புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் கைது: இ.மா.ச. கண்டனம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் இயக்கப்பட்டு வரும் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் கடந்த 13 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும், சொந்த கட்டிட வசதிகளும் இல்லாமல் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்பட்டு தொழிற்சாலைகளிலும், குடோன்களிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. மேற்கண்ட பிரச்சனையில் தமிழக அரசு உடனே தலையிட வலியுறுத்தியும் சங்கரன்கோவில் மனோ கல்லூரிக்கு சொந்த நிலம், சொந்த கட்டிடம் உள்ளிட்டவற்றை செடீநுது தர கேட்டு இந்திய மாணவர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன்விளைவாக, உயர்கல்வித்துறை அமைச்சர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், பல்கலைக்கழக பதிவாளர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தை தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து நிலத்தை முறையாக பெறுவதற்கான அரசாணை 07.02.2012-இல் (அரசாணை எண்.30 இந்து சமய அறநிலையத்துறை) வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் சங்கரன்கோவில் இடைதேர்தல் நடந்த போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் மனோ கல்லூரிக்கு சொந்த நிலம் வழங்கி சொந்த கட்டிடம் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகள் ஆன பின்பும், நிலத்தை பெறுவதற்கான முயற்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படாததோடு கல்லூரி கட்டி கொடுப்பதற்கான எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. 
இந்நிலையில் 10.03.2014-இல் சங்கரன்கோவில் தாலுக்கா அலுவலகத்தில் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று பெயரளவில் சொல்லப்பட்டது.ஆனால், எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 
இந்நிலையில், இடைதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதா இன்று (19.03.2014) நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சங்கரன்கோவில் வருவதாக அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக இடைத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத ஜெயலலிதாவை கண்டித்து போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது.
போராட்டத்தை நடத்தக் கூடாது என்றதோடு, மாணவர்கள் மீது காவல்துறையை கொண்டு அடக்குமுறை ஏவப்படும் என்று அமைச்சர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினர் மிரட்டல் விடுத்தார். மேலும், அராஜகமான முறையில் நெல்லை மாவட்டம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மனோ கல்லூரிகள் மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட இதர கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 
இருப்பினும், மாணவர்களின் எதிர்ப்பை பதிவுசெய்திட இன்று (19.03.2014) இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.அசோக்ராஜ் தலைமையில் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டிருந்தனர். சங்கரன்கோவில் தாலுக்கா தலைவர் சிலம்பரசன், கல்லூரி கிளை நிர்வாகிகள் ராஜேஷ், பாலம்மாள், ராகுல்வர்மா, லட்சுமணன், சங்கரன்கோவில் மனோ கல்லூரி மாணவர் பேரவை செயலாளர் அருணா பாரதி உள்ளிட்ட மாணவர்களை காவல்துறை அடக்குமுறையால் கைது செய்தனர். கைது செய்து காவல் வாகனத்திலேயே 2 மணிநேரம் சுற்றி அலைகழித்து பின்னர் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

நியாயமான கோரிக்கைக்காக போராடிய மாணவர்களையும் போராட்டத்தையும் அராஜக முறையில் ஒடுக்கிய காவல்துறையையும், இடைதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

ad

ad