புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014



அழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா 
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.

முதல் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.
அது தொடர்பான செய்தி வந்தபோது, அப்படி இருக்கவே இருக்காது என்று அடித்துப் பேசிய திமுக தலைவர்கள் உண்டு. இப்போது அழகிரியின் இல்லத்துக்கே நேரில் சென்று சந்தித்துள்ளார் வைகோ. இது, கிட்டத்தட்ட வைகோ அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்துவிட்டதைப் போன்ற அதிர்ச்சியில் திமுக தலைமை உள்ளது. ஒரு உறவை புதுப்பித்துக் கொண்ட நிலையில் பல பகைகளையும் வைகோ சந்திக்க வேண்டிய தருணமாக இது மாறியுள்ளது. உள்கட்சி ரீதியாக திமுகவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் ஈ.வி.கே.சம்பத், எம்.ஜி.ஆர்., அதற்குப் பிறகு வைகோ.
இந்த மூவரில் வைகோ மீது மட்டும் திமுக தலைமைக்கு இன்னும் பயம் தீரவில்லை. இப்போது வைகோவை மு.க.அழகிரியே ஆதரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், திமுக தலைமைக்கு மேலும் பயத்தை அதிகரித்துள்ளது.
அண்மையில் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ பேசும்போது, "ராஜபட்ச இங்கு உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக என்னைத் தோற்கடிக்க சதி செய்கிறார்' என்று பேசினார். மேலும், அதேகூட்டத்தில் பேசும்போது, "விருதுநகர் தொகுதியில் என்னைத் தோற்கடிக்க ஸ்டாலின் திட்டம் வகுத்து வருகிறார். இதனைச் செயல்படுத்தும் பொறுப்பை கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஒப்படைத்துள்ளார்' என்று வைகோ கூறினார். இப்போது வைகோவை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பட்டியலில் கருணாநிதியும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதியின் கோபம்: திமுகவில் பணம் பெற்றுக்கொண்டே சீட்டுகள் தரப்படுகின்றன என்று அழகிரி முதலில் குற்றம்சாட்டினார். அதற்கு கருணாநிதி மெüனத்தை மட்டுமே பதிலாகத் தெரிவித்தார். அடுத்து, கருணாநிதியைச் சுற்றி துரோகிகள் இருக்கின்றனர் என்று அழகிரி குற்றம்சாட்டினார். அதற்கும் மெüனமே பதிலாகக் கிடைத்தது. அதேசமயம் திமுகவிலிருந்து குஷ்பு புறக்கணிக்கப்படுகிறார் என்று பத்திரிகைகளில் வந்த செய்திக்கு, உடனே கருணாநிதி மறுப்பு தெரிவித்தார்.
அழகிரியின் குற்றச்சாட்டுகளை சட்டை செய்யவில்லை என்று மறைமுகமாகக் காட்டவே கருணாநிதி குஷ்பு தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்ததாகத் திமுக தரப்பில் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே வைகோவை வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார் அழகிரி என்று மதுரை தரப்பில் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியால் கருணாநிதி மிகுந்த மன உளைச்சலுக்கும், மிகுந்த கோபத்துக்கும் உள்ளாகியுள்ளதாக அக் கட்சியினர் கூறுகின்றனர்.
அதோடு பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று வைகோ அழகிரியிடம் கோரியதும் திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு உறவைப் புதுப்பித்து, ஒரு பகையை வைகோ வாங்கிக் கொண்டதாகவே இது பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் கோபம்: இதற்கிடையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவிடம் இருந்து வைகோவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஏனெனில், "நண்பர் என்று கூறினால், என் கூட கோலிக்குண்டு விளையாடினாரா என்று கேட்பவர் நல்ல தலைவராக இருக்க முடியுமா?, விஜயகாந்த்தை ஒரு தலைவராகவே நான் மதிக்கவில்லை' என்று அழகிரி முதலில் கூறியிருந்தார்.
திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் தற்போது அதே அழகிரியே தேமுதிக அங்கம் வகிக்கும் பாஜகவுக்காகப் பரிந்து பேசி வருகிறார்.
இந்நிலையில், அழகிரியை வைகோ சந்தித்துப் பேசியிருப்பது தேமுதிக தலைமைக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் தொகுதியில் பலமாக உள்ள எங்களை நம்பாமல் அழகிரியை நம்பலாமா? என்று தேமுதிகவினர் வைகோ மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாஜக கூட்டணியை ஆதரிக்குமாறு அழகிரிக்கு வைகோ வேண்டுகோள் விடுத்திருப்பதும் விஜயகாந்த்துக்குக் கோபத்தை வரவழைத்துள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலையில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட அழகிரியின் உறவால் வைகோவுக்கு வரவா அல்லது அந்த உறவின் காரணமாக ஏற்பட்டுள்ள ஸ்டாலின், கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரின் பகையால் செலவா... என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

ad

ad