புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். 

இவ்வாறு ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் MARZUKI DARUSMAN, STEVEN RATNER, AND YASMIN SOOKA ஆகிய மூவரும் The Globe and Mail ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வடகிழக்கின் ஒடுங்கிய கரையோரப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்காப் படைகள் தோற்கடித்ததன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் யுத்த வலயத்தில் அகப்பட்டிருந்தனர்.

இந்த யுத்தத்தின் போது எவ்வித மீறல்களும் இடம்பெறவில்லை என சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை மேற்கொள்கிறது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தனது தவறுகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக போர் வெற்றி மமதையில் திளைத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் கால மீறல்கள் தொடர்பான சாட்சியங்களை சேகரிப்பதற்கும், போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம்.

இந்தவகையில் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் இது தவறினால் ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்கா மீது அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணையை முன்னெடுப்பதற்கான நகர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட நாங்கள் மூவரும் எமது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தோம்.

எம்மால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சிறிலங்காவில் வாழும் மக்கள் அமைப்புக்களும் அனைத்துலகமும் தமது ஆதரவை வழங்கிய அதேவேளையில், இது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டமிட்ட நடவடிக்கை என குற்றம் சுமத்தியதுடன், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்கமறுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் தனது அழுத்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2012 மற்றும் 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவி பிள்ளை சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதுடன் போர்க் கால மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படாது காலத்தை இழுத்தடிப்பதாகவும் இதற்கான காலம் கடந்துவிட்டதாகவும் சிறிலங்கா மீது குற்றம் சுமத்தியிருந்தார். இவ்வாண்டு எவ்வித காலதாமதமும் இன்றி அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என நவி பிள்ளை கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளையில், சிறிலங்காவில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் காணாமற் போகின்றனர். தமிழர்கள் வாழும் வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரம் பெற்றுள்ளது. இதனால் போரிலிருந்து மீண்டு வாழும் தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்பளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, சிறிலங்காவின் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சிறிலங்காவில் அச்சமும் அடக்குமுறையும் நிலவுகிறது.

தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவால் உண்மை, நீதி மற்றும் மீளிணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சமாதானம் நிலைநிறுத்தப்பட்டது. இதேபோன்று சிறிலங்காவிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். சிறிலங்காவிலும் தென்னாபிரிக்காவிலும் நிலவிய பிரச்சினைகள் ஒரேவிதமானதாக உள்ளதால் சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி தனது நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் போரின் போது இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள வரைபு தொடர்பில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இவ்வாராம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கவுள்ளன.

ஐ.நா வால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக விசாரணையானது சிறிலங்காவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை நம்பச்செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் தனது இராஜதந்திரிகளை உலக நாடுகளுக்கு அனுப்பி தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. ஐ.நா தனது விசாரணைக்காக பிரயோகிக்கின்ற அனைத்து மனித உரிமைகள் நியமங்களையும் சிறிலங்கா ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வித பாரபட்சங்களுமின்றி ஐ.நா விசாரணை இதற்கான அனைத்துக் காரணிகளையும் உறுதிப்படுத்த முடியும்.

பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்கா மீதான ஐ.நா விசாரணைக்கான தமது ஆதரவு வாக்குகளை மட்டும் வழங்காது, மிகக் கவனமான விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஆதரவுகளையும் வழங்கவேண்டும். இவ்வாறான நகர்வின் மூலம், சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாலும் நிராகரிக்கின்ற குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துகின்ற சாட்சியங்கள் முன்வைக்கப்பட முடியும். சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சி புதிய வடிவமொன்றாகப் பரிணமிக்கும். 

ad

ad