சனி, மார்ச் 15, 2014


திமுக தனியார் நிறுவனமாக ஆகிவிட்டது: தூத்துக்குடி பிரசாரத்தில் ஜெயலலிதா குற்றச்சாட்டு
கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும்,  ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள ஜெயலலிதா இன்று தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜியை  ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கழகமே குடும்பம் என்று அண்ணா காலத்தில் இருந்த திமுக, தற்போது குடும்பமே கழகமாக மாறிவிட்டதாகவும்,  ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் தனியார் நிறுவனமாக திமுக ஆகிவிட்டதாகவும், இப்படிப்பட்ட கட்சியில் இருப்பது தங்களுக்கு இழுக்கு என கருதி, ஏராளமான திமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவதாகவும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியும் இதேப்போன்று குடும்ப கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தன்னலத்தை குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
'திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெத்துவேட்டு'
திமுக தேர்தல் அறிக்கையில் 98 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்துமே புழுகு மூட்டை என்றும் கூறிய ஜெயலலிதா, கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுக தனது  தேர்தல் அறிக்கையில் கூறிய எதன் மீதும் தி.மு.க.இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை என்று குற்றம் சாட்டினார்.
தேர்தல் அறிக்கையில் கூரிய வாக்குறுதிகளை கடந்த 10 வருடங்களில் நிறைவேற்றாதது ஏன்? வருமான வரி உச்ச வரம்பை உறுதி அளித்தபடி ரூ.6 லட்சமாக தி.மு.க. ஏன் உயர்த்தவில்லை?
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை பார்த்து, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அதனை 6 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனை கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக ஏன் செய்யவில்லை? ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இதனை உயர்த்தி இருந்தால் கூட தற்போது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

ஆனால் தற்போது திடீரென ஞானோதயம் பெற்றதுபோன்று வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை  6 லட்சமாக உயர்த்தப்படும் என திமுக அறிவித்திருப்பது  மக்களை ஏமாற்றும் செயல் என்றும், வெத்துவேட்டு வாக்குறுதி என்றும், எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.
மீன்பிடி துறைமுகம்
தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடியில் 2 சாலைகள் மேம்படுத்தும் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோல், 2 பாலங்கள் 2 கோடி ரூபாயில் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோவில்பட்டியில் ஹாக்கி மைதானம் புதுப்பித்தல் பணி நடக்க இருக்கிறது. வேப்பலோடையில் தொழிற் பயிற்சி மையம் துவங்க இருக்கிறது.

தூத்துக்குடி மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே இருக்கும் படுக்கை வசதிகளுடன் மேலும் 120 படுக்கை வசதிகள் செய்யப்பட இருக்கிறது. இது பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி தருவைகுளம், திரேஸ்புரம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் மீன்பிடி துறைமுகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தூத்துக்குடி சிப்காட்டில் தொழிற்பூங்கா வர இருக்கிறது. 94 கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், கயத்தாறு, ஒட்டப்பிடாரம், புதூர் பகுதி மக்களுக்காக கொண்டுவரப்பட உள்ளது. தூத்துக்குடி-மதுரை, தூத்துக்குடி-கொல்லம் இடையே சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி மாநாகராட்சி பகுதி மக்களின் வசதிக்காக 4வது பைப் லைன் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.