புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

'' 'திருச்சி மாநாட்டைப் பத்தி என்னய்யா நினைக்கிறீங்க?,  தொண்டர்களின் எழுச்சி எப்படி இருந்துச்சு?, 'மா.செ.’-க்கள்லாம் என்ன சொல்றாங்க? எல்லாரும் உற்சாகமா இருப்பாங்கள்ல...’னு திரும்பத் திரும்ப திருச்சி மாநாட்டைப் பத்தியே கேட்டுட்டு இருக்கார் தலைவர்!'' - கருணாநிதியின் சந்தோஷத்தை அதே உணர்வோடு பகிர்ந்துகொண்டார் துரைமுருகன்.

கள நிலவரம், கட்சிக்குள் கலவரம் என்று எந்தச் சூழ்நிலையிலும் சுள்ளென்று பேசும் இவரை, சட்டமன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பரபரப்புப் பின்னணியில் சந்தித்தேன்...
''தி.மு.க-வின் திருச்சி மாநாட்டில் தொண்டர்கள் எழுச்சியோடு கலந்துக்கிட்டாங்கனு சொல்றீங்க. ஆனா, அந்தத் தொண்டர்களுக்கு உங்க கட்சி உண்மையா இருக்குனு நினைக்கிறீங்களா?''
கேள்வியைக் கேட்டதும் அதிர்ச்சியாகிறார். ஒரு முழு நிமிட அமைதி மற்றும் யோசனைக்குப் பிறகு, ''கட்சியும் தொண்டர்களுக்கு உண்மையா இருக்கு; தொண்டர்களும் கட்சிக்கு உண்மையா இருக்காங்க. இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. 'ஒரு கட்சி, தொண்டர்களுக்கு உண்மையா இருக்கா?’ங்கிற கேள்வியை இதுவரை நான் கேள்விப்படவோ, எதிர்கொள்ளவோ இல்லை. அப்படி சில கட்சிகள் இங்கே இருக்கோ என்னவோ... எனக்குத் தெரியலை!''
''தமிழக சட்டசபையில் இருந்து உங்களை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு சபை விதிகளுக்குப் புறம்பா என்ன பண்ணீங்க?''
''யாரு நானா? அட நீங்க வேற... தமிழக சட்டசபையே விதிகளுக்குப் புறம்பாத்தானே நடந்துட்டு இருக்கு. எப்பவும் சபாநாயகருடன் நேரடியாக மோதும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. எங்க தலைவர்கூட அடிக்கடி, 'யாரோட வேணும்னாலும் வாக்குவாதம் பண்ணுங்கய்யா. ஆனா, சபாநாயகர்கூட எந்தச் சண்டையும் வெச்சுக்கக் கூடாது’னு சொல்வார். ஏன்னா, சபாநாயகரை நம்பித்தான் நாங்க சபைக்குப் போறோம். அவரையும் அவரால் நியமிக்கப்பட்ட கமிட்டியையும் மதிக்கிறது எங்க கடமை. அந்த வகையில் உரிமைக் குழுவில் நானும் பலமுறை இருந்திருக்கேன். உரிமைக் குழு அனுப்பும் சம்மனை வாங்கிட்டு ஆஜர் ஆவதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனா, அந்த சம்மனை அனுப்புறதுக்கு ஒரு முறை இருக்கணும்ல.  
ஒரு நாள் வீட்டுக்கு ஒரு ஆள் வந்தார். அவர் நின்ன தொனி, சல்யூட் அடிச்சது எல்லாத்தையும் பார்த்ததும் போலீஸ்காரர்னு புரிஞ்சுது. செகரட்டரியேட் போலீஸ்காரர். எங்க ஏரியாவுலதான் அவருக்கு வீடு. 'நீங்க அந்தப் பக்கமாத்தானே போவீங்க... போகும்போது இந்தச் சம்மனை அவர்கிட்ட கொடுத்துடுங்க’னு சொல்லி, சம்மனை அவர்கிட்ட கொடுத்து அனுப்பியிருக்காங்க. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு சட்டமன்றத்துல இருந்து சம்மன் அனுப்ப, சில நடைமுறைகள் இருக்கு. டவாலி கொண்டுவந்து கொடுப்பார். இல்லைன்னா பதிவுத் தபால்ல அனுப்புவாங்க. நான் கோர்ட் சம்மனைக்கூட போலீஸ்காரர் மூலம் வந்தா வாங்க மாட்டேன். அதான் உரிமைக் குழு அனுப்பிய சம்மனை வாங்காமல் திருப்பி அனுப்பிட்டேன்.
