புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.
தீர்மானம் நிறைவேறியதால் ஈழத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக அடுத்த நகர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் நமக்கு ஓரளவு மன நிறைவு என்ற போதிலும், அந்தத் தீர்மானத்தின் போது இந்தியா கடைப்பிடித்த அணுகுமுறை, தமிழகத்திலே உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமுதாயத்தையும் மீண்டும் ஏமாற்றத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நேற்றையதினம் (27-3-2014) ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து இருக்கின்றன. 11 நாடுகள் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பைப் புறக்கணித்திருக்கின்றன. அப்படி புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலக சமுதாயத்தின் முன் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக சம்பந்தமோ, பந்தபாசமோ இல்லாத அமெரிக்கா போன்ற ஒரு நாடு, சர்வதேச சமூகத்தின் நலன், மனித நேயம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானத்தை மூன்றாவது முறையாக முன்மொழிந்து, அந்தத் தீர்மானத்தை தமிழினத்தின் வேர்களைக் கொண்டிராத 23 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், தமிழர்களின் தாயகமான இந்தியா அந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பது தான் பெற்ற தாயே தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்வதற்குச் சமமாகும் என்பதால் நம்முடைய கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.
மேலும் சொல்ல வேண்டுமேயானால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, “இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலே நேரடி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று மனிதாபிமான உணர்வோடு தெரிவித்திருக்கும் நிலையில்,
ஐ.நா. வுக்கான நம்முடைய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா என்பவர் “ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை போன்ற பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இது போன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது” என்று கருத்து தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசின் இந்த நடைமுறையை தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரசாரே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பிறநாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால், பண்டித நேரு தென் ஆபிரிக்காவின் நிற வெறிப் பிரச்சினையில் தலையிட்டிருக்க முடியுமா?
வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபுர் ரகுமானுக்கு இந்திரா காந்தி அம்மையார் உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையிலான கேள்விகளை உலகத் தமிழர்கள் எழுப்ப மாட்டார்களா என்பதை மத்திய காங்கிரஸ் அரசு எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்திய அரசு தன்னிச்சையாக ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வராததோடு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரிக்காமல் புறக்கணித்திருப்பது, குதிரை குப்புறத் தள்ளிய தோடு, குழி பறித்த கதையாகவும் ஆகி விட்டது.
சர்வதேச சமூகத்தின் உணர்வோடு ஒன்றிப் போகாமல், முக்கியமான இந்தப் பிரச்சினையில் மனித நேயமற்ற முடிவினை மேற்கொண்டதற்காக இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad