதா முதலில் தயங்கக் காரணம், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்பதுதான். ஆனால், இன்று சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்றல்ல, இரண்டல்ல... நான்கு பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. சமீப கருத்துக்கணிப்பின்படி, சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க., காங்கிரஸுக்குக் கூடுதலாகவும், அதற்கு அடுத்த இடத்தில்தான் அ.தி.மு.க-வுக்கும் போகிறது என்று தெரிவிக்கிறது.
சிறுபான்மையினர், சில இடங்களில் இடதுசாரிகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்தக் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த பலரும், 'பி.ஜே.பி-க்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். எங்கள் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற எம்.பி-களை, பி.ஜே.பி-யை ஆதரிக்க வைத்துவிடுவார்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கேற்பவே, பி.ஜே.பி-யையோ மோடியையோ திட்டாமல், ஏற்கெனவே 'சட்டை கிழிந்திருக்கும்’ காங்கிரஸையே கண்மண் தெரியாமல் அடித்துத் துவைத்துக்கொண்டிருக்கிறார். மோடியை விமர்சிக்காமல் சிறுபான்மையினர் வாக்கை ஜெயலலிதாவால் கைக்கொள்ளவே முடியாது!
9. 'நான், நான் மற்றும் நான்!’
'நான், என்னால், என்னால் மட்டுமே...’ என்ற ஜெயலலிதாவின் செயல்பாடுகள் ஒரு காலத்தின் தன்னம்பிக்கையாகப் பார்க்கப்பட்டன. அதன் பிறகு தலைக்கனமாக விமர்சிக்கப்பட்டன. இப்போது அது சிலருக்கு எரிச்சலாகவும், கோபம் ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் கட்-அவுட்கள், சுவரொட்டிகள் முழுக்க விதவிதமான அவரது முகங்கள், வரவேற்க வைக்கப்பட்டுள்ள தோரணங்கள், தென்னைகள், வாழைகள்... போன்ற படாடோபங்கள், மத்தியதர வர்க்கத்துக்கும் புதிய வாக்காளர்களுக்கு இந்த விளம்பரம் ஒரு சதவிகித ஈர்ப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. அளவுக்கு மீறிய தற்புகழ்ச்சியும் ஆராதனைகளும்தான் பெரும் கோபத்தை அவர்கள் மனதில் விதைக்கின்றன!
10. இது டெல்லிக்கான தேர்தல்!
எத்தனை அணிகள் வேண்டுமானாலும் நிற்கட்டும். இது எதற்கான தேர்தல்? மத்தியில் யார் ஆட்சிக்கு வருவது? காங்கிரஸ் கட்சியா... பி.ஜே.பி-யா? என்பதற்கான முடிவை எடுக்கும் நேரம் இது.
இதில், 'ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர்’ என்ற அ.தி.மு.க-வினரின் பிரசாரம் காமெடியாகத்தான் பார்க்கப்பட்டது. யாரை பிரதமர் ஆக்கப்போகிறோம் என்றே அறிவிக்காமல் பிரசாரம் செய்து வருகிறார் ஜெயலலிதா. தமிழக மக்கள் எப்போதும் டெல்லித் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும், சட்டமன்றத் தேர்தலுக்கு வேறு மாதிரியாகவும் முடிவெடுத்து தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள். ஆக, டெல்லிக்கான தேர்தலில் தமிழகத்துக்கு  தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு பிரசாரம் செய்வது ஜெயலலிதாவின் பலவீனமாக படித்த வாக்காளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இப்படி மைனஸ்கள் கூடிக்கொண்டே போவது ஜெயலலிதாவுக்கு நல்லதல்ல... முக்கியமாக எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்கு!

ad

ad