புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?

'அழகிரி, ஸ்டாலினை 38 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். பேச்சுலர் வாழ்க்கையில் கோபாலபுரம் ஏரியாவில் குறுக்குச் சந்து மாடி வீடு ஒன்றில் உட்கார்ந்து அரட்டையடிப்போம். தெருவில் இரண்டு மூன்று பேருடன் பேசிக்கொண்டிருந்தால்... அது ஸ்டாலின். பத்துப் பதினைந்து பேருடன் திரிந்தால்... அது அழகிரி என்று சொல்வார்கள்!'' - தயாநிதி மாறனின் திருமணத்தில் இப்படி சகோதரர்களைப் பற்றி சிலாகித்தவர் ரஜினி. அப்போது ரஜினி சிலாகித்த
அழகிரி - ஸ்டாலின் இடையிலான யுத்தம், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் திரைமறைவு மோதல்!-நன்றி விகடன்
தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட அழகிரி, மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்; ரஜினியை மன அமைதி நிமித்தமாகச் சந்திக்கிறார்; கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட தொண்டர்களைச் சந்திக்கிறார். அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஹேஷ்யம் கிளம்புகின்றன. மறுநாள், 'தி.மு.க-வையும் கலைஞரையும் காப்பாற்றுவதே என் நோக்கம்!’ என்று முஷ்டி முறுக்குகிறார். 'அழகிரியோடு யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது!’ என்று கட்சித் தலைமை அறிக்கை விடுகிறது. 'தென் தமிழகத்தில் அழகிரி, கலகக்காரர். அவரை இந்தச் சமயம் இப்படி கொம்பு சீவிவிட்டிருக்கக் கூடாது. பலமான கூட்டணிக் கட்சிகள் துணை இல்லாமல் போட்டியிடும்போது, உள்கட்சி கோஷ்டிப் பூசலும் தன் பங்கு பாதகத்தை தி.மு.க. வேட்பாளர்களுக்கு உண்டாக்கும்!’ என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. சரி, 'அழகிரி ஃபேக்டர்’ அத்தனை வீரியமானதா என்ன? ஒரு ஃப்ளாஷ்பேக்...
''பொதுக்குழுவில் பேசும்போது, 'வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன்!’ '' என கடந்த ஆண்டு தொடக்கத்தில் கருணாநிதி சொன்ன வார்த்தைகள்தான் இப்போதைய அழகிரியின் ஆவேசத்துக்கான ஆரம்பம்.
ஆனால், 'அழகிரியா... ஸ்டாலினா?’, 'யார் அடுத்தத் தலைவர்?’ என்ற வாரிசுச் சண்டை இப்போது தொடங்கியது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. 2000-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த முப்பெரும் விழாவில், 'தி.மு.க-வின் அடுத்த வாரிசு ஸ்டாலின்’ என்று சொல்லப்பட, கொந்தளித்தார் அழகிரி. ''தி.மு.க-வில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுங்குகிறேன்'' என்று அதிரடியாக அறிவித்தார். அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி ஆகிய மூவரும் முப்பெரும் விழாவைப் புறக்கணித்தார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளிலும், கட்சித் தொண்டர்களிடையே உள்ள கட்டுக்கோப்பைக் குலைக்கும் முயற்சியிலும் அழகிரி ஈடுபட்டுள்ளார். அவருடன் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் அறிவித்தார் பேராசிரியர் அன்பழகன்.
அவ்வளவுதான். மதுரை கொளுந்துவிட்டு எரிந்தது. பேருந்துகளை எரித்தார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். கல்வீச்சு, கலவரம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மதுரையே தகிக்க, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதம் அடைந்தன. அப்போது ஆளும் கட்சி தி.மு.க. என்பதால் காக்கிகள் கைகட்டிக்கொண்டார்கள். மதுரை திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தனது ஆதரவாளர் வட்டச் செயலாளர் முத்துவை மீட்டார் அழகிரி. அதுவரை போலீஸுடன் பார்த்தேயிராத பேராசிரியர் அன்பழகனே, காக்கிகள் புடைசூழ பாதுகாப்புடன் நடமாட வேண்டி வந்தது. மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகத்தை, பழனிவேல்ராஜனிடம் ஒப்படைத்தார்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசமாக, ஆற்காடு வீராசாமியும் தயாளு அம்மாளும் மதுரைக்கு வந்து சமாதானம் பேசினார்கள். ஆனாலும், அழகிரியின் கொதிப்பு அடங்கவில்லை.
