சனி, மார்ச் 15, 2014


நாட்டுக்கு எதிராக எவர் அறிக்கைகளை சமர்ப்பித்து சதி செய்தபோதிலும் பொய் உயிர் வாழாது!

அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பு

நாட்டை அழிவுக்குள்ளாக்க எவராலும் முடியாது என்கிறார் ஜனாதிபதி

உண்மையை உணர்ந்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் எமக்கு ஆதரவாகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். காலி நகரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் உண்மை நிலையை உணர்ந்துள்ள சகல முஸ்லிம் நாடுகளும் சர்வதேச ரீதியில் எமக்கெதிரான நெருக்குதல்களின் போது ஒன்றிணைந்து எமக்காக குரலெழுப்பி ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
காலத்துக்குக் காலம் தமது தற்காலிக வெற்றி இலக்கைக் கருத்திற் கொண்டு சிலர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்டு மீண்டும் இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்கு ஒருபோதும் எவருக்கும் இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை புலிகள் துரத்திவிட்டனர். புத்தளம் போன்ற பகுதிகளில் அவர்கள் அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கிழக்கில் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 125 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கிழக்கில் எனக்கு ஆசீர்வாதம் வழங்கிய இந்து மத குருக்கள் படுகொலை செய்யப்பட்டார்.
அன்று மத வழிபாட்டுக்கான சுதந்திரம் இருக்கவில்லை. பயங்கரவாதிகளுக்கு சமயம் இல்லை. சமய உணர்வென்பது இருக்கவில்லை.
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது நாம் இந்து, முஸ்லிம், பெளத்தம் எனப் பார்ப்பதில்லை. அனைத்து மக்களும் அபிவிருத்தியின் பயனை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தினர் கல்வியை விட வர்த்தகமே தமது பிள்ளைகளுக்கு முக்கியமெனக் கருதினர். நான் அக்காலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் முன் உரையாற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்க வேண்டியதை வலியுறுத்தி வந்துள்ளேன். எவருக்கும் ஏன் அரசாங்கத்துக்குக் கூட ஒருவரின் கல்வியை அபகரிக்க முடியாது. முஸ்லிம் மக்கள் இதுவிடயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அரசாங்கம் கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
முஸ்லிம் மக்களுக்கு நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எமது ‘லக்ஹன்ட’ வானொலியில் தினமும் ஐந்து வேளை முஸ்லிம்களின் பிரார்த்தனைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் முஸ்லிம் அல்லாத நாடுகளில் வேறெந்த நாட்டிலும் இது போன்று முக்கியத்துவமளிப்பதில்லை. 100 ற்கு 75 வீதம் பெளத்தர்கள் வாழும் இந்த நாட்டில் நாம் முஸ்லிம்களுக்கான அந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
எனினும் இப்போது சிலர் எமது நாட்டைப்பற்றி சர்வதேசத்திற்கு நீண்ட அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றனர். 2005 மற்றும் 2006 காலகட்டத்திலும் இவ்வாறு நடந்தது.
நான் ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசலில் ‘பாங்கு’ சொல்வதும் நிறுத்தப்படும் என இப்போது எம்மோடு இருப்பவர்களே அன்று பிரசாரம் செய்தனர். அது முழுமையான பொய்யானதை முஸ்லிம்கள் அறிவர். இதில் உண்மையில்லை.
‘உண்மை வெல்லும்’ என்பதை எப்போதும் நம்புபவன் நான். ‘பொய்களுக்கு ஆயுள் இல்லை’ என்பது எமக்குத் தெரியும். இவற்றுக்கெல்லாம் மேலாக இப்போது அனைவருக்கும் சமய சுதந்திரம் நாட்டில் உள்ளது. உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஏகமனதாக எம்மைப் பாதுகாக்க குரலெழுப்புவது கண்டு நாம் பெருமையடைகின்றோம்.
இதனையும் சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் எம்மைப் பற்றிய உண்மையை அவர்கள் அறிந்துள்ளனர். அன்று பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நாம் செயற்பட்டோம். இப்போதுள்ள தலைவர்கள் பலர் இதுபற்றி அறிந்திராத காலத்திலிருந்தே நாம் அந்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தோம். இன்றுவரை எம்மிடையே சிறந்த நட்பு நிலவுகிறது.
இத்தகைய நாடுகள் நீதிக்காக குரல் கொடுக்கின்றன. எல்லாக் காலங்களிலும் பொய் பிரசாரங்கள் எழுவது இயல்பு. சிலர் அவர்களின் தற்காலிக வெற்றியை இலக்காகக் கொண்டே இவ்வாறு செயற்படுகின்றனர். இந்த நாட்டை மீண்டும் அழிவுக்குள்ளாக்காமல் பாதுகாப்பதில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சிரேஷ்ட அமைச்சர் பியசேன கமகே, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், மனுஷ நாணயக்கார, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் உட்பட முக்கிய இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காலி நகரிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி; பண்டாரநாயக்க வீதி, எட்மன் வீதி ஆகியவற்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததோடு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.