மறுநாள் சபைக்குப் போனப்ப என்கிட்ட நேர்ல கொடுத்திருந்தா, அந்தச் சம்மனை வாங்கியிருப்பேன். அப்பவும் கொடுக்கலை. ஆனா, 'நாம் அனுப்பிய சம்மனை வாங்க மறுத்தார். அது பெரிய குற்றம். ஆகையினால், அவரை சஸ்பெண்ட் பண்ணு’னு பண்ணியிருக்காங்க. சபைக்குப் போய் அம்மா புகழ் மாலையைக் கேட்கிறதுக்குப் பதிலா வீட்லயே இருக்குறது மனசுக்கு நல்லது தம்பி. அதனால இந்த இடைநீக்கத்தை நான் பெருசா எடுத்துக்கலை!''
''வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தமிழக சட்டசபையில் அனுதினமும் வெளிநடப்பு, அடிக்கடி எதிர்க் கட்சி உறுப்பினர்களை அவை நீக்கம் பண்றதுனு என்னதான் நடக்குது?''
''சட்டசபைனா முறைப்படி நடக்கணும். ஆனா, இங்கே அப்படி எதுவுமே நடக்கலை. அதுக்கு நிறைய விஷயங்களை உதாரணமாச் சொல்லலாம்.
முதல் விஷயம் 110-வது விதி. அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத விஷயமா இருந்தாத்தான் அந்த விதியின் கீழ் அறிக்கை வாசிக்கணும். அப்படி வாசிக்கிற அறிக்கை புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசக் கூடாது; விவாதம் கூடாது; அதன் மீது யாரும் கேள்வியும் கேட்கக் கூடாது. ஆனா, இங்கே தொட்டதுக்கெல்லாம் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிக்கிறாங்க அம்மா. அவங்க வாசிச்ச உடனே, சபையில அதுக்கு ஒரு பாராட்டு விழா நடக்குது.
ரெண்டாவது, இதுவரை நாங்க கொடுத்த எந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தையும் விவாதத்துக்கு எடுத்துக்கிட்டதே இல்லை. அடுத்து, எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பேசவிடாமல் கூச்சல் போட்டுட்டே இருக்காங்க. பொதுவா ஒரு உறுப்பினர் பேசும்போது குறுக்கிடாம அவர் சொல்றதை அமைச்சர் குறிப்பு எடுத்துக்கிட்டே வரணும். பிறகு அமைச்சர் பேசும்போது, 'உறுப்பினர் சொன்னதுல இதெல்லாம் தவறு... இதெல்லாம் சரி... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கு’னு பதில் சொல்லணும். ஆனா, இப்ப உள்ள எந்த மந்திரிக்கும் அந்தத் திராணி இல்லை போல.
எனக்கோ, வேற யாரோ ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ-வுக்கோ அரை மணி நேரம் தரச் சொல்லுங்க. 'ஒன், டூ, த்ரி, ஃபோர், ஃபைவ்’னு பாயின்ட் பாயின்ட்டாக் கேள்வி கேட்கிறோம். எந்த அமைச்சரையாவது பதில் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். வெளிப்படையாக் கேட்கிறேன்... இந்தச் சவாலுக்கு அமைச்சர்கள் தயாரா?  
அமைச்சர்களும் எதிர்க் கட்சிகளை மதிக்கிறது கிடையாது. எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பாதுகாக்கணும்கிற எண்ணமும் சபாநாயகர் தனபாலுக்கும் கிடையாது. இதோட விளைவுகள்தான் சபையில் ஆரோக்கியமான விவாதங்களே இல்லாமப் போச்சு.
தனிப்பட்ட முறையில் சபாநாயகர் தனபால் மேல் எனக்கு மரியாதை உண்டு. அ.தி.மு.க-வில் இருக்கிற மிகச் சில நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர். என் வருத்தம் எல்லாம், அவரை அந்தக் கட்சிக்காரங்க சிரமப்படுத்துறாங்களேனுதான். அந்தம்மா வரும்போது ஒரு கும்புடு, போகும்போது ஒரு கும்புடு, நின்னா ஒரு கும்புடு, நடந்தா ஒரு கும்புடு, உட்கார்ந்தா ஒரு கும்புடு...னு பாவம் அவரால சீட்ல நிம்மதியா உட்காரக்கூட முடியலை!
அட, அவருதான் ஆளும் கட்சிக்காரர். இந்த கம்யூனிஸ்ட் ஆட்களுக்கு என்ன ஆச்சு? முன்னாடி எம்.கல்யாணசுந்தரம், கே.டி.கே.தங்கமணினு கம்யூனிஸ்ட் ஜாம்பவான்களோட சபை நடவடிக்கைகளில் பங்குபெற்று இருக்கேன். எந்த விவகாரத்தையும், 'சரி... தப்பு’னு கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. ஆனா, இப்ப இருக்கிற கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சிக்காரங்களைவிட மோசமா அம்மா புகழ் பாடுறாங்க. அதுவும், 'நீ முந்தி... நான் முந்தி’னு போட்டி போட்டு வாசிக்கிறாங்க. அ.தி.மு.க-வினர், அம்மா புகழ் பாடுறது எங்களுக்கு காமெடி டைம்னு வெச்சுக்கங்க. ஆனா, கொள்கைவாதிகளான கம்யூனிஸ்ட்களே  நியாயத்தைப் பேசாதது எங்களுக்கு ஃபீலிங் டைம்!''
''உங்கக் கூட்டணியில் சேர்க்க விஜயகாந்தை நீங்க கூப்பிட்டுட்டே இருக்கீங்க. அந்தப் பக்கம் பா.ஜ.க-வும் முயற்சி பண்றாங்க. ஆனா, அவர் யாருக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே?''
''ஒரு ஆட்டத்தை அதன் சட்ட திட்டங்களோட ஆடினா, 'அடுத்து இவர் இப்படித்தான் போவார். பந்தை இப்படித்தான் எடுப்பார்’னு நாம கணிக்கலாம். ஆனா, ஆட்டத்தை  ஆட்டமா  ஆடாம வேற மாதிரி ஆடினா நாம என்ன பண்றது? அப்படி ஆடறது ராஜதந்திரம்னு நினைக்கிறார் போல. அதை நாம ஏன் குறை சொல்லணும்?''
'' 'காங்கிரஸோடு கூட்டணி கிடையாது’ என்பது தி.மு.க. பொதுக் குழு முடிவு. ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கூட்டணியில் விருப்பம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, கருணாநிதி காங்கிரஸ் பக்கம் சாய்வார் என்கிறார்களே?''
''எங்களைப் பொறுத்தவரை பொதுக் குழு எடுத்த முடிவுதான் இப்போதும் அமலில் இருக்கிறது. அவ்வளவுதான்!'''
''சமீப கருத்துக் கணிப்புகள் வடக்கில் பி.ஜே.பி-க்கும் தமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கும் சாதகமான நிலை நிலவுவதாகச் சொல்கிறதே?''
''அட, அந்தக் கருத்துக் கணிப்புகளை நான் நம்பறதே இல்லை. ஒரு கிராமத்துல ரெண்டு டீக்கடை இருக்குனா, அதுல ஒண்ணு தி.மு.க. ஆளுக்குச் சொந்தமா இருக்கும். இன்ணொண்ணு, அ.தி.மு.க.-காரனோடதா இருக்கும். கணிப்புனு போய் கணக்கு எடுக்குறவன் தி.மு.க. டீக்கடைல கேட்டா, எங்களுக்கு ஆதரவாச் சொல்வான். எதிர் டீக்கடைல கேட்டா அவங்களுக்கு ஆதரவாச் சொல்வான். ஆனா, உண்மையில எவன், எவனுக்கு ஓட்டு போடுறான்னு எவனுக்கும் தெரியாது.  வேட்பாளர், வாக்காளர்களுக்குமான தொடர்பு, அந்த நேர மனநிலைனு ஒவ்வொரு ஓட்டு விழுறதுக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு.  இதெல்லாம் கருத்துக் கணிப்பு புலி, சிங்கங்களுக்குத் தெரியுமா?''