தி.மு.க. என்ற கட்சி மீது அழகிரி கடுங்கோபத்தில் இருந்த அந்தச் சமயம்தான், 2001-ல் தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. அழகிரியின் கோபம் அதில் எதிரொலித்தது. தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக 12 தொகுதிகளில் 'அழகிரி பேரவை’ என்ற பெயரில் போட்டி வேட்பாளர்களைக் களம் இறக் கினார் அழகிரி. அதன் காரணமாக தென் தமிழகத்தில் தி.மு.க-வின் மூத்த தலைகளே தோற்றுப் போனார்கள். வெறும் 708 ஓட்டுகள் வித்தியாசத்தில் பி.டி.ஆர். பழனி வேல்ராஜன் தோல்வி அடைந்தார். தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட தி.மு.க-வால் ஜெயிக்க முடியவில்லை. திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டத்தில் தலா ஓர் இடத்தில் மட்டுமே வென்றது. அதன் பிறகு காட்சிகள் மாறின. 'நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கும்’ என்று அண்ணாவின் பொன்மொழியைச் சொல்லி அழகிரியைக் கட்சிக்குள் இணைத்துக்கொண்டார் கருணாநிதி.
ஆனால், அழகிரியின் அந்த 'வியூகம்’ இப்போது மீண்டும் எடுபடுமா என்பதே இப்போதைய கேள்வி!
அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. இப்போது அ.தி.மு.க. அதனால் அழகிரி கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஆனால், ஜெயா டி.வி-யில் அழகிரி தொடர்பான செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மூலம் அவருக்கு ஆளும் கட்சியின் மறைமுக ஆதரவு இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. 'அழகிரியின் கோபத்தை தன் கட்சிக்கு அறுவடை செய்துகொள்ள நினைக்கும் அ.தி.மு.க. அதனாலேயே தயா பார்க், கிரானைட் மோசடி வழக்குகளில் அழகிரியின் மகன் துரை தயாநிதியை போலீஸ் இன்னும் விசாரணை செய்யவில்லை. அமைச்சராக இல்லாத அழகிரிக்கு இப்போதும் லோக்கல் காக்கிகளின் பாதுகாப்பு தொடர்கிறது. இதெல்லாம் ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் என்று எங்களுக்குப் புரியாதா என்ன?’ என்று முணுமுணுக்கிறார்கள் தி.மு.க-வின் சீனியர்கள். தினமும் சலசலப்பு கிளம்பும் விதத்தில் அழகிரியின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது ஆளும் கட்சித் தரப்பின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்பவே ரஜினியுடன் சந்திப்பு, தொண்டர்களுடன் மீட்டிங் என ஃப்ளாஷ் அடித்துக்கொண்டே இருக்கிறார் அழகிரி.
மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் என தென் மாவட்ட பெல்ட்டில் 10 எம்.பி. தொகுதிகள் அடக்கம். இந்தப் 10 தொகுதிகளிலும் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே ஒன்பதை வென்றது. அதிலும் பத்தில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களால் ஒன்றில்கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க-வின் கோட்டை என கருதப்பட்ட தேனி, திண்டுக்கல் தொகுதிகளும் அதில் அடக்கம். உச்சகட்டமாக விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட வைகோ தோல்வி அடைந்தார். தென்காசியில் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வென்றது. அந்த 10 தொகுதிகளில் 9-ல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறக் காரணமாக இருந்தது அழகிரிதான் என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம்!
இப்போது அந்த வியூகத்தை அப்படியே புரட்டிப் போட்டு அறிவாலயத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தர நினைக்கிறார் அழகிரி. அதன் வெளிப்பாடுதான் தேனி எம்.பி. ஆரூண் ரஷீத்தைச் சந்தித்திருக்கிறார். இந்த முறை வைகோவை ஜெயிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். விமானப் பயணத்தில் வைகோவைச் சந்தித்த அழகிரி, 'உங்கள் மீது பழி சுமத்தியது போல என் மீதும் பழி சுமத்தியிருக்கிறார்கள்’ என்று பொருமலாக பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியன், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி, சிவகங்கையில் பெரியகருப்பன், தூத்துக்குடியில் என்.பெரியசாமி ஆகியோர் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருந்தபோதும், அவர்களை தன் ஆளுகையை மீறாமல் பார்த்துக்கொண்டவர் அழகிரி. ஆனால், இப்போது அவர்களின் சிபாரிசில் ஸ்டாலின் ஆதரவாளர்களாக களமிறங்கி இருக்கும் 9 தி.மு.க. வேட்பாளர்களையும் (தென்காசி கூட்டணிக்குப் போய்விட்டது) வீழ்த்த குறி வைத்துவிட்டார். பி.ஜே.பி. கூட்டணி, அ.தி.மு.க. ஆளுமை... இவற்றுக்குச் சமமாக 'அழகிரி அலை’யையும் உஷாராக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தி.மு.க.!
''கருணாநிதிக்கு, இரண்டு மிகப் பெரிய சொத்துகள் உள்ளன. ஒன்று தி.மு.க. இன்னொன்று அவரது மகன்களான அழகிரியும் ஸ்டாலினும். தி.மு.க-வை அழகிரியும் ஸ்டாலினும், இவர்களை தி.மு.க-வும் காக்க வேண்டும்!' என்று ஒருமுறை ரஜினி சொன்ன வார்த்தைகள் பலிக்காமல் போய்விடுமோ?

ad

ad