'' 'ஒருவேளை கூட்டணிக்கு வாய்ப்பு இல்லைன்னா, தனித்தேகூட நிற்போம்’னு விஜயகாந்த் சொல்றார். 10 வருஷக் கட்சிக்கு இருக்கிற துணிச்சல், ஏன் தி.மு.க-வுக்கு இல்லை?''
''ஐயய்யோ.... ஆமாம்பா... அது பெரிய தைரியம். அந்தத் துணிச்சல் எங்களுக்கு இல்லை சாமி. ஆளை விடுங்க!'' (அதிர அதிரச் சிரிக்கிறார்.)
''நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் உங்க மகன் கதிர் ஆனந்த் போட்டியிடப் போறார்னு ஒரு தகவல். உண்மையா?''
''ஏழெட்டுப் பேர் கேட்டிருக்காங்க. அதுல அவனும் ஒருத்தன். யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்னு தலைமைக் கழகம் யோசிக்கும்; ஆலோசிக்கும். பிறகு அவங்களுக்கு சீட் தரும். மத்தபடி இவரா, அவரானு இப்பவே சொல்ல முடியாது!''
''இப்படி தலைமையில் மட்டும் இல்லாமல் மாவட்டங்களிலும் வாரிசுகள் குறுநில மன்னர்களாவது நல்லதா?''
''இதே கேள்வியை டெல்லிக்குப் போய் இந்திரா காந்தி வீட்ல கேட்டுட்டு வாங்களேன். அவ்வளவு தூரம் போகணும்னு யோசிச்சா, இங்கே பக்கத்துலயே மூப்பனார் வீட்ல கேளுங்களேன். ஊருக்கு இளைச்சவன் தி.மு.க-காரன் மட்டும்தானா? அது ஏன் எங்களை மட்டும் விரட்டி விரட்டி இந்தக் கேள்வியைக் கேட்டுட்டே இருக்கீங்க?''
''வாரிசு அரசியல், தி.மு.க. என்ற கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் படைக்கிறதே... அதான் உங்ககிட்ட கேட்கிறோம்!''
''ம்ம்ம்... சப்ஜெக்ட்டுக்கு வந்துட்டீங்க. கேளுங்க... கேளுங்க. வேணாம்னா விடவா போறீங்க!'' என்று சிரிக்கிறார்.
''கருணாநிதிக்கும் அழகிரிக்கும் இடையிலான சச்சரவு, ஸ்டாலின் பற்றிய...''
கேள்வியை முடிக்கவிடாமல் குறுக்கிடுபவர், ''இது தொடர்பா என்ன கேட்டாலும் ஒரே பதில்தான். குடும்பம், தனி மனுஷன்... இவங்க எல்லாரையும்விட கட்சிதான் பெருசு. கட்சிக்கு யார் கட்டுப்பட்டு இருக்காங்களோ, அவங்களை தி.மு.க. தொண்டன் மதிப்பான். கட்சியை யார் மதிக்கலையோ, அவங்களை தொண்டனும் மதிக்க மாட்டான். யாரா இருந்தாலும் கட்சிக்குக் கட்டுப்படணும்!''
''அழகிரி உங்களிடம் வந்து முறையிட்டதாகச் சொல்லியிருக்காரே... அழகிரி நீக்கத்தால் தென் தமிழகத்தில் தி.மு.க-வுக்கான ஆதரவு குறையுமா?''  
'' 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’னு  இஸ்லாமியத் தோழர்கள் சொல்வாங்க. அப்படி தி.மு.க-வின் சக்தியெல்லாம் தலைமையே... கலைஞரே..! அழகிரி என்கிட்ட வந்தார்; பார்த்தார்; பேசினார். அந்தச் சந்திப்பில் வேற எந்த முக்கியத்துவமும் இல்லை!'' என்றவர் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ''பேட்டிக்குத் தலைப்பு சிக்கிருச்சுல்ல... எனக்கு பல் வலி. பல் டாக்டரைப் பார்க்கப் போகணும். நான் கிளம்புறேன்... டாக்டர் போயிடுவார்'' எனக் கிளம்பியேவிட்டார்!

ad

